2014-06-02 19:56:44

தமிழகத்தின் கர்தினால், சைமன் லூர்துசாமி அவர்கள் இறையடி சேர்ந்தார்


ஜூன்,02,2014. கீழை வழிபாட்டு முறை திருப்பீடப் பேராயத்தின் முன்னாள் தலைவராக பணியாற்றிய கர்தினால் சைமன் லூர்துசாமி அவர்கள் திங்கள் ஜூன் 2, 2014 அன்று ரோம் நகரில் இறையடி சேர்ந்தார் என்பதை மிக வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம். இவர் நற்செய்தி அறிவிப்புப்பணி திருப்பீடப் பேராயத்தின் செயலராகவும் பல்லாண்டுகள் பணியாற்றியவர்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அனுப்பியுள்ள அனுதாபத்தந்தியில் கர்தினால் லூர்துசாமி அவர்கள் குருவாகவும் ஆயராகவும் இந்திய திருஅவைக்கு ஆற்றிய பணிகளையும், மேலும் பல ஆண்டுகள் அகில உலக திருஅவைக்கு ஆற்றிய பணிகளையும் பாராட்டியுள்ளார்.
தனது 90வது வயதை தாண்டிய இவர் தமிழ்நாட்டில் பாண்டிச்சேரி கடலூர் மறைமாவட்டத்தில் உள்ள கல்லேரி என்ற கிராமத்தில் பிப்ரவரி 5, 1924ல் பிறந்தார். திண்டிவனத்திலும் கடலுரிலும் தனது பள்ளிப் படிப்பை முடித்த பின் பெங்களுரு புனித பேதுரு இறையியல் கல்லூரியில் மெய்யியலும் இறையியலும் பயின்றார்.
1951ம் ஆண்டு குருவாக திருநிலைபடுத்தபட்டு, இரண்டாம் வத்திகான் பொதுச்சங்கத்தில் பங்கேற்று, பின்னர் 1964ல் பெங்களுரு உயர் மறைமாவட்டத்தில் துணை ஆயராக நியமிக்கப்பட்டு அதன் பின்னர் பேராயராகவும் பணியாற்றினார்.
1971ம் ஆண்டு உரோமைய ஆட்சிதுறையில் பணியாற்ற அழைக்கபெற்ற இவர் 1985ம் ஆண்டு கர்தினால் பதவிக்கு உயர்த்தப்பட்டார். இவர் இந்தியாவில் இருந்து தேர்வு செய்யப்பட நான்காம் கர்தினால் ஆவார். தமிழ்நாட்டில் இருந்து கர்தினால் பதவிக்கு உயர்ந்தவர் இவர் ஒருவரே. இறையடி சேர்ந்த கர்தினால் லூர்துசாமியின் அடக்க சடங்குகள் பற்றிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.