2014-06-11 15:52:30

Sant'Egidio என்ற பிறரன்பு குழுமத்தால் பராமரிக்கப்படும் வறியோரை, திருத்தந்தை பிரான்சிஸ் சந்திக்கிறார்


ஜூன்,11,2014. ஜூன் 15, வருகிற ஞாயிறு மாலை, உரோம் நகரில் பணியாற்றிவரும் Sant'Egidio என்ற பிறரன்பு குழுமத்தால் பராமரிக்கப்படும் வறியோரை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சந்திப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
உரோம் நகரின் Trastevere பகுதியில் அமைந்துள்ள சதுக்கத்திற்கு மாலை 5 மணிக்குச் சென்றடையும் திருத்தந்தை, அங்குள்ள அன்னை மரியா பசிலிக்காவில் பாதுகாக்கப்பட்டுவரும் மிகப் பழமை வாய்ந்த அன்னை மரியா திரு உருவத்திற்கு முன்பு செபிப்பார்.
பின்னர் சதுக்கத்தில் கூடியுள்ள மக்களைச் சந்தித்துவிட்டு, Sant'Egidio குழுமத்தால் நடத்தப்படும் மையத்தில், நிர்வாகிகளுடனும், வறியோருடனும் சந்திப்புக்கள் மேற்கொள்வார் திருத்தந்தை.
மேலும், ஜூன் 21, அடுத்த வாரம் சனிக்கிழமையன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்தாலியின் Calabria பகுதியில் அமைந்துள்ள Cassano all'Jonio மறைமாவட்டத்தில் மேய்ப்புப்பணி பயணம் மேற்கொள்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சனிக்கிழமை காலை 7.30 மணிக்கு வத்திக்கானைவிட்டு ஹெலிகாப்டரில் புறப்படும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அன்றைய நாள் முழுவதும் அம்மறைமாவட்டத்தின் பல்வேறு குழுவினரைச் சந்தித்து, திருப்பலியாற்றிய பின், மாலை, 7 மணியளவில் வத்திக்கான் வந்து சேருவார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி/VIS








All the contents on this site are copyrighted ©.