2014-06-06 15:18:39

மரணப் படுக்கையிலும் எழுத்தாளராக - வணக்கத்துக்குரிய பீட் (Venerable Bede)


"நான் இங்கிலாந்தில் Wearmouth என்ற பகுதியில் பிறந்தவன். எனக்கு 7 வயதானபோது, தவமுனிவர் பெனடிக்ட் அவர்களின் கண்காணிப்பில், துறவு மடத்தில் சேர்க்கப்பட்டேன். அன்று முதல் விவிலியத்தைப் படிப்பதில் என் வாழ்வு முழுவதையும் செலவிட்டேன். 19வது வயதில் தியாக்கோனாகவும், 30வது வயதில் குருவாகவும் நான் திருநிலைப்படுத்தப்பட்டேன்."
இவ்வாறு தன் வாழ்க்கைக் குறிப்புகளை எழுதியவர் வணக்கத்துக்குரிய பீட் (Venerable Bede). இவர் பொதுவாக புனிதர் என்றே அழைக்கப்படுகிறார். இவர் 673ம் ஆண்டில் பிறந்தவர். தன் வாழ்வின் பெரும்பகுதியைத் துறவு மடத்தில் செலவிட்ட இவர், விவிலிய விளக்கங்களையும், திருஅவையின் முதுபெரும் தந்தையர்களின் எண்ணங்களையும் புத்தகங்களாக வடித்தவர். துறவு மடத்தின் தலைமைத் துறவியாக இவர் தெரிவு செய்யப்பட்டபோதும், அப்பொறுப்பை ஏற்க மறுத்து, எழுதுவதிலேயே தன் வாழ்வைச் செலவிட்டார். தன் 30வது வயதில் நூல்களை எழுதத் துவங்கியவர், வாழ்வின் இறுதி வரை எழுதினார்.
இறையியல், விவிலியம், அறிவியல், வரலாறு என்று பலத் துறைகளில் 60க்கும் மேற்பட்ட நூல்களை இவர் எழுதியுள்ளார் என்று சொல்லப்படுகிறது. இவர் மரணப்படுக்கையில் இருந்தபோதும், தன் எண்ணங்களை வாய்மொழியாகச் சொல்ல, வேறொருவர் அவற்றைப் பதிவு செய்தார் என்றும் சொல்லப்படுகிறது. இவர் எழுதிய நூல்களிலேயே, "ஆங்கில மக்களின் திருஅவை வரலாறு" என்ற நூல், மிகவும் புகழ்பெற்றது.
காலத்தைக் குறிப்பதற்கு நாம் பயன்படுத்தும் கி.மு., கி.பி. என்ற காலக் குறியீடுகள், ஆங்கிலத்தில், B.C. (Before Christ), மற்றும் A.D. (Anno Domini), அதாவது, 'ஆண்டவரின் ஆண்டு' என்று குறிக்கப்படுகின்றன. இக்குறியீடுகளை, Dionysius என்பவர் கண்டுபிடித்தார் எனினும், வணக்கத்திற்குரிய பீட் அவர்களின் நூல்கள் வழியே 'ஆண்டவரின் ஆண்டு' என்ற காலக்குறியீடு மக்கள் மத்தியில் புகழ்பெற்றது.
735ம் ஆண்டு மே மாதம் 25 அல்லது 26ம் தேதி, கிறிஸ்துவின் விண்ணேற்றப் பெருவிழாவன்று புனித பீட் அவர்கள் இறைவனடி சேர்ந்தார். 1899ம் ஆண்டு திருத்தந்தை 13ம் லியோ இவரைப் புனிதராகவும், திருச்சபையின் மறைவல்லுனராகவும் அறிவித்தார். இப்புனிதரின் திருவிழா மே மாதம் 25ம் தேதி கொண்டாடப்படுகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.