2014-05-29 16:39:26

மனம் திறந்த உரையாடல் வழியாக நைஜீரியாவில் நிரந்தர அமைதியைக் கொணர அனைவரும் பாடுபடவேண்டும் - கர்தினால் Onaiyekan


மே,29,2014. Boko Haram வன்முறை கும்பலால் 250க்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகள் கடத்தப்பட்டதை, வெறும் பயங்கவாதச் செயலாக மட்டும் காண்பதையும் கடந்து, அரசியல், சமுதாய மற்றும் மத உறவுகளின் அடிப்படையில் தீர்வுகள் காண்பது அவசியம் என்று நைஜீரியா நாட்டு கர்தினால் ஒருவர் கூறினார்.
நைஜீரியாவில் நடைபெறும் வன்முறைகளைக் கண்டனம் செய்வதோடு ஒருவரது கடமை முடிவதில்லை, மாறாக, நைஜீரியா நாட்டின் இஸ்லாமியர்களுடன் மேற்கொள்ள வேண்டிய ஆழமான உரையாடலின் அவசியத்தை இந்த வன்முறைகள் உணர்த்துகின்றன என்று அபூஜா பேராயர், கர்தினால் John Olorunfemi Onaiyekan கூறியுள்ளார்.
நடைபெற்றுவரும் வன்முறைகளையொட்டி, அண்மையில் அபூஜாவில் நடைபெற்ற ஒரு கிறிஸ்தவ இஸ்லாம் வழிபாட்டில், இஸ்லாமிய உயர் மதத் தலைவரும், Sokotoவின் சுல்தானும் ஆன, மூன்றாம் Muhammad Sa’ad Abubakar அவர்கள், இஸ்லாம் மதத்தில் வன்முறைகளுக்கு எள்ளளவும் இடமில்லை என்று கூறினார்.
இளவரசரின் அழுத்தமான கூற்றைப் பாராட்டிப் பேசிய கர்தினால் Onaiyekan அவர்கள், மனம் திறந்த உரையாடல் வழியாக நைஜீரியா நாட்டில் நிரந்தரமான அமைதியைக் கொணர அனைவரும் பாடுபடவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

ஆதாரம் : Fides








All the contents on this site are copyrighted ©.