2014-05-27 16:54:32

விமானத்தில் நிருபர்களுடன் திருத்தந்தையின் சந்திப்பு


மே,27,2014. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இஸ்ரேல் நாட்டிலிருந்து உரோம் நகருக்கு திங்கள் இரவு திரும்பிவந்தபோது, விமானத்தில் ஊடகவியலாளர்களுடன் பேசியவை, நமக்கு நம்பிக்கை தருபவையாக மட்டுமல்ல, சில முக்கிய விடயங்களில், திருஅவையின் உறுதிப்பாட்டையும் வெளிப்படுத்துவதாக உள்ளன.
விமானத்தில் நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்குப் பதில் தந்தபோது, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், குழந்தைகளுக்கு எதிராகத் தவறிழைத்த, அதாவது, பாலியல் வன்கொடுமைகளை மேற்கொண்ட அருள் பணியாளர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவர், இதில் விட்டுக் கொடுப்பது என்பது எள்ளளவும் கிடையாது என்று கூறினார். ஏற்கனவே இது தொடர்பாக மூன்று ஆயர்கள் மீது விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன என்பதையும், திருத்தந்தை சுட்டிக்காட்டினார். பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளான சிலரை, ஜூன் மாதம் முதல் வாரத்தில் தான் வத்திக்கானில் சந்திக்க உள்ளதாகவும் அறிவித்தார் திருத்தந்தை.
ஏழ்மையைப் பற்றி வலியுறுத்திவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வத்திக்கான் வங்கி நிர்வாகம், சில திருப்பீட அதிகாரிகளின் வீண் செலவு ஆகியவை குறித்து என்ன சீர்திருத்தங்கள் செய்கிறார் என்று இஸ்பானிய பத்திரிகையாளர் ஒருவர் கேட்க, வத்திக்கான் வங்கி நிர்வாகம் குறித்து விசாரித்து உதவ சிறப்பு அவை ஒன்று நிறுவப்பட்டுள்ளதையும், வீண் செலவுகள், பண பரிமாற்றங்கள் குறித்து தீவிர விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் எடுத்துரைத்தார் திருத்தந்தை.
பின்னர், அடுத்த ஆண்டு, சனவரி மாதம், இலங்கையில் இரண்டு நாள் திருப்பயணம் மேற்கொள்ள உள்ளதையும், அதன்பின் அங்கிருந்து, பிலிப்பின்ஸ் நாட்டுக்குச் சென்று, சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க உள்ளதாகவும் தெரிவித்தார், திருத்தந்தை பிரான்சிஸ். திருமண முறிவுகள், மணமுறிவு பெற்றவர்கள் திருவிருந்தில் பங்கேற்றல், திருமணம் ஆகாமல், சேர்ந்து வாழ்தல், திருப்பீட நிர்வாக சீர்திருத்தம் குறித்த ஆய்வுகள் போன்ற விடயங்களையும் ஊடகவியலாளர்கள் மத்தியில் திருத்தந்தை பகிர்ந்துகொண்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.