2014-06-04 15:00:05

"போர்களிலும், மோதல்களிலும் பாலியல் வன்கொடுமை பயன்படுத்தப்படுவதைத் தடுக்கவேண்டும்" - வத்திக்கான் வானொலியின் கருத்தரங்கு


ஜூன்,04,2014. "போர்களிலும், மோதல்களிலும் பாலியல் வன்கொடுமை பயன்படுத்தப்படுவதைத் தடுக்கவேண்டும்" என்ற மையக்கருத்தில் ஒரு வட்டமேசை கருத்தரங்கு வத்திக்கான் வானொலியில் இடம்பெற்றது.
வத்திக்கான் வானொலியும், பிரித்தானிய அரசின் சார்பில் திருப்பீடத்தில் பணியாற்றும் தூதரகமும் இணைந்து, இச்செவ்வாயன்று இக்கருத்தரங்கை மேற்கொண்டன.
போர், மற்றும் உள்நாட்டு மோதல்கள் நிகழும்போது, தகவல்கள் திரட்டுவதற்கும், மக்களை அச்சுறுத்துவதற்கும் பாலியல் வன்முறையை ஓர் ஆயுதமாகப் பயன்படுத்தி வரும் இன்றையக் கொடுமையை முற்றிலும் ஒழிக்கவேண்டும் என்பது இக்கருத்தரங்கின் மையக் கருத்தாக அமைந்தது.
வத்திக்கான் வானொலியில் நடைபெற்ற இந்த வட்டமேசை கருத்தரங்கில், சூடான், காங்கோ ஆகிய நாடுகளில் தொடர்ந்துவரும் போர்ச் சூழலில், பெண்கள் அனுபவிக்கும் பாலியல் வன்கொடுமைகளை இரு அருள் சகோதரிகள் பகிர்ந்துகொண்டனர்.
ஜூன் 10ம் தேதி முதல், 12ம் தேதி முடிய இலண்டன் மாநகரில் இதே மையக் கருத்துடன் நடைபெறவுள்ள ஒரு பன்னாட்டுக் கருத்தரங்கின் முன்னோடியாக வத்திக்கான் வானொலியில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பிரித்தானிய அரசு ஏற்பாடு செய்துள்ள பன்னாட்டுக் கருத்தரங்கில், ஐ.நா. மனித உரிமை அமைப்பின் உறுப்பினர்கள் உட்பட, 1200க்கும் அதிகமான பன்னாட்டுப் பிரதிநிதிகள் கலந்துகொள்வர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.