2014-06-10 15:41:15

பாகிஸ்தானில் பதட்டமும் வன்முறையும் முடிவுக்கு வர கிறிஸ்தவர்கள் செபம்


ஜூன்,10,2014. பாகிஸ்தானின் தொழிற்சாலை நகரம் என அழைக்கப்படும் கராச்சியில் பதட்டமும் வன்முறையும் நிறைந்த சூழல் உருவாகியுள்ளவேளை, அந்நாட்டில் அமைதி நிலவுவதற்காகச் செபித்து வருகின்றனர் அந்நாட்டுக் கிறிஸ்தவர்கள்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு கராச்சி விமான நிலையத்தில் ஆயுதம் ஏந்திய பயங்கரவாதக் குழுக்கள் நடத்திய தாக்குதலில் குறைந்தது 24 பேர் இறந்தனர் மற்றும் 20 பேர் காயமடைந்தனர்.
பாதுகாப்பு படையினர், தீவிரவாதிகளின் இத்தாக்குதலை முறியடித்து விமான நிலையத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ள இந்நேரத்தில், இச்செவ்வாயன்று கராச்சி விமான நிலையத்துக்கு அருகில் மீண்டும் ஒரு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் அதிகமான விமானச் சேவைகள் இடம்பெறும் கராச்சி விமான நிலையத்தின்மீது இச்செவ்வாயன்று நடத்தப்பட்ட தாக்குதலுக்கு, தாங்களே பொறுப்பு என்று தாலிபான்கள் கூறியுள்ளனர் என ஊடகச் செய்திகள் கூறுகின்றன.
அற்புதங்கள் செய்யும் புனித பதுவை அந்தோணியாரின் விழாவுக்கென நவநாள் பக்திமுயற்சிகளை மேற்கொண்டுவரும் கராச்சி கத்தோலிக்கர், இப்புனிதரிடம் பாகிஸ்தானின் அமைதிக்காகச் செபித்து வருகின்றனர் என்று, கராச்சி உயர்மறைமாவட்ட இளையோர் பணிக்குழு பொறுப்பாளர் அருள்பணி மாரியோ ரொட்ரிக்கெஸ் தெரிவித்தார்.

ஆதாரம் : Fides







All the contents on this site are copyrighted ©.