2014-05-26 17:53:23

கத்தோலிக்க மற்றும் Ecumenical கிறிஸ்தவ சபைகளிடையே கையெழுத்திடப்பட்ட பொது அறிக்கையின் சுருக்கம்.


மே,26,2014. வாழ்வு, குடும்பம், படைப்பு, மற்றும் மதங்களிடையேயான அமைதி மற்றும் பேச்சு வார்த்தைகளுக்கு ஒன்றிணைந்த சாட்சிகளாக கிறிஸ்தவர்கள் விளங்கவேண்டிய தேவையை இந்த அறிக்கை முதலில் வலியுறுத்துகிறது. மத்திய கிழக்குப் பகுதியில் துன்புறும் மக்கள் குறித்தும், வன்முறைகளாலும், பாராமுகங்களாலும் கைவிடப்பட்ட மக்கள் குறித்தும் பார்வையை திருப்பி, மனித குலத்திற்கு உதவவேண்டிய கிறிஸ்தவர்களின் கடமையையும் வலியுறுத்தியுள்ளனர் இருதலைவர்களும்.
ஒன்றிப்பை நோக்கிய பாதையில் இதுவரை கிட்டியுள்ள வெற்றிகளுக்காக இறைவனுக்கு நன்றிகூறும் அதேவேளை, மேலும் முழு ஒன்றிப்பை நோக்கி நடைபோடுவதற்கான அர்ப்பணத்தை தாங்கள் உறுதிச் செய்வதாக இரு தலைவர்களும் அவ்வறிக்கையில் அறிவித்துள்ளனர்.
ஒரே திருநற்கருணை விருந்தில் பங்குகொள்ளும் நாளுக்காக ஆவலுடன் காத்திருப்பதாகவும், உண்மையான, சகோதரத்துவ பேச்சுவார்த்தைகளில் தொடர்ந்து ஈடுபட்டு, ஒருவர் ஒருவரின் கொடைகளை பகிர்ந்துகொள்ள உறுதிகொள்வதாகவும் கூறியுள்ளனர் தலைவர்கள்.
முழு ஒன்றிப்பிற்கான இப்பாதையில் நாம் ஒன்றிணைந்த சாட்சியம் வழங்கவேண்டியதன் தேவையை வலியுறுத்தும் அதேவேளை, இறைவனின் படைப்பை நீதியுடனும் நியாயத்துடனும் பாதுகாக்கவேண்டியதன் அவசியத்தையும் இவ்வறிக்கை வலியுறுத்துகிறது. ஒருவருடைய விசுவாசத்தை, சுதந்திரமாக வெளிப்படுத்துவதற்கான உரிமை மதிக்கப்படுவதை உறுதி செய்வதில் கிறிஸ்தவர்கள் ஒன்றிணைந்து உழைக்கவேண்டியதையும் வலியுறுத்தும் இவ்வறிக்கை, மத்தியக்கிழக்குப் பகுதியில் துன்புறும் மக்கள், மற்றும் இவ்வுலகில் கைவிடப்பட்டதாக உணரும் மக்கள் குறித்தும் இருதலைவர்களின் ஆழ்ந்த கவலையையும் தெரிவிக்கிறது.
இறுதியில், அனனை மரியாவின் வழிகாட்டுதலை வேண்டி, தங்கள் பொது அறிக்கையை நிறைவு செய்துள்ளனர் Ecumenical கிறிஸ்தவ சபையின் முதுபெரும் தந்தை பர்த்தலோமேயோ அவர்களும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.