2014-06-03 17:28:28

திருத்தந்தை பிரான்சிஸ், சிம்பாப்வே ஆயர்களுக்கு வழங்கிய 'அத் லிமினா' உரை


ஜூன்,03,2014. சிம்பாப்வே (Zimbabwe) நாட்டின் விடுதலைக்கு முன்னும், பின்னும், தலத்திருஅவை மக்களுடன் இணைந்து, அவர்களுக்கு உறுதுணையாகப் பணியாற்றியுள்ளது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியுள்ளார்.
ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை பல்வேறு நாடுகளின் ஆயர்கள், திருத்தந்தையைச் சந்திக்கும் 'அத் லிமினா' (Ad Limina) சந்திப்பையொட்டி, உரோம் வந்திருந்த சிம்பாப்வே ஆயர்களுக்கு, இத்திங்கள் காலை திருப்பீடத்தில் வழங்கிய உரையில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வாறு கூறினார்.
"ஒடுக்கப்பட்டோரின் குரலை இறைவன் கேட்கிறார்" என்ற கருத்தில், 2007ம் ஆண்டு, சிம்பாப்வே ஆயர்கள் வெளியிட்ட மடலை, தன் உரையில் சிறப்பாகக் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அந்நாட்டின் ஆயர்கள் இறைவாக்கினர்களைப் போல் அநீதிக்கு எதிராகக் குரல் எழுப்பி வருவதைப் பாராட்டினார்.
சிம்பாப்வே நாட்டின் சமுதாயத்தில் காணப்படும் பாவங்கள் ஒவ்வொரு தனி மனிதரிடம் காணப்படும் பாவங்களின் ஒட்டுமொத்த வெளிப்பாடு என்பதால், தனி மனித அளவில் பாவங்களைக் களையும் பணியில் ஆயர்கள் ஈடுபடவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
"ஒவ்வொரு நாளும் இவ்வுலகில் அழகு பிறப்பெடுக்கிறது; மனித வரலாற்றில் வீசும் புயல்கள் மத்தியிலும் அது மீண்டும், மீண்டும் புத்துயிர் பெறுகிறது" என்று தன் திருத்தூது அறிவுரையான 'நற்செய்தியில் மகிழ்வி'ல் எழுதிய வார்த்தைகளுடன் சிம்பாப்வே ஆயர்களுக்கு தான் வழங்கிய உரையை திருத்தந்தை நிறைவு செய்துள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.