2014-05-27 16:43:42

திருத்தந்தை பிரான்சிஸ், யூதர்களின் தகனம் என்ற Yad Vashem வேதனை நினைவிடத்தில் ஆற்றிய உரை


மே,27,2014. யூதர்களின் தகனம் என்ற இந்த வேதனை நினைவிடத்தில், கடவுள் எழுப்பிய கேள்வி மீண்டும் எதிரொலிக்கிறது: "ஆதாமே, நீ எங்கே இருக்கிறாய்?" (தொடக்க நூல் 3:9)
தன் குழந்தையைத் தொலைத்துவிட்டத் தந்தையின் வேதனை, இக்கேள்வியில் நிறைந்துள்ளது.
நன்மை, தீமையை அறியும் சுதந்திரம் அளித்ததால், மனிதர்கள் தொலைந்துவிடக் கூடும் என்பதை இறைவன் அறிந்திருந்தார். ஆனால், மனிதர்கள் இவ்வளவு பயங்கரமாகத் தொலைந்து போவர் என்பதை, தந்தை கற்பனை செய்து பார்க்கவில்லை.
'தகனம்' என்ற இந்தக் கட்டுக்கடங்காதத் துயரத்திற்கு முன், "நீ எங்கே இருக்கிறாய்?" என்ற கேள்வி மீண்டும், மீண்டும் எதிரொலிக்கிறது.

ஆதாமே, நீ எங்கே இருக்கிறாய்? உன்னை என்னால் அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை.
மனிதனே, நீ யார்? உனக்கு என்னவாயிற்று?
எத்தகைய விபரீதங்கள் உன்னால் கூடும்?
இவ்வளவு தாழ்ந்ததொரு நிலையில் வீழ்வதற்கு எது உன்னைத் தூண்டியது?

நீ உருவாக்கப்பட்ட மண் நிச்சயம் ஒரு காரணமல்ல.
நான் படைத்த மண், நல்லது.
நான் உன்மீது ஊதிய என் மூச்சுக்காற்று நிச்சயம் ஒரு காரணமல்ல.
என் மூச்சுக் காற்று நல்லது.

இல்லை, நீ வீழ்ந்த இந்தப் பாதாளம், நீயே உருவாக்கிக் கொண்டது.
யார் உன்னைக் கெடுத்தது? யார் உன்னை உருக்குலையச் செய்தது?
நன்மைக்கும், தீமைக்கும் நீயே அதிகாரி என்று உன்னை எண்ணத் தூண்டியது யார்?
நீயே கடவுள் என்ற உறுதியை உனக்குத் தந்தது யார்?
உன் சகோதர, சகோதரிகளைச் சித்ரவதை செய்து கொன்றது மட்டுமல்ல,
கடவுளாக நீயே மாறி, உன் பீடத்தில் அவர்களைப் பலியாக்கினாய்.

இன்று, இவ்விடத்தில் மீண்டும் கடவுளின் குரல் கேட்கிறது: "ஆதாமே, நீ எங்கே இருக்கிறாய்?"
மண்ணிலிருந்து ஒரு மென்மையான அழுகுரல் மேலெழுகிறது: "ஆண்டவரே, எங்கள் மேல் இரக்கமாயிரும்."

எல்லாம் வல்ல ஆண்டவரே, எங்கள்மேல் இரங்கியருளும்.
மனிதர்களாகிய நாங்கள் செய்துள்ளவற்றைக் கண்டு,
நாங்கள் வணங்கும் இந்தப் பிரம்மாண்டமான பொய் தெய்வத்தைக் கண்டு
நாங்கள் வெட்கித் தலைகுனிய வரம் தாரும்.

ஒருபோதும் இவ்விதம் இனி நிகழக்கூடாது, ஆண்டவரே!

"ஆதாமே, நீ எங்கே இருக்கிறாய்?"
இதோ, நாங்கள் உம்முன் நிற்கிறோம்.
உம உருவில் படைக்கப்பட்ட மனிதன் செய்துள்ளதைக் கண்டு,
வெட்கித் தலைகுனிந்து இதோ இங்கிருக்கிறோம்.

உமது கருணையில் எங்களை நினைவுகூர்ந்தருளும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.