2014-05-27 16:48:03

திருத்தந்தை பிரான்சிஸ், அரசுத் தலைவர் Shimon Peres இல்லத்தில் வழங்கிய உரை


மே,27,2014. அரசுத் தலைவரே, உங்கள் வாழ்த்துக்கும், வரவேற்பிற்கும் நன்றி. சிறிது கற்பனையோடு நான் இன்று ஒரு புதிய 'பேறுபெற்றோர்' மொழியை உருவாக்கி, அதை எனக்கு நானே கூறிக் கொள்கிறேன்: "அறிவும் நற்குணமும் கொண்ட ஒருவரின் இல்லத்தில் நுழைவோர் பேறுபெற்றோர்". நான் பேறு பெற்றவனாக இப்போது உணர்கிறேன். மனதார உங்களுக்கு நன்றி சொல்கிறேன்.
அரசுத் தலைவரே, தங்களை மீண்டும் எருசலேம் நகரில் சந்திப்பதில் மகிழ்ச்சி. ஆபிரகாமை அழைத்த இறைவனைத் தொழும் மூன்று முக்கிய மதங்களுக்குரிய புனிதத் தலங்களை எருசலேம் நகர் தன்னகத்தே கொண்டுள்ளது. இப்புனிதத் தலங்களை, சுற்றுலாப் பயணிகளுக்கு வெறும் காட்சிப் பொருளாக மட்டும் பாதுகாக்கக் கூடாது. இத்தலங்களைத் தரிசிக்கும் பக்தர்களுக்கு, நம்பிக்கையையும், பிறரன்பையும் வெளிப்படுத்தும் புனிதத் தலங்களாகக் காப்பாற்றப்பட வேண்டும். எருசலேம், என்றென்றும் அமைதியின் நகராக விளங்குவதாக!
அரசுத்தலைவரே, தாங்கள் அமைதி விரும்பி என்பதும், சமாதானம் செய்பவர் என்பதும் அனைவரும் அறிந்ததே. அமைதியை வளர்க்க இதுவரை நீங்கள் மேற்கொண்ட முயற்சிகளைப் பாராட்டுகிறேன். இவ்வேளையில், அனைவருக்கும் நான் விடுக்கும் வேண்டுகோள் இதுவே - நாம் அனைவரும் அமைதியை வளர்க்கப் பாடுபடுவோம்.
அமைதியைக் குலைக்கும் அனைத்து வன்முறைகளையும் விட்டொழிக்க உறுதி பூணுவோம். வழிபாட்டுத் தலங்களை இலக்காக்கும் வன்முறைச் செயல்களை முற்றிலும் ஒழிப்போம்.
இஸ்ரேல் நாட்டில் வாழும் கிறிஸ்தவர்கள் அனைவரும் இந்நாட்டின் இணைபிரியா அங்கங்கள். இந்நாட்டின் வளர்ச்சியில் ஆழ்ந்த ஈடுபாட்டுடன் தங்களையே அர்ப்பணித்தவர்கள். இவர்களுக்கு உரிய முழு உரிமையையும், மதிப்பையும் வழங்கினால், இக்குடியரசு மேலும் வளர்ச்சியுறும்.
அரசுத்தலைவரே, நான் உமக்காகச் செபிப்பதையும், நீர் எனக்காகச் செபிப்பதையும் நாம் அறிவோம். ஒருவர் ஒருவருக்காக நாம் எழுப்பும் செபங்கள் தொடரட்டும். மத்தியக் கிழக்கு பகுதியில் அமைதி வேரூன்ற அனைவரும் செபிப்போம். Shalom!

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.