2014-06-11 16:33:11

அமைதி ஆர்வலர்கள் – 1931ல் நொபெல் அமைதி விருது பெற்றவர்கள்(Jane Addams, Nicholas Murray Butler)


ஜூன்11,2014. ஜேன் ஆடம்ஸ்(Jane Addams), நிக்கோலாஸ் முரே பட்லர்(Nicholas Murray Butler) ஆகிய இருவரும் 1931ம் ஆண்டின் நொபெல் அமைதி விருதைப் பகிர்ந்து கொண்டவர்கள். 1860ம் ஆண்டில் அமெரிக்க ஐக்கிய நாட்டில் பிறந்த ஜேன் ஆடம்ஸ், சமூகப்பணியாளர், மெய்யியலாளர், சமூகவியல் நிபுணர், எழுத்தாளர் பெண்களுக்கு வாக்குரிமை கிடைப்பதற்காக உழைத்த குழுவின் தலைவர், உலக அமைதிக்காக உழைத்தவர். அமெரிக்க ஐக்கிய நாட்டில் தியோடர் ரூஸ்வெல்ட், வுட்ரூ வில்சன் போன்றவர்கள் தங்களை சீர்திருத்தவாதிகள், சமூக ஆர்வலர்கள் எனக் காட்டிக்கொண்ட காலத்தில், ஜேன் ஆடம்ஸ், முற்போக்குச் சகாப்தத்தின் மிக முக்கிய சீர்திருத்தவாதிகளில் ஒருவராகத் திகழ்ந்தார். சிறாரின் தேவைகள், சமூக நலவாழ்வு, உலக அமைதி போன்ற தாய்மார்களைச் சார்ந்த விவகாரங்களில் அமெரிக்க ஐக்கிய நாட்டுக்கு உதவியவர். பெண்கள் தங்கள் சமூகங்களைச் சுத்தம் செய்வதற்குப் பொறுப்பானவர்கள் என்றால், வாழ்வதற்குச் சிறந்த இடங்களை அமைத்துக் கொடுக்கிறவர்கள் என்றால், அவற்றை அவர்கள் திறமையுடன் செய்வதற்கு அவர்களுக்கு ஓட்டுரிமை அவசியம் எனச் சொன்னவர் ஜேன் ஆடம்ஸ். தங்கள் குழுக்களை மேம்படுத்துவதற்கு முன்வந்த நடுத்தரவர்க்கக் குடும்பப் பெண்களுக்கு இவரே எடுத்துக்காட்டாக இருந்தார். அமெரிக்க மெய்யியல் pragmatist பள்ளியின் உறுப்பினராக இவர் ஏற்றுக்கொள்ளப்பட்டார். நொபெல் அமைதி விருதைப் பெற்ற முதல் அமெரிக்கப் பெண் என்ற பெருமையும் ஜேன் ஆடம்ஸ் க்கு உண்டு.
1860ம் ஆண்டு செப்டம்பர் 6ம் தேதி, Illinois மாநிலத்தின் Cedarvilleல் 9 குழந்தைகள் இருந்த குடும்பத்தில் 8வது குழந்தையாகப் பிறந்தார் ஜேன் ஆடம்ஸ். இவரது தந்தை அமெரிக்க செனட் அவை உறுப்பினர் மற்றும் தொழிலதிபர். அமெரிக்க அரசுத் தலைவர் ஆபிரகாம் லிங்கன் உட்பட பல முக்கிய நண்பர்கள் இவரது தந்தைக்கு உண்டு. எனவே ஜேன் ஆடம்ஸ், செல்வாக்கான வாழ்வு வாழ்ந்தவர். 1880களில் உலகில் தனக்கென ஓர் இடத்தைத் தக்க வைத்துக்கொள்வதற்காக நிறையப் போராடினார் ஆடம்ஸ். இளவயதில் நலவாழ்வுப் பிரச்சனை இருந்தது. வட அமெரிக்காவிலும், அமெரிக்க ஐக்கிய நாட்டிலும் குடியிருப்புக்களை அமைக்க வேண்டுமென்பது இவரது இளமைக்கால கனவு. அந்நாட்டில் 1889ம் ஆண்டில் Starr என்பவருடன் இணைந்து Illinois மாநிலத்தின் சிகாகோ Hull Houseல் முதல் குடியிருப்புக்களை அமைத்தார் ஜேன் ஆடம்ஸ். எனவே இவர் முதல் குடியிருப்புக்களை அமைத்தவரில் ஒருவராகவும் ஏற்றுக்கொள்ளப்படுகிறார். அமெரிக்க ஐக்கிய நாட்டில் சமூகப் பணியாளர் அமைப்பை நிறுவியவர் என்றும் இவர் போற்றப்படுகிறார். தேசிய சமூகப்பணி கருத்தரங்கின் முதல் பெண் தலைவராகவும் பணியாற்றிய ஆடம்ஸ், தேசிய கூட்டமைப்பு குடியிருப்புக்களை உருவாக்கியவர். அனைத்துலக பெண்கள் அமைதி மற்றும் சுதந்திரக் கழகத்தின் தலைவராகவும் பணியாற்றிய ஜேன் ஆடம்ஸ், 1935ம் ஆண்டு டிசம்பர் 7ம் தேதி சிகாகோவில் காலமானார். "செயலே, நன்னெறிகளை வெளிப்படுத்துவதற்கான ஒரே ஊடகம்". "பண்பாடு என்பது வாழ்வு முறை, அது, அனைத்து மனிதருக்கும் சம மதிப்பைக் கொடுக்கும் எண்ணமாகும்" என்று சொன்னவர் ஜேன் ஆடம்ஸ். 19ம் நூற்றாண்டின் பிற்பகுதி, 20ம் நூற்றாண்டின் முற்பகுதியில், இவர் தனது பணிகளுக்காக, புகழ்பெற்ற சமுதாய சீர்திருத்தவாதி எனவும், பெண்ணுரிமைவாதி எனவும், அமைதி ஆர்வலர் எனவும் போற்றப்பட்டார்.
1931ம் ஆண்டின் நொபெல் அமைதி விருதை ஜேன் ஆடம்ஸூ டன் பகிர்ந்து கொண்டவர் நிக்கோலாஸ் முரே பட்லர்(Nicholas Murray Butler). இவர் அமெரிக்க ஐக்கிய நாட்டு மெய்யியலாளர், தூதரக அதிகாரி, பேராசிரியர். கொலம்பியா பல்கலைக்கழகத்தின் 12வது தலைவர். அனைத்துலக அமைதிக்காக உழைக்கும் Carnegie Endowment நிறுவனத்தின் தலைவர் இவர். ஏழு அரசுத்தலைவர்களுக்கு ஆலோசகராக இருந்தார். வெளிநாட்டு அரசியல்வாதிகளுடன் நட்பு கொண்டிருந்தார். இவர், 15 வெளிநாட்டு அரசுகளிடமிருந்து கவுரவ விருதுகளையும், 37 கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களிடமிருந்து கவுரவப் பட்டங்களையும் பெற்றுள்ளார். சிறிய நூல்கள், கையேடுகள், அறிக்கைகள் எழுதி வெளியிட்டிருப்பவர்; சிறந்த சொற்பொழிவாளர்; அட்லாண்டிக் பெருங்கடலை குறைந்தது நூறு தடவைகள் கடக்கும் அளவுக்கு, பன்னாட்டு அளவில் பயணம் செய்திருப்பவர்; அமெரிக்க குடியரசு கட்சியின் தேசிய தலைவர்; அமைதி ஆர்வலர்; உலக நாடுகள் சார்ந்த எண்ணங்களைக் கொண்டிருந்தவர்; இவரை இவரது நல்ல நண்பரான தியோடர் ரூஸ்வெல்ட், நிக்கோலாஸ் மிராக்குலஸ் பட்லர் என அழைத்தார். நிக்கோலாஸ் முரே பட்லர் எந்த அளவுக்கு புகழ் பெற்றிருந்தார் என்றால், New York Times இதழ், இவர் நாட்டுக்குத் தெரிவித்த கிறிஸ்மஸ் வாழ்த்துக்களை இன்றும் ஒவ்வோர் ஆண்டும் பிரசுரிக்கின்றது. 1862ம் ஆண்டு ஏப்ரல் 2ம் தேதி பிறந்த பட்லர், 1947ம் ஆண்டு டிசம்பர் 7ம் தேதி காலமானார்.
நிக்கோலாஸ் பட்லர் தொடக்க காலம்முதல், ஒரு திறமையான கல்வி நிர்வாகியாகத் தன்னை வெளிப்படுத்தினார். இவரது தலைமைத்துவத்தின்கீழ் கொலம்பியா பல்கலைக்கழகம் வியத்தகு வளர்ச்சியைக் கண்டது. மாணவர்களின் எண்ணிக்கை நான்காயிரத்திலிருந்து 34 ஆயிரமாக மாறியது. பேராசிரியர்களின் ஊதியமும் கூடியது. இதனால் உலகின் முன்னணி வல்லுனர்கள் இந்தப் பல்கலைக்கழகத்தில் பணியாற்ற முன்வந்தனர். கல்வித்துறையில் சாதனைகள் படைத்ததுபோல் அரசியல் வாழ்விலும் நுழைந்து திறம்பட பணியாற்றினார். பன்னாட்டு ஒத்துழைப்பின்மூலம், கல்வி உலகையும், அரசியல் உலகையும் இணைத்து உலகில் அமைதி ஏற்பட உதவியுள்ளார். நொபெல் அமைதி ஆர்வலரான d'Estournelles de Constant என்பவரால் நிறுவப்பட்ட அனைத்துலக ஒப்புரவு அமைப்பின் அமெரிக்க கிளையின் தலைவராகவும் பட்லர் செயல்பட்டார். அனைத்துலக அமைதிக்கான Carnegie Endowment நிறுவனத்துடன் இவர் 35 ஆண்டுகள் கொண்டிருந்த உறவு பலனுள்ள ஒன்றாகும். Andrew Carnegie அவர்கள், இந்நிறுவனத்தின் பெயரில் 1910ம் ஆண்டில் ஒரு கோடி டாலர் அறக்கட்டளை ஒன்றை உருவாக்குவதற்குக் காரணமானவர் பட்லர். இந்நிறுவனத்தின் ஐரோப்பிய கிளை பாரிசில் தொடங்கப்பட்டது. இவர் 1945ம் ஆண்டில், தனது 83வது வயதில் கண்பார்வையை முழுவதும் இழந்தார். இதற்கு ஈராண்டுகளுக்குப் பின்னர் இயற்கை எய்தினார் பட்லர்.







All the contents on this site are copyrighted ©.