2014-05-28 16:07:38

மே 29, 2014 புனிதரும் மனிதரே : புனிதராவதற்கு எதிர்ப்புக்கள் தடையல்ல (புனித கதேரி தேகாவிட்டா)


அமெரிக்க ஐக்கிய நாட்டு நியுயார்க் நகரத்துக்கு அருகிலுள்ள Auriesville என்ற நகரில் 1656ம் ஆண்டில் பிறந்தவர் கதேரி தேகாவிட்டா. இவர் Mohawk பழங்குடி இனத்தலைவரின் மகள். Algonquin இனத்தைச் சேர்ந்த இவரின் தாய் Tagaskouita கத்தோலிக்கத்தைத் தழுவியதால் Mohawk இனமக்கள் கட்டாயமாக இவரைப் பிடித்துக்கொண்டுபோய் அந்த இனத்தில் கட்டாயத் திருமணம் செய்து வைத்தனர். 1661க்கும் 1663ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் Mohawk இனத்தவர் பெரியம்மையால் தாக்கப்பட்டனர். இதில் கதேரியின் பெற்றோரும் தம்பியும் இறந்தனர். நான்கு வயதான கதேரி முகத்தில் அம்மைத் தழும்புகளுடன் கண்பார்வை பாதிக்கப்பட்ட நிலையில் உயிர் தப்பினார். கதேரி உறவினர்களால் வளர்க்கப்பட்டார். இந்த இனத்தவர் Mohawk ஆற்றங்கரையோரம் குன்றின் உச்சியில் தங்களது புதிய கிராமத்தைக் கட்டினர். கதேரிக்கு 17 வயது நடந்தபோது அவரது அத்தை திருமணத்துக்கு ஏற்பாடு செய்தார். திருமணத்தில் விருப்பமில்லாத கதேரி, தனக்கெனத் தேர்ந்தெடுத்த இளைஞனை கேலி செய்ததால் கடும் தண்டனைக்கு உள்ளானார். இவர் தனது 18வது வயதில் அப்பகுதியில் மறைப்பணியாற்றிய இயேசு சபை மறைப்பணியாளர்களைச் சந்தித்தார். 20வது வயதில் கதேரி கத்தோலிக்கத்தைத் தழுவினார். காத்ரின் என்ற பெயரையும் ஏற்றார். இதனால் அவருடைய இனத்தவர் இவருக்குப் பேய் பிடித்திருக்கிறது, பாலியல் தவறுகளைச் செய்தார் எனப் பழி சுமத்தினர். எதற்கும் அஞ்சாது இயேசு சபை மறைப்பணித்தளத்திலே தங்கிவிட்டார். உடல்நலம் பாதிக்கப்பட்டு 24வது வயதில் இறந்தார். இவர் இறந்தவுடன் இவரது முகத்திலிருந்த அம்மைத் தழும்புகள் புதுமையாக மறைந்தன. Catherine Tekakwitha 2012ம் ஆண்டு அக்டோபர் 21ம் தேதி முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களால் புனிதராக அறிவிக்கப்பட்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.