2014-05-28 15:41:46

திருத்தந்தை பிரான்சிஸ், பல்கேரியா நாட்டுப் பிரதமருடன் சந்திப்பு


மே,28,2014. மே 28, இப்புதன் காலை 9.30 மணியளவில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பல்கேரியா நாட்டுப் பிரதமர் Plamen Oresharki அவர்களையும், உடன் வந்திருந்த அரசு அதிகாரிகளையும் தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லத்தில் சந்தித்து சிறிது நேரம் உரையாடினார்.
மேலும், மே 27, இச்செவ்வாய் காலை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உரோம் நகரில் அமைந்துள்ள புனித மேரி மேஜர் பசிலிக்காப் பேராலயத்திற்குத் தனியே சென்று சிறிது நேரம் செபத்தில் கழித்தார்.
காலை 11 மணியளவில் பசிலிக்காவிற்கு வந்தத் திருத்தந்தை, அன்னையின் பீடத்திற்கு முன் 15 நிமிடங்களுக்கு மேல் செபத்தில் கழித்தபின், அன்னையின் பீடத்தில் மலர்கொத்தை காணிக்கையாக்கினார் என்றும், பின்னர், பேராலயத்தில் அந்நேரம் கூடியிருந்த மக்களுடன் ஒரு சில நிமிடங்கள் உரையாடியபின், அங்கிருந்து 11.30 மணிக்குக் கிளம்பினார் என்றும், பேராலயத்தின் பேராயர் கர்தினால் Abril y Castello அவர்கள் கூறினார்.
பிரேசில் நாட்டுப் பயணத்திற்கு முன்னரும், புனித பூமி பயணத்திற்கு முன்னரும் திருத்தந்தை அவர்கள், தன் பயணங்களை அன்னையின் பாதுகாவலில் ஒப்படைத்தது நினைவுகூரத் தக்கது.
இதுவரை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புனித மேரி மேஜர் பசிலிக்காப் பேராலயத்திற்கு ஒன்பது முறை சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.