2014-06-10 15:03:15

விவிலியத்
தேடல் மினா நாணய உவமை : பகுதி - 3


RealAudioMP3 லூக்கா நற்செய்தி 19ம் பிரிவில் கூறப்பட்டுள்ள 'மினா நாணய உவமை'யில் இருவாரங்களாக நம் தேடல் பயணத்தை மேற்கொண்டோம். இருவாரங்களுக்கு முன், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மேற்கொண்ட புனித பூமி பயணத்தால், நமது தேடல் பயணத்தைத் தள்ளிவைத்தோம். இன்று 3வது வாரமாக 'மினா நாணய உவமை'யில் நமது பயணம் தொடர்கிறது.
இந்த உவமை கூறப்பட்டதன் பின்னணியை முதல் இரு பகுதிகளில் சிந்தித்தோம். இயேசு எருசலேமை நெருங்கி வந்துகொண்டிருந்ததாலும், சூழ்ந்திருந்தவர்கள் இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது என்று எண்ணியதாலும் இயேசு இந்த உவமையைச் சொன்னார் என்று சிந்தித்தோம். அந்நேரம், இந்தியாவில் தேர்தல் முடிவுகள் வெளியாகி, ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால், அத்துடன் இணைத்து, நம் தலைவர்கள், அவர்கள் கொணரவேண்டிய மாற்றங்கள் குறித்தும் நம் தேடலை மேற்கொண்டோம்.

தன்னைச் சுற்றி திரண்டிருந்த மக்கள், தன்னை ஒரு மன்னனாகக் கற்பனை செய்து பார்ப்பதையும், தான் எருசலேமில் நுழைவதை, ஒரு மன்னனின் வருகையாக அவர்கள் காண விழைவதையும் இயேசு உணர்ந்தார். அவர்களிடம் எழுந்த அளவற்ற, ஆதாரமற்ற ஆர்வத்திற்கு ஒரு சவாலாக அவர் 'மினா நாணய உவமை'யைக் கூறி, அவர்களை விழித்தெழச் செய்தார். தான் எருசலேமில் நுழைவது ஆட்சியைக் கைப்பற்ற அல்ல என்பதைத் தெளிவாக்கவும், இறையாட்சி என்பது ஏதோ ஒரு நாளில் வந்துவிடும் உடனடி மாற்றம் அல்ல என்பதைக் கூறவும், அந்த ஆட்சியில் பங்கேற்க ஒரு சில தேவைகள் உள்ளன என்பதைத் தெளிவுபடுத்தவும், இயேசு இந்த உவமையைச் சொன்னார் என்று எண்ணிப் பார்க்கிறேன்.

லூக்கா நற்செய்தி 19ம் பிரிவில், 11 முதல் 27 முடிய உள்ள இறைச் சொற்றொடர்களில் காணப்படும் இவ்வுவமையை மூன்று பகுதிகளாகப் பார்க்கலாம்.

என்று மூன்று பகுதிகளாக இவ்வுவமையைக் காணலாம்.

'மினா நாணய உவமை'யில் கூறப்பட்டுள்ள உயர் குடிமகனுக்கும், இயேசுவின் காலத்தில் நிகழ்ந்த ஒரு வரலாற்று நிகழ்வுக்கும் நெருங்கியத் தொடர்பு உண்டு என்பது, விவிலிய ஆய்வாளர்களின் கருத்து. உயர் குடிமகனை நாயகனாக வைத்து இயேசு இந்த உவமையைக் கூறியிருந்தாலும், இந்த உவமையில் நமக்குப் பாடங்கள் சொல்லித் தரப்போவது, பணியாளர்கள். எனவே, இந்தப் பணியாளர்களை மனதில் கொண்டு நாம் இந்த உவமையின் முதல் பகுதியில் நம் தேடலைத் துவங்குவோம். இப்பகுதியில் இயேசு கூறுவது இதுதான்:

லூக்கா நற்செய்தி 19: 12-14
உயர் குடிமகன் ஒருவர் ஆட்சியுரிமை பெற்றுவரத் தொலை நாட்டிற்குப் போகப் புறப்பட்டார். அப்போது அவர் தம் பணியாளர்கள் பத்துப் பேரை அழைத்து, பத்து மினாக்களை அவர்களிடம் கொடுத்து அவர்களை நோக்கி, 'நான் வரும்வரை இவற்றை வைத்து வாணிகம் செய்யுங்கள்' என்று சொன்னார். அவருடைய குடிமக்களோ, அவரை வெறுத்தனர். எனவே, 'இவர் அரசராக இருப்பது எங்களுக்கு விருப்பமில்லை' என்று சொல்லித் தூது அனுப்பினர்.

இப்பகுதியை நான் வாசித்தபோது என் கவனத்தை ஈர்த்த முதல் வரிகள் இவை: "அவர் தம் பணியாளர்கள் பத்துப் பேரை அழைத்து, பத்து மினாக்களை அவர்களிடம் கொடுத்து அவர்களை நோக்கி, 'நான் வரும்வரை இவற்றை வைத்து வாணிகம் செய்யுங்கள்' என்று சொன்னார்...." (லூக்கா 19:13)
உயர் குடிமகன் தன் பணியாளர்கள் பத்துபேரை ஒரு சேர அழைத்து, அவர்களிடம் பத்து மினாக்களைக் கொடுத்தார். அவர்களை ஒவ்வொருவராக அழைத்து, அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மினா கொடுத்தார் என்ற பாணியில் பொதுவாக இந்த உவமையைச் சிந்தித்து வந்திருக்கிறோம். ஆனால், இயேசுவின் வார்த்தைகள் அவ்விதம் அமையவில்லை. அவர் பத்துபேரையும் ஒரு சேர அழைத்து அவர்களிடம் பத்து மினாக்களைக் கொடுத்து, "நான் வரும்வரை இவற்றை வைத்து வாணிகம் செய்யுங்கள்" என்று சொன்னதாக இயேசு இந்தக் காட்சியை அமைத்துள்ளார்.

மத்தேயு நற்செய்தி, 25ம் பிரிவில் கூறப்பட்டுள்ள 'தாலந்து உவமை'யோடு ஒப்பிட்டால், இந்த வார்த்தைகளில் பொதிந்திருக்கும் ஒரு சிறப்பை நாம் உணர முடியும். மத்தேயு நற்செய்தியில் நாம் வாசிப்பது இதுதான்:
மத்தேயு நற்செய்தி 25: 14-15
விண்ணரசைப் பின்வரும் நிகழ்ச்சி வாயிலாகவும் விளக்கலாம்: நெடும் பயணம் செல்லவிருந்த ஒருவர் தம் பணியாளர்களை அழைத்து அவர்களிடம் தம் உடைமைகளை ஒப்படைத்தார். அவரவர் திறமைக்கு ஏற்ப ஒருவருக்கு ஐந்து தாலந்தும் வேறொருவருக்கு இரண்டு தாலந்தும், இன்னொருவருக்கு ஒரு தாலந்தும் கொடுத்துவிட்டு நெடும் பயணம் மேற்கொண்டார்.

ஒவ்வொருவருக்கும் அவரவர் திறமைக்கு ஏற்ப 5,2,1 என்ற வரிசையில் தாலந்து வழங்கப்பட்டன என்று நற்செய்தியாளர் மத்தேயு கூறுகிறார். நற்செய்தியாளர் லூக்காவின் உவமையில் இவ்விதப் பாகுபாடுகள் ஏதும் இல்லாமல், பத்துபேரையும் அழைத்து பத்து மினாக்களை உயர் குடிமகன் கொடுத்தார் என்றே கூறப்பட்டுள்ளது.

ஒரு 'மினா' என்பது நூறு ‘திராக்மா’ மதிப்புள்ள நாணயம். ஒரு ‘திராக்மா’ என்பது ஒரு தொழிலாளரின் ஒரு நாள் கூலிக்கு இணையான கிரேக்க வெள்ளி நாணயம். எனவே, தலைவன், தன் பத்து பணியாளர்களை அழைத்து, 1000 நாட்களுக்கு உரிய ஊதியத்தை ஒட்டுமொத்தமாக அவர்களிடம் கொடுத்து, அதைக் கொண்டு வாணிகம் செய்யச் சொன்னார்.

இந்த வரிகள் எனக்குள் ஒரு பொதுவுடைமைக் கற்பனையை உருவாக்கின. அந்த பத்துப் பணியாளர்களும் நினைத்திருந்தால், அந்த 10 மினாக்களை ஒரு சேர முதலீடு செய்து, அதன் பலனை அனைவரும் சமமாகப் பகிர்ந்திருக்கலாம். அவ்விதம் அவர்கள் நடந்திருந்தால், சமத்துவம், பொதுவுடைமை, கூட்டுறவு போன்ற உயர்ந்த கோட்பாடுகளுக்கு அவர்கள் இலக்கணமாக அமைந்திருப்பர்.
ஆனால், நடந்தது என்ன? அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட 10 மினாக்களை ஆளுக்கொரு 'மினா' என்று பிரித்துக் கொண்டனர். அதுவரை அந்த உயர் குடிமகன் இல்லத்தில் இணைந்து பணியாற்றியவர்கள், பணம் என்று வந்ததும், அவரவர் வழியே பிரிந்து சென்றனர். ஒவ்வொருவரும் தங்கள் சுயநலனுக்கு முதலிடம் கொடுத்தனர். யாரால் அதிகம் சம்பாதிக்க முடியும் என்ற போட்டிகள் துவங்கின. தனியுடைமை, சுயநலம், போட்டி என்ற கோட்பாடுகளுக்கு அவர்கள் எடுத்துக்காட்டாக அமைந்துவிட்டனர்.

தனியுடைமை, முதலாளித்துவம் என்ற மேற்கத்திய கொள்கைகளை இயேசு ஆதரித்தாரோ என்று எண்ணும் அளவுக்கு, இவ்வுவமைக்கு, பல அர்த்தங்கள் கற்பிக்கப்பட்டுள்ளன. பொதுவுடைமை, தனியுடைமை என்ற கருத்துக்களைச் சொல்லித்தர இயேசு இந்த உவமையைச் சொல்லவில்லை என்பதை நாம் அறிவோம். பொதுவாக, செல்வத்தைக் குறித்தும், செல்வம் சேர்ப்பது குறித்தும் இயேசுவின் எண்ணங்களை நாம் அறிவோம். அதிலும், குறிப்பாக, லூக்கா நற்செய்தி வழியே இந்த எண்ணங்கள் மிகவும் வலிமையாகவே வெளிப்பட்டுள்ளன. இத்தகைய பின்னணியில், இயேசு இந்த உவமை வழியே சொல்லித்தர விழையும் முக்கியமான பாடம், இவ்வுவமையின் இரண்டாம் பகுதியில் இடம் பெறுகிறது.

இந்த உவமையின் இரண்டாம் பகுதியில், உயர் குடிமகன் திரும்பி வந்ததும் பணியாளர்களிடம் தான் விட்டுச் சென்ற பொறுப்பிற்குக் கணக்கு கேட்டார் என்பதுதான் இவ்வுவமையின் கருப்பகுதி. பல ஆழமான உண்மைகளைக் கூறும் இந்தப் பகுதியில் நம் தேடலை அடுத்த வாரம் மேற்கொள்வோம்.








All the contents on this site are copyrighted ©.