2014-06-06 15:41:41

திருத்தந்தை பிரான்சிஸ் : கிறிஸ்துவே முதலில் அன்பு செய்யப்பட வேண்டியவர் என்பதை அருள்பணியாளர்கள் ஒருபோதும் மறக்கக் கூடாது


ஜூன்,06,2014. அருள்பணியாளர்கள் முதலில் மேய்ப்புப்பணியாளர்கள், இரண்டாவதாக, அவர்கள் வல்லுனர்கள் என்றும், கிறிஸ்துவே முதலில் அன்பு செய்யப்பட வேண்டியவர் என்பதை அருள்பணியாளர்கள் ஒருபோதும் மறக்கக் கூடாது என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
உங்களின் முதல் அன்பு எப்படி இருக்கின்றது? முதல் நாள்போன்று இன்றும் தொடர்ந்து அந்த அன்பு நீடிக்கிறதா? உங்கள் அன்பில் அவர்கள் மகிழ்வாக இருக்கின்றார்களா? அல்லது அவர்கள் உங்களைப் புறக்கணிக்கின்றார்களா? என்பன போன்று எல்லா இடங்களிலும் கேட்கப்படும் இந்தக் கேள்விகளை, தம்பதியர் போல் இல்லாமல், அருள்பணியாளர்களாக, ஆயர்களாக நாம் இயேசுவின் முன்னால் கேட்க வேண்டும் என்றும் கூறினார் திருத்தந்தை.
யோவானின் மகன் சீமோனே! நீ என்னை அன்பு செய்கிறாயா? என, பேதுருவிடம் ஒருநாள் இயேசு கேட்டது போல நம்மிடமும் இயேசு கேட்பார் என்று, வத்திக்கான் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் இவ்வெள்ளி காலை நிகழ்த்திய திருப்பலி மறையுரையில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
யோவானின் மகன் சீமோனே! நீ என்னை அன்பு செய்கிறாயா? என, பேதுருவிடம் இயேசு மூன்றுமுறை கேட்ட நற்செய்திப் பகுதியை மையமாக வைத்து மறையுரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்தக் கேள்வியைக் கேட்ட பின்னர் இயேசு பேதுருவிடம், என்னைப் பின்தொடர் என்று கூறியதை வைத்தும் விளக்கினார்.
நாம் பாதையை தொலைத்தால் அல்லது அன்புக்கு பதிலளிப்பது குறித்து தெரியாமல் இருந்தால், மேய்ப்பர்களாக எப்படி பதிலளிப்பது என்பதை நாம் அறியாமல் இருப்போம், நோயிலும், வாழ்வின் இக்கட்டான நேரங்களிலும் ஆண்டவர் கைவிடமாட்டார் என்ற உறுதியைக் கொண்டிருக்கமாட்டோம் என்றுரைத்த திருத்தந்தை, இயேசுவின் அடிச்சுவடுகளை நாம் பின்தொடர வேண்டும் என்றும் கூறினார்.
அருள்பணியாளர்களும், ஆயர்களும் தங்களது முதல் அன்பைக் கண்டுகொள்ளவும், அதை நினைவில் கொள்ளவும் ஆண்டவர் அருள்பொழிவாராக என, தனது மறையுரையை நிறைவு செய்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.