2014-06-05 16:52:46

திருத்தந்தை பிரான்சிஸ் : திருஅவையில் ஒன்றிப்பை உருவாக்குபவர் தூய ஆவியார் மட்டுமே


ஜூன்,05,2014. திருஅவையில் ஒன்றிப்பும், பன்மையில் ஒன்றிப்பும், சுதந்திரமும், தாராளமும் தூய ஆவியால் மட்டுமே உருவாக்குபடுபவை என்றும், இவ்வொன்றிப்பு, ஒரே மாதிரியாக இருக்க நினைக்கும் அல்லது தங்கள் சொந்த கருத்துக் கோட்பாடுகளைக் கொணர விரும்பும் அல்லது தங்களது வேலையைச் செய்ய விரும்பும் குழுக்களால் உருவாக்குபடுவது அல்ல என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
வத்திக்கானிலுள்ள புனித சாந்தா மார்த்தா சிற்றாலயத்தில் இவ்வியாழன் காலை நிகழ்த்திய திருப்பலி மறையுரையில் இவ்வாறு உரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருஅவையிலும், திருஅவைக்கும் உண்மையாகவே உறுப்பினராய் இருப்பது குறித்து விளக்கினார்.
அதோடு, ஒரே மாதிரியாகச் செயல்படுவது, மாற்றாகச் செயல்படுவது, துர்ப்பிரயோகம் செய்வது ஆகிய மூன்று சோதனைகளில் கிறிஸ்தவர்கள் உட்படுவது குறித்தும் பேசிய திருத்தந்தை, திருஅவையில் பல கொடைகள் உள்ளன, பெருமளவில் பலதரப்பட்ட மக்களும், தூய ஆவியின் கொடைகளும் உள்ளன என்பது குறித்தும் விளக்கினார்.
திருஅவையில் நுழைய விரும்பினால், உனது முழு இதயத்தையும் அளிக்கும்பொருட்டு அதை அன்பால் செய்க எனவும், ஆதாயத்தைக் கருதிச் செய்யாதே எனவும் நம் ஆண்டவர் நம்மிடம் சொல்கிறார் எனவும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
திருஅவை வாடகைக்கு விடப்படும் வீடு அல்ல, மாறாக, வாழ்வதற்கான இல்லம் எனவும், இப்படி நினைப்பது எளிது அல்ல, ஏனெனில் சோதனைகள் பல உள்ளன எனவும் மறையுரையில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
திருஅவையில் ஒன்றிப்பைக் கொணருபவர் தூய ஆவியே என்றும், தூய ஆவியே திருஅவையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துகிறார், திருஅவையில் ஒன்றிப்பு என்பது நல்லிணக்கம் என்றும் தெரிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.