2014-05-26 17:27:31

திருத்தந்தை பிரான்சிஸ், இஸ்லாமியத் தலைவரைச் சந்திக்கையில் ஆற்றிய உரை


மே,26,2014. பெருந்தகையே, இஸ்லாமிய நம்பிக்கை கொண்டோரே, அன்பு நண்பர்களே, இந்தப் புனித பூமியில் வாழும் இஸ்லாமிய நண்பர்களாகிய உங்களைச் சந்திக்காமல், என் திருப்பயணம் முழுமை அடையாது என்பதால், உங்களைச் சந்திக்க வந்திருக்கிறேன்.
இத்தருணத்தில் ஆபிரகாமை எண்ணிப் பார்க்கிறேன். இஸ்லாமியர், கிறிஸ்தவர், யூதர் ஆகிய நாம் ஆபிரகாமை, பல கோணங்களில் பார்த்து வருகிறோம். அவர் வாழ்வும், நம்பிக்கையும் நமக்குச் சிறந்த பாடங்கள். அவர் தன் சொந்த நாட்டைவிட்டு, இந்தப் பூமியில் வாழவந்த ஒரு திருப்பயணி.
திருப்பயணியாகும் ஒருவர் தன்னையே வறுமையாக்கி, உண்மை நோக்கியப் பயணத்தை மேற்கொள்பவர். இவ்விதம் பயணித்த ஆபிரகாமிடம் விளங்கிய மனநிலை நம்மிடையிலும் உருவாக வேண்டும்.
நமது பயணத்தில் நாம் தனித்துச் செல்வதில்லை. மற்றவர்களோடு பயணிக்கிறோம், அல்லது அவர்களுடன் சேர்ந்து இளைப்பாறுகிறோம். அத்தகைய ஒரு தருணமே, நாம் இங்கு கூடியிருப்பது. இதற்காக நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.
திருப்பயணியான ஆபிரகாமை, நேரிய வாழ்வுக்கும், அமைதிக்கும் இறைவன் அழைத்தார். நேரிய வாழ்வு வாழ, அமைதியை வளர்க்க நம்மையும் இறைவன் அழைக்கிறார்.
ஆபிரகாமை வாழ்வின் எடுத்துக்காட்டாகக் கொண்டுள்ள அனைத்து மதத்தினருக்கும் நான் விடுக்கும் வேண்டுகோள், இப்புனிதத்தலத்திலிருந்து எழுகிறது. நாம் அனைவரும் ஒருவர், ஒருவரை உடன்பிறந்தோராய் ஏற்போமாக! பிறரின் துன்பங்களைப் புரிந்துகொள்வோமாக! வன்முறைகளுக்காக, கடவுளின் பெயரைத் தவறாகப் பயன்படுத்தாமல் இருப்போமாக! அனைவரும் இணைந்து, நீதிக்கும், அமைதிக்கும் உழைப்போமாக! சலாம்!

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.