2014-05-31 18:26:19

செபங்களின் வலிமையை நம்பினால், உலகின் போர்கள் பலவற்றைத் தீர்க்க முடியும் - திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின்


மே,31,2014. பாலஸ்தீனா, இஸ்ரேல் ஆகிய இரு நாட்டுத் தலைவர்கள் வத்திக்கானில் சந்திப்பது, அமைதி வேண்டி செபத்திற்காக மட்டுமே என்றும், உலக அமைதிக்கு செபம் ஒரு வலிமை வாய்ந்த கருவி என்றும் திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் கூறினார்.
புனித பூமி பயணத்தின்போது திருத்தந்தை விடுத்த அழைப்பை ஏற்று, ஜூன் 8, ஞாயிறன்று, பாலஸ்தீனா மற்றும் இஸ்ரேல் அரசுத் தலைவர்கள் வத்திக்கானில் மேற்கொள்ளும் அமைதி செப முயற்சி குறித்துப் பேசிய கர்தினால் பரோலின் அவர்கள் இவ்வாறு கூறினார்.
ஆயுதங்களின் வலிமையை நம்புவதைக் காட்டிலும், ஆண்டவரிடம் எழுப்பும் செபங்களின் வலிமையை நம்பினால், உலகின் போர்கள் பலவற்றைத் தீர்க்கமுடியும் என்று கர்தினால் பரோலின் அவர்கள் மேலும் கூறினார்.
சிரியாவில் தொடர்ந்து இடம்பெற்றுவரும் போர் குறித்து முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும் விடுத்துள்ள விண்ணப்பங்களைக் குறித்துப் பேசியத் திருப்பீடச் செயலர் கர்தினால் பரோலின் அவர்கள், சிரியாவின் உடனடித் தேவைகள், மனிதாபிமான உதவிகள் என்பதை வலியுறுத்தினார்.
மேலும், சிரியாவின் உள்நாட்டுப் போரையொட்டி கடத்தி வைக்கப்பட்டிருக்கும் ஆயர்கள், அருள் பணியாளர்கள் அனைவரையும் வன்முறையாளர்கள் உடனடியாக விடுவிக்க வேண்டும் என்பதையும் கர்தினால் பரோலின் அவர்கள் வலியுறுத்திக் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.