2014-06-06 15:42:48

இஞ்ஞாயிறன்று, அமைதிக்காக, வத்திக்கானில் மேற்கொள்ளப்படும் செபமுயற்சி நல்ல பலன்களை அளிக்க, அர்ஜென்டீனா நாட்டில் பல்சமய சிறப்பு செப வழிபாடுகள்


ஜூன்,06,2014. ஜூன் 8, இஞ்ஞாயிறன்று, பாலஸ்தீனா அரசுத் தலைவர் மஹ்முத் அப்பாஸ் அவர்களும், இஸ்ரேல் அரசுத்தலைவர் ஷிமோன் பெரெஸ் அவர்களும், வத்திக்கானில் சந்தித்து, அமைதிக்காகச் செபிக்கும் வேளையில், இம்முயற்சி நல்ல பலன்களை அளிக்கவேண்டும் என்று அர்ஜென்டீனா நாட்டில் பல்சமய சிறப்பு செப வழிபாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன.
"அமைதியைக் கட்டியெழுப்புவது கடினம்தான்; ஆனால், அமைதியின்றி வாழ்வது பெரும் கொடுமை" என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் அண்மையப் புனிதப் பூமிப் பயணத்தில் கூறிய வார்த்தைகளை உந்துதலாகக் கொண்டு, அர்ஜென்டீனா நாட்டின் பல்சமய அமைப்புக்கள் ஒன்றிணைந்து, "un minuto por la paz", அதாவது, "அமைதிக்காக ஒரு நிமிடம்" என்ற செப வழிபாட்டு முயற்சியில் ஈடுபட உள்ளனர்.
அமைதி மற்றும் நீதிக்கான அமைப்பு முன்மொழிந்த இந்த ஏற்பாட்டிற்கு, அர்ஜென்டீனா நாட்டின் பல்சமய அமைப்புக்கள் ஆர்வத்துடன் ஆதரவு தெரிவித்துள்ளதாக, Zenit கத்தோலிக்கச் செய்தி கூறுகிறது.
இதற்கிடையே, இத்தாலியில் உள்ள அனைத்து கத்தோலிக்க ஆலயங்களிலும், ஜூன் 7, இச்சனிக்கிழமை மாலை, அமைதிக்கான செப வழிபாடுகளை மேற்கொள்ள, இத்தாலிய ஆயர் பேரவைத் தலைவரான, கர்தினால் Angelo Bagnasco அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார் என்றும் Zenit செய்தி மேலும் கூறுகிறது.

ஆதாரம் : Zenit







All the contents on this site are copyrighted ©.