2014-06-10 15:43:15

உலகப் பாரம்பரியச் சின்னமாகிறது கிரேட் இமாலயன் தேசியப் பூங்கா


ஜூன்,10,2014. யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக மேற்கு இமயமலையில் உள்ள கிரேட் இமாலயன் தேசியப் பூங்கா அறிவிக்கப்படும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
கத்தார் தலைநகர் தோஹாவில் இம்மாதம் 15ம் தேதி முதல் 25ம் தேதி வரை யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரிய சின்னங்களைத் தேர்வு செய்யும் கூட்டம் நடக்கவுள்ளது.
யுனெஸ்கோவின் இயற்கை சார்ந்த தேசியப் பாரம்பரிய சின்னங்களுக்கான விதிமுறைப் பட்டியல் 10-ன்படி “நீடித்த இயற்கை மற்றும் உயிரியில் பல்வகை (Bio - diversity) அடர்த்தி மிகுந்த பகுதிகள் அறிவியல் ரீதியாக பாதுகாக்கப்பட வேண்டும்”என்கிற அடிப்படையில் கிரேட் இமாலயன் தேசியப் பூங்கா உலகப் பாரம்பரியச் சின்னமாக தேர்வு செய்யப்படவிருக்கிறது.
மேலும், இக்கூட்டத்தில், போட்ஸ்வானா நாட்டின் 'ஒகேவாங்கோ டெல்டா, பிலிப்பைன்ஸின் மெட் ஹமிகியூட்டன் வன விலங்குகள் சரணாலயம், ஜெர்மனி மற்றும் நெதர்லாந்தின் வேடன் கடல்(wadden sea) உட்பட ஏறக்குறைய 10 வகை இயற்கைச் சார்ந்த இடங்கள் உலகப் பாரம்பரியச் சின்னங்களாக அறிவிக்கப்பட இருக்கின்றன.
இவை தவிர குஜராத் பாட்டன் டவுனில் இருக்கும் ராணி கிவ் வாவ் பகுதி (Rani-ki-vav- he Queen's Stepwell) கலாச்சாரம் சார்ந்த உலகப் பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட இருக்கிறது.
இந்தியாவில் மேற்குத் தொடர்ச்சி மலை, சுந்தரவனக் காடுகள், அஸ்ஸாமின் காசிரங்கா தேசியப் பூங்கா, மானாஸ் வன விலங்குகள் சரணாலயம், உத்தர கண்ட்டின் நந்தாதேவி மலர்கள் பள்ளத்தாக்கு தேசியப் பூங்கா ஆகியவை யுனெஸ்கோவின் இயற்கை பாரம்பரியச் சின்னங் களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
யுனெஸ்கோவின் பாரம்பரியச் சின்னங்களுக்கான தேர்வு கமிட்டியின் உறுப்பினர்களாக இந்தியா, ஜெர்மனி, ஜப்பான், மலேசியா, பின்லாந்து, பிலிப்பைன்ஸ், அல்ஜீரியா, கொலம்பியா, கத்தார், வியட்நாம் உட்பட 21 நாடுகளின் பிரதிநிதிகள் இருக்கின்றனர்.

ஆதாரம் : தி இந்து







All the contents on this site are copyrighted ©.