2014-05-28 16:01:21

அமைதி ஆர்வலர்கள் – 1927ல் நொபெல் அமைதி விருது
(Ferdinand Buisson, Ludwig Quidde)


மே.28,2014. உலகில் போர் ஒழிப்பு நடவடிக்கைகளில் மிக உறுதியாக, விடாப்பிடியாகச் செயல்பட்டவர் என அறியப்படுபவர் Ferdinand Édouard Buisson. இவர் ஒரு சுதந்திரச் சிந்தனையாளர். இவர் பிரான்சின் பாரிசில் 1841ம் ஆண்டு டிசம்பர் 20ம் தேதி பிறந்தார். தீவிர சோசலிஷ மற்றும் குருக்களுக்கு எதிரான கொள்கையுடையவராக இருந்ததால், பத்திரிகையாளர்களால் அவமானப்படுத்தப்பட்டார், குருக்களின் எதிர்ப்பையும் பெற்றார். அரசியல் அவதூறுகளால் பொதுப்பணிகளிலிருந்து நீக்கப்பட்ட இவர் பலரிடமிருந்து கடும் எதிர்ப்பையும் சம்பாதித்தார். இது எந்த அளவுக்கு இருந்ததென்றால் இவர் தனது 87வது வயதில் ஒரு கூட்டத்தில் உரையாற்றிக் கொண்டிருந்தபோது மாணவர்கள் குழு ஒன்று இவர்மீது கற்களை எறிந்தது. முற்போக்கு கல்வியாளராக இருந்த Ferdinand Buisson, ப்ரெஞ்ச் ஆரம்பக் கல்வியை நவீனமயமாக்கியதில் முக்கிய பங்கு வகித்தவர். 51வது வயதில் இலக்கியத்தில் முனைவர் பட்டமும் பெற்றார். 1886ம் ஆண்டில் ப்ரெஞ்ச் பேரரசர் நெப்போலியனின் புதிய அரசில் உடன்பாடு இல்லாமல் இருந்ததால் இவர், ஆசிரியப் பணியையும் இழந்தார். அதனால் சுவிட்சர்லாந்து சென்று Neuchâtel பல்கலைக்கழகத்தில் பணியாற்றினார் Buisson.
சுவிட்சர்லாந்தில் 1887ம் ஆண்டில் ஜெனீவா அமைதிக் கருத்தரங்கில் பங்கெடுத்தார் Buisson. அந்தக் கருத்தரங்கில் அனைத்துலக அமைதி மற்றும் சுதந்திரக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. சுவிட்சர்லாந்தில் வாழ்ந்த காலத்தில், கல்வி வழியாகப் போரை ஒழித்தல் என்ற தலைப்பில் இவர் எழுதிய நூல் ஐரோப்பிய நாடுகளின் ஒன்றியத்தால் பிரசுரிக்கப்பட்டது. இவரது முற்போக்குக் கிறிஸ்தவம் என்ற கொள்கை விசுவாசத்தைச் சுதந்திரமாகச் செயல்படுத்தும் கருத்துருவாக்கத்தை வளர்த்தது. ப்ரெஞ்ச்-புருசியச் சண்டையில் 3ம் நெப்போலியன் தோற்கடிக்கப்பட்ட பின்னர் பிரான்ஸ் திரும்பிய Buisson கல்வித்துறை நிர்வாகியாக, தனது பணியைத் தொடர்ந்தார். பாரிசில் ஆரம்பக் கல்வி ஆணையர், கல்வி அமைச்சர் போன்ற பதவிகளை வகித்தார். இவர் தனது சொற்பொழிவுகள், கையேடுகள் போன்றவை மூலம் சமயச் சார்பற்றக் கல்வி அமைப்பை ஊக்குவித்ததால் இவர் விவிலியத்தை மதிக்கவில்லை என்று ப்ரெஞ்ச் நாடாளுமன்றத்தால் குற்றம் சாட்டப்பட்டார். இதனால் கல்விப்பணி பதவியைவிட்டு விலகினாலும், பின்னர் 1878ம் ஆண்டில் மீண்டும் பிரான்சின் ஆரம்பக் கல்வி ஆணையராக நியமிக்கப்பட்டார். ஆரம்பக் கல்வி குறித்த புள்ளிவிபர ஆணையத்தின் செயலராக, வியன்னா மற்றும் பிலடெல்ஃபியா மாநாடுகளில் கலந்து கொண்டார். ஆஸ்ட்ரியாவிலும், அமெரிக்க ஐக்கிய நாட்டிலும் ஆரம்பக் கல்வி குறித்த விரிவான அறிக்கையை சமர்ப்பித்தார். பிரான்சில் 1880களில் கட்டாய ஆரம்பக் கல்வித் திட்டம் கொண்டுவரப்படுவதற்கு அரசியல்மேதை Jules Ferryடன் இணைந்து கடுமையாக உழைத்து அச்சட்டம் அமல்படுத்தப்படவும் உதவினார் Buisson.
1902 முதல் 1906ம் ஆண்டுவரை கல்வி கூட்டமைப்புக் குழுவின் தலைவராகவும், 1914 முதல் 1926ம் ஆண்டுவரை மனித உரிமைகள் கூட்டமைப்புக் கழகத்தின்(LDH) தலைவராகவும் பணியாற்றினார் Buisson. இவரது கல்விக் கொள்கைகள் அனைத்துலக அளவில் பாராட்டப்பட்டன. பிரான்சும் ஜெர்மனியும் ஒப்புரவாக அரும்பாடுபட்டார். இதற்காக, Buissonக்கு 1927ம் ஆண்டில் நொபெல் அமைதி விருதும் வழங்கப்பட்டது. இவரது தந்தை ஒரு பிரிந்த கிறிஸதவ சபை நீதிபதி என்பது குறிப்பிடத்தக்கது.

1927ம் ஆண்டில் Ferdinand Buissonடன் சேர்ந்து நொபெல் அமைதி விருதைப் பெற்றவர் Ludwig Quidde. ஜெர்மனி நாட்டவரான Ludwig Quidde, அமைதி, ஆயுதக்களைவுகளால் ஏற்படலாம், எனவே ஆயுதக்களைவு, முழுப்பாதுகாப்புக்கும் நிலைத்த அமைதிக்கும் முன்னதாக இடம்பெற வேண்டும் என்ற சிந்தனையைக் கொண்டிருந்தவர். பணக்கார வணிகக் குடும்பத்தில் 1858ம் ஆண்டு மார்ச் 23ம் தேதி பிறந்த Ludwig Quidde, முற்போக்குச் சிந்தனைகளுடன் கல்வி பெறும் வாய்ப்பைப் பெற்றார். மத்திய கால ஜெர்மன் ஆவணங்களைப் பிரசுரிக்கும் ஆசிரியர் குழுவில் 1933ம் ஆண்டுவரை பணியில் இருந்த இவரை, பவேரிய வரலாற்று ஆணையம் அரசியல் காரணங்களுக்காகப் பணியைவிட்டு நீக்கியது. அதன்பின்னர் ஜெர்மன் வரலாற்று அறிவியல் பத்திரிகையை 1889ம் ஆண்டில் தொடங்கினார். பின்னாளில் இவர் அரசியலில் ஈடுபட்டாலும் அவரது பத்திரிகைத் துறை ஆர்வம் குறையாமலே இருந்தது. இவர் Munichல் அரசியல் வாழ்வைத் தொடங்கினார். அரசியல் மெய்யியல், புருசியாவுக்கும் இராணுவத்துக்கும் எதிரான கொள்கை ஆகியவற்றைக் கொண்டிருந்த ஜெர்மன் மக்கள் கட்சியை சீரமைப்பதற்கு 1895ம் ஆண்டில் உதவினார். அப்படியே அரசியலில் முன்னேறினார் Quidde.
Ludwig Quidde தனது கொள்கைகளில் உறுதிப்பாடு மிக்கவர். 1896ம் ஆண்டு சனவரி 20ம் தேதி இவர் ஆற்றிய அரசியல் சொற்பொழிவு காரணமாக மூன்றுமாதம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார். இரகசிய இராணுவப் பயிற்சியைத் தாக்கி 1924ம் ஆண்டில் கட்டுரை எழுதியதால், இவர் நாட்டின் எதிரிகளோடு ஒத்துழைக்கிறார் எனக் குற்றம் சுமத்தப்பட்டு சிறிது காலத்துக்குச் சிறையில் வைக்கப்பட்டார். தொடக்கத்தில் இவரது கொள்கை போருக்கு எதிரானதாக இல்லை, ஆனால் இவர், அமைதி இயக்கத்தில் ஆர்வம் கொண்டிருந்ததால், ஜெர்மன் அமைதிக் கழகம் ஆரம்பிக்கப்பட்ட 1892ம் ஆண்டில் அதில் சேர்ந்தார். இவரது வரலாற்றியல் ஆய்வுகள், நன்னெறிக் கோட்பாடுகள், இராணுவத்தின் மீதிருந்த அவநம்பிக்கை, அவரது மனைவி மார்க்கிரட்டின் தூண்டுதல் ஆகியவை இவரை அமைதிக் கழகத்தில் இணைத்தன. 1901ல் கிளாஸ்கோ உலக அமைதி மாநாட்டில் தலைமை வகிக்கும் அளவுக்கு, அமைதி குறித்த இவரது ஆர்வம் தொடர்ந்தது. 1907ல் மியுனிச்சில் நடந்த உலக அமைதி மாநாட்டை மேற்பார்வையிட்டார். 1914ல் ஜெர்மன் அமைதிக் கழகத்தின் தலைவரானார். இப்பதவியை 15 ஆண்டுகள் வகித்தார். முதல் உலகப் போர் தொடங்கிய போது Quidde, Hague நகர் சென்று ஆங்கிலேய மற்றும் ப்ரெஞ்ச் அமைதிக் குழுக்களுடன் உறவு வைத்துக்கொள்ள முயற்சித்தார். ஆனால் இவர் ஜெர்மனி திரும்பியபோது தேசத் துரோகக் குற்றம் சாட்டப்பட்டார். இவரது செயல்களை ஜெர்மனி பல மாதங்கள் கண்காணித்தது.
ஜெர்மனியில் கிட்லர் பதவிக்கு வந்தபோது Quidde முதலில் மியுனிச், பின்னர் ஜெனீவா சென்று அங்கு 1933ம் ஆண்டு மார்ச் மாதத்தில் அவர் இறக்கும்வரை வாழ்ந்தார். தனது நண்பர்களின் உதவியினால் உயிர் வாழ்ந்த இவர் எப்பொழுதும் நியாயமான ஒரு மனிதராகவே வாழ்ந்தார். ஜெர்மனியை விட்டு வெளியே வாழ்ந்தபோதும் உலக அமைதி மாநாடுகளில் கலந்து கொள்ளல், அமைதி குறித்த கட்டுரைகளை வெளியிடுதல் போன்றவற்றைத் தொடர்ந்து செய்து வந்தார். Ludwig Quidde உலக அமைதிக்கு ஆற்றிய பணிகளுக்காக 1927ம் ஆண்டில் நொபெல் அமைதி விருது வழங்கி கவுரவிக்கப்பட்டார்.








All the contents on this site are copyrighted ©.