2014-05-26 17:20:15

திருத்தந்தை பிரான்சிஸ், இஸ்ரேல் நாட்டு விமானத்தளத்தில் ஆற்றிய உரை


மே,26,2014. அரசுத் தலைவரே, பிரதமரே, மதிப்பிற்குரியவர்களே, உங்கள் வரவேற்பிற்கு நன்றி. அரசுத் தலைவர், Shimon Peres அவர்களையும், பிரதமர் Benjamin Netanyahu அவர்களையும் நான் வத்திக்கானில் சந்தித்ததை மகிழ்வுடன் எண்ணிப் பார்க்கிறேன். எனது முன்னோர் திருத்தந்தை 6ம் பவுல் அவர்கள் இங்கு வந்ததன் 50ம் ஆண்டைச் சிறப்பிக்க நான் இங்கு வந்துள்ளேன். இந்த 50 ஆண்டுகளில் வத்திக்கானுக்கும், இஸ்ரேல் நாட்டிற்கும் இடையே வரவேற்கத்தக்க வகையில் உறவுகள் வளர்ந்துள்ளன.
ஒரே கடவுள் என்ற நம்பிக்கை கொண்ட யூதம், கிறிஸ்தவம், இஸ்லாம் என்ற மூன்று மதங்களின் பிறப்பு, வளர்ச்சி என்பனவற்றில் தொடர்புடைய புனித பூமியில், என் முன்னோராகிய மூன்று திருத்தந்தையரைப் போல, நானும் ஒரு திருப்பயணியாக வந்துள்ளேன்.
தங்கள் மதம் மட்டுமே உண்மை என்ற அடிப்படைவாத எண்ணங்களால், மற்ற மதங்களை ஏற்றுக்கொள்ளாமல், வன்முறையை வளர்ப்போருக்கு, இந்தப் புனித பூமியில் இடமில்லை.
எருசலேம் நகரம் உலக மக்கள் அனைவருக்கும் அர்த்தமுள்ள ஒரு முக்கிய நகரம். 'அமைதியின் நகரம்' என்று அழைக்கப்படும் எருசலேமில், கடந்த பல ஆண்டுகளாக அமைதி குலைந்திருப்பது வேதனை தருகிறது. அமைதி என்ற கொடை இஸ்ரேல் நாட்டுக்கு மட்டுமல்ல, இப்பகுதிக்கே அதிகம் தேவைப்படுகிறது. இஸ்ரேல் மக்களும், பாலஸ்தீனியர்களும் அமைதியில் வாழ, அதிகாரத்தில் இருப்போர் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். பன்னாட்டுச் சமுதாயத்தால் வரையறுக்கப்பட்டுள்ள எல்லைகளை ஏற்றுக்கொண்டு, இவ்விரு நாடுகளும் தனித் தனி நாடுகளாக மதிப்புடன் வாழ்வது அவசியம்.
இஸ்ரேல் நாட்டில் நான் மேற்கொள்ளும் திருப்பயணத்தின் ஒரு முக்கியமான, அதேநேரம், மனதுக்கு வருத்தமான இடம் Yad Vashem நினைவு மண்டபம். 'யூத இன அழிப்பு' என்ற கொடுமையான வன்முறையில் உயிரிழந்த 60 இலட்சத்திற்கும் அதிகமான யூதர்களுக்கென எழுப்பப்பட்டுள்ள நினைவு மண்டபம்.
ஒவ்வொரு மனிதரும் மதிப்பிற்குரியவர் என்ற உண்மையை மறுத்து, பொய்யான கொள்கைகளால் உருவான இந்தப் பெருங்குற்றம், இனியொரு முறை மனித வரலாற்றில் நடைபெறக்கூடாது என்று இறைவனிடம் வேண்டுகிறேன்.
நேற்று Brussels நகரில் இடம்பெற்றத் தாக்குதலில் உயிரிழந்தோரை, கனத்த இதயத்துடன் எண்ணிப் பார்க்கிறேன். யூத எதிர்ப்பு என்ற வெறுப்பை, வன்மையாய்க் கண்டனம் செய்கிறேன். இறந்தோரை, இறைவனின் கரங்களில் ஒப்படைக்கிறேன்.
அரசுத் தலைவர் அவர்களே, அரசுத் தலைவர் மஹ்முத் அப்பாஸ் அவர்களுடன், உங்களையும் வத்திக்கானுக்கு அழைக்கிறேன். வத்திக்கானில் உள்ள என் இல்லத்தில், என்னோடு இணைந்து, அமைதிக்காக இறைவனிடம் செபிக்க வாருங்கள்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.