2014-05-29 16:43:04

"The Francis Effect" என்ற தலைப்பில் உருவாக்கப்பட்டுள்ள தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு


மே,29,2014. தன் ஓராண்டு தலைமைப் பணியின் வழியே உலகின் கவனத்தை ஈர்த்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை மையப்படுத்திய ஒரு தொலைக்காட்சி நிகழ்வை கனடாவின் Salt and Light தொலைக்காட்சி மையம் மே 31, இச்சனிக்கிழமை ஒளிபரப்புகிறது.
"The Francis Effect" அதாவது, 'பிரான்சிஸ் தாக்கம்' என்ற தலைப்பில் உருவாக்கப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சியில், அமெரிக்கக் கண்டம் வழங்கியுள்ள முதல் திருத்தந்தை உலகின் மீது கொண்டுள்ள தாக்கத்தைக் குறித்து பலரும் கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளனர் என்று இந்நிகழ்ச்சியை உருவாக்கிய Sebastian Gomes அவர்கள், Zenit இதழுக்கு அளித்த பேட்டியில் கூறினார்.
தன்னுடைய எளிய உடை, தான் தங்கியிருக்கும் எளிய இல்லம் ஆகிய வெளிப்புறத் தாக்கங்களை விட, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கருத்தளவில் திருஅவையில் கொணர்ந்துள்ள மாற்றங்கள் குறித்து இந்நிகழ்ச்சியில் பல்வேறு ஆயர்கள், அருள் பணியாளர்கள் மற்றும் ஊடகத் துறையினர் தங்கள் கருத்தை வெளியிட்டுள்ளனர்.
கத்தோலிக்கத் திருஅவை, தன்னிலேயேத் தங்கி, தனக்குத் தானே பணியாற்றுவதைவிட, இவ்வுலகிற்குள் சென்று பணியாற்ற வேண்டும் என்பதே திருத்தந்தை பிரான்சிஸ் உருவாக்கியுள்ள மிக ஆழ்ந்த தாக்கம் என்பதை இத்தொலைக்காட்சி நிகழ்ச்சி வலியுறுத்துகிறது என்று Sebastian Gomes அவர்கள் வலியுறுத்தினார்.

ஆதாரம் : Zenit









All the contents on this site are copyrighted ©.