2014-06-07 14:21:27

புனிதரும் மனிதரே - மடகாஸ்கர் மண்ணில் மறைசாட்சி புனித Jacques Berthieu


1880களில், மடகாஸ்கர் தீவில், பிரெஞ்ச் காலனிய ஆதிக்கத்தை எதிர்த்து புரட்சிக் குழுக்கள் உருவாயின. 1896ம் ஆண்டு, ஒருநாள், இப்புரட்சிக் குழுக்களில் ஒன்று, அத்தீவில் பணியாற்றிவந்த இயேசு சபை அருள்பணியாளர் Jacques Berthieu அவர்களைக் கடத்திச்சென்றது. 1875ம் ஆண்டு முதல் அத்தீவில் பணியாற்றிவந்த அருள்பணியாளர் Jacques அவர்கள், தன்னைச் சூழ்ந்து உருவான ஆபத்துக்களை நன்கு அறிந்திருந்தார். அத்தீவைவிட்டு, மீண்டும் பிரெஞ்ச் நாட்டுக்குத் திரும்ப அவருக்குக் கிடைத்த வாய்ப்புக்களை மறுத்துவிட்டு, அவர் அத்தீவிலேயே தொடர்ந்து பணியாற்றிவந்தார்.
1896ம் ஆண்டு ஜூன் 8ம் தேதி, அருள்பணியாளர் Jacques அவர்கள், புரட்சிக் குழுவின் தலைவர் முன்பு நிறுத்தப்பட்டார். அருள்பணியாளரின் திறமைகளை நன்கு அறிந்திருந்த அத்தலைவர், அவருக்கு நல்லதொரு பதவியை அளிப்பதாகக் கூறியபோது, அருள்பணியாளர் Jacques அவர்கள், அதை, பணிவாக மறுத்துவிட்டார்.
பின்னர், அத்தலைவர், அருள்பணியாளர் Jacques அவர்கள், தன் மத நம்பிக்கையைக் கைவிட்டால் உயிர் பிழைக்கலாம் என்று சொன்னபோது, அருள்பணியாளர் அவரிடம், "மகனே, இறை நம்பிக்கையைக் கைவிடுவதற்குப் பதில், உயிரைக் கைவிட நான் தயார்!" என்று கூறினார். உடனே, சூழ இருந்தவர்கள் அவரைக் கழிகளால் பயங்கரமாகத் தாக்கினர். இறுதியில் அவரைச் சுட்டுக் கொன்றனர்.
1873ம் ஆண்டு தன் 35வது வயதில் இயேசு சபையில் இணைந்த Jacques அவர்கள், 1875ம் ஆண்டு முதல், மடகாஸ்கர் தீவில் தன் பணியை அர்ப்பணித்தார். 20 ஆண்டுகளுக்கு மேலாக அங்கு பணியாற்றிய அருள்பணியாளர் Jacques அவர்கள், தன் 58வது வயதில் கொல்லப்பட்டார். அவரது உடலை அருகிலிருந்த ஒரு ஆற்றில் வீசி எறிந்தனர் அந்தப் புரட்சி குழுவினர். அன்று முதல், அந்த ஆற்றின் தண்ணீர் அற்புதச் சக்திகள் வாய்ந்ததாக மாறியதென்று கூறப்படுகிறது.
1965ம் ஆண்டு, திருத்தந்தை 6ம் பால் அவர்கள், இவரை முத்திப்பேறு பெற்றவராக அறிவித்தார். 2012ம் ஆண்டு, முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், அருள் பணியாளர் Jacques Berthieu அவர்களை, புனிதராக உயர்த்தினார். புனித Jacques Berthieu அவர்களின் திருநாள், ஜூன் 8ம் தேதி சிறப்பிக்கப்படுகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.