2014-06-06 15:41:52

திருத்தந்தை பிரான்சிஸ், ஜப்பான் பிரதமர் சந்திப்பு


ஜூன்,06,2014. ஜப்பான் பிரதமர் Shinzō Abe அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை இவ்வெள்ளியன்று வத்திக்கானில் சந்தித்தார்.
இச்சந்திப்புக்குப் பின்னர், திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின், திருப்பீட நாடுகளுக்கிடையேயான உறவுகளின் செயலர் பேராயர் தொமினிக் மம்பர்த்தி ஆகியோரையும் சந்தித்தார் ஜப்பான் பிரதமர் Shinzō Abe.
ஜப்பானுக்கும், திருப்பீடத்துக்கும் இடையே நிலவும் நல்உறவுகள், ஜப்பானில் கல்வி, நலவாழ்வு, சமூக வாழ்வு ஆகியவற்றில் தலத்திருஅவைக்கும், அரசுக்கும் இடையே நிலவும் ஒத்துழைப்பு ஆகியவை இச்சந்திப்புக்களில் இடம்பெற்றன என, திருப்பீட பத்திரிகை அலுவலகம் கூறியது.
மேலும், ஆசியக் கண்டத்தில் அமைதியையும், நிலையான தன்மையையும் ஊக்குவித்தல், நாடுகளின் வளர்ச்சிக்கு, குறிப்பாக ஆப்ரிக்காவின் வளர்ச்சிக்கு ஜப்பான் வழங்கிவரும் ஒத்துழைப்பு, சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கும் அணு ஆயுதங்களைக் களைவதற்கும் ஜப்பான் எடுத்துவரும் முயற்சிகள் போன்ற பன்னாட்டு விவகாரங்களும் இச்சந்திப்புக்களில் இடம்பெற்றன என, திருப்பீட பத்திரிகை அலுவலகம் மேலும் கூறியது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.