2014-05-30 16:39:10

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள கிறிஸ்தவத் தாயை உடனடியாக விடுவிப்பது சூடான் நாட்டின் கடமை - கனடா நாட்டு ஆயர்கள்


மே,30,2014. சூடான் நாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள கிறிஸ்தவத் தாய் Meriam Yehya Ibrahim அவர்களை மனிதாபிமான அடிப்படையில் உடனடியாக விடுவிப்பது சூடான் நாட்டின் கடமை என்று கனடா நாட்டு ஆயர்கள் கூறியுள்ளனர்.
Meriam என்ற இளம்பெண் மருத்துவர், ஒரு இஸ்லாம் தந்தைக்குப் பிறந்தவர் என்பதால், அவர் ஒரு கிறிஸ்தவரை மணந்தது சட்டப்படி செல்லாது என்றும், அவர் ஏற்கனவே ஒரு குழந்தைக்குத் தாயானதும், தற்போது மற்றொரு குழந்தையைப் பெறவிருப்பதும் சட்டப்படி குற்றம் என்றும் கூறி, சூடான் உச்ச நீதி மன்றம் அவருக்கு மரண தண்டனை வழங்கியுள்ளது.
சிறையில் அடைக்கப்பட்ட Meriam அவர்களுடன் அவரது இரண்டு வயது மகன் மார்ட்டினும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளான். இந்நிலையில், Meriam மற்றொரு பெண் குழந்தையை சிறையில் ஈன்றெடுத்தார் என்று செய்திகள் கூறுகின்றன.
இளம் மருத்துவர் Meriamன் தந்தை, சிறுவயதிலேயே தாயைவிட்டுப் பிரிந்ததால், Meriam குழந்தைப் பருவம் முதல் கிறிஸ்தவ வழியில் வளர்ந்தார் என்பதைச் சுட்டிக்காட்டிய போதும், இஸ்லாமிய நீதி மன்றம் அவருக்கு மரண தண்டனை வழங்கியுள்ளது.
அவருக்கு வழங்கப்பட்டுள்ள தண்டனை எவ்வகையிலும் பொருளற்றது என்று சூடான் ஆயர்கள் அவை ஏற்கனவே தன் கண்டனத்தை வெளியிட்டுள்ளது. தற்போது கனடா நாட்டு ஆயர்கள் சார்பில், ஆயர் François Lapierre அவர்கள் தன் கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.

ஆதாரம் : Zenit








All the contents on this site are copyrighted ©.