2014-05-31 18:24:22

திருத்தந்தை பிரான்சிஸ் - சிரியாவில் துன்புறும் மக்களுக்காக மீண்டும் ஒருமுறை விண்ணப்பம்


மே,31,2014. சிரியாவில் ஒவ்வொரு நாளும் சொல்லொண்ணா துயரங்களை அனுபவிக்கும் மக்களுக்காக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மீண்டும் ஒருமுறை விண்ணப்பம் எழுப்பியுள்ளார்.
திருத்தந்தையின் பிறரன்புப் பணிகளுக்குப் பொறுப்பான Cor Unum அவையைச் சார்ந்தவர்கள், ஏனைய பிறரன்பு அமைப்புக்களுடன் சேர்ந்து, சிரியாவின் நிலை குறித்தும், அங்கு மேற்கொள்ளப்பட வேண்டிய செயல்பாடுகள் குறித்தும் உரோம் நகரில் ஓர் ஆலோசனைக் கூட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.
இக்கூட்டத்திற்கு தன் செய்தியை அனுப்பியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், "அடுத்தவரைப் பற்றிய அக்கறையின்மையின் உலகமயமாக்கல்" என்று தான் முன்னர் கூறிய கருத்தை மீண்டும் வலியுறுத்தி, சிரியாவின் துன்பங்களுக்கு நாம் பழகிப் பொய், அவர்களை மறந்துவிடக் கூடாது என்று விண்ணப்பித்தார்.
ஓராண்டுக்கு முன்னர், புனித பேதுரு பசிலிக்காப் பேராலய வளாகத்தில் சிரியாவின் அமைதிக்கென உலக மக்கள் அனைவரோடும் இணைந்து செபித்ததை மீண்டும் நினைவுகூர்ந்த திருத்தந்தை, உலகில் நிகழும் துன்பங்களைக் கண்டும் அக்கரையின்றி அகன்று போவதே, தீமைகள் வளர்வதற்குத் துணையாகிறது என்று எடுத்துரைத்தார்.
"வாழ்வின் கடினமானத் தருணங்களில், இறைவனின் தாயிடம் சென்றால், பாதுகாப்பைக் காண முடியம்" என்பது, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இச்சனிக்கிழமை வழங்கிய Twitter செய்தியாக அமைந்தது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.