2014-05-27 16:56:21

அருள்பணியாளர், துறவியர், அருள்பணியாளர் பயிற்சியில் உள்ளோர் அனைவருக்கும் திருத்தந்தை வழங்கிய உரை


மே,27,2014. பாவத்தின் பிடியிலிருந்து மனுக்குலத்தை மீட்க, இறைவன் குறித்த நேரத்தில், இயேசு, ஒலிவ மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள கெத்சமனிக்கு வந்தார். இயேசுவின் செபங்களால், வேதனைகளால் புனிதமடைந்த அவ்விடத்தில், நாம் தற்போது நிற்கிறோம். அவர் இவ்விடத்தில் கூறிய 'ஆகட்டும்' என்ற சொல்லால், நமது மீட்பு உறுதியாயிற்று.
இயேசுவின் இறுதிநேரம் நெருங்கிவந்தபோது, அவருடையச் சீடர்கள் பல்வேறு உணர்வுகளை வெளிப்படுத்தினர். மிக நெருக்கமான பிணைப்பு, தூர விலகும் மனம், தயக்கம் என்ற பல உணர்வுகள் வெளிப்பட்டன. இவ்வுணர்வுகளில் சிக்குண்டிருந்த சீடர்களின் துணையைவிட, இயேசு அந்நேரத்தில் செபத்தின் துணையைத் தேடினார்.
இவ்விடத்தில், நாம் ஒவ்வொருவரும் - ஆயர்கள், அருள்பணியாளர்கள், துறவியர், அருள் பணியாளர் பயிற்சியில் இருப்போர், ஆகிய நாம் ஒவ்வொருவரும் - கேட்கக்கூடிய கேள்வி: ஆண்டவரின் துயரங்களுக்கு முன், நான் யார்?
தன்னோடு விழித்திருந்து செபிக்கும்படி இயேசு கேட்டபோது, அதிலிருந்து தப்பி, உறங்கிப் போனவர்களில் நானும் ஒருவரா?
அல்லது, அவரது மிக நெருக்கடியானத் தருணத்தில், அவரைவிட்டு ஓடிப்போனவர்களில் ஒருவரா?
இயேசுவால் 'நண்பன்' என்று அழைக்கப்பட்டாலும், முப்பது வெள்ளிக் காசுகளுக்காக அவரைக் காட்டிக்கொடுக்க முன்வந்தவரைப் போல என்னிலும் பொய்மை உள்ளதா?
அல்லது, அவரை எனக்குத் தெரியாது என்று மறுத்த பேதுருவில் என்னைக் காண்கிறேனா?
இயேசுவை விட்டு விலகி, தங்கள் வாழ்வுத் திட்டங்களை வகுத்துக்கொள்ள எம்மாவு என்ற ஊருக்குச் சென்ற சீடர்களைப் போல நான் இருக்கிறேனா?
அல்லது, அத்தனைத் துன்பங்கள் மத்தியிலும் இயேசுவைத் தொடர்ந்து சென்று, இறுதியில், சிலுவையடியில் நின்ற இயேசுவின் தாயைப் போல, அன்புச் சீடரைப் போல, நான் இருக்கிறேனா?
நமது தவறுகள், காட்டிக்கொடுத்தல் ஆகியவற்றைப் பற்றி கவலைப்படாமல், நம்மீது எப்போதும் அன்புகாட்டும் இயேசுவின் நட்பு, அளவற்ற மதிப்புள்ள ஒரு பரிசு.
இயேசுவின் நட்பு இருந்தால், எவ்விதச் சோதனையும் நம்மை அணுகாது என்பது பொருளல்ல. சோதனைகள் நம்மைத் தாக்கும், எனவே, விழிப்பாய் இருப்பது அவசியம். நம் சோதனைகள், வீழ்ச்சிகள் மத்தியிலும், அவரது அளவற்ற அன்பு நமக்கு உண்டு என்ற நம்பிக்கையை இழக்காமல் இருப்போமாக!
அன்பு சகோதர, சகோதரிகளே, புனித பூமியில் ஆண்டவரைத் தொடர நீங்கள் அழைக்கப்பெற்றுள்ளீர்கள்! இது ஒரு மாபெரும் கோடை, அதேநேரம், பெரும் பொறுப்பு! புனித பூமியில் உங்கள் பிரசன்னம் மிக அர்த்தமுள்ளது. கத்தோலிக்கத் திருஅவையைச் சேர்ந்த அனைவரும் தங்கள் செபங்களால் உங்களுக்கு உறுதுணை தருகின்றனர்.
இப்புனித இடத்திலிருந்து, எருசலேமில் வாழும் அனைத்து கிறிஸ்தவர்களுக்கும் என் வாழ்த்துக்களை அனுப்புகிறேன். சிறப்புமிக்க இந்நகரில் பல்வேறு துன்பங்கள், போராட்டங்கள் மத்தியில், அவர்கள் உறுதி வாய்ந்த சாட்சிகளாக வாழ நான் செபிக்கிறேன்.
அன்னை மரியாவையும், அன்புச் சீடர் யோவானையும் பின்பற்றி, நாம் சிலுவையடியில் நிற்போம். எங்கெல்லாம் மனிதர்கள் சிலுவையில் அறையப்பட்டுள்ளனரோ, அவர்களுடன் நாமும் துணையாய் நிற்போம்!

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.