2014-05-25 15:29:28

திருத்தந்தையின் புனித பூமி பயணம் 2ம் நாள் – பாலஸ்தீனம் : பெத்லகேம் திருப்பலியில் திருத்தந்தையின் மறையுரை


மே,25,2014. அன்புச் சகோதர, சகோதரிகளே,
"குழந்தையைத் துணிகளில் சுற்றித் தீவனத் தொட்டியில் கிடத்தியிருப்பதைக் காண்பீர்கள்; இதுவே உங்களுக்கு அடையாளம்" (லூக்கா 2:12)
இயேசு பிறந்த இடத்தில் திருப்பளியைக் கொண்டாடுவது எவ்வளவு பெரிய பேறு! இதற்காக இறைவனுக்கு நன்றி கூறுகிறேன்! இத்திருப்பயணத்தில் என்னை வரவேற்ற உங்களுக்கும் நன்றி கூறுகிறேன்!
மீட்பை எதிர்பார்த்திருந்தோருக்கு இறைவனால் வழங்கப்பட்ட அடையாளம், பெத்லகேமில் பிறந்த குழந்தை இயேசு. கடவுளின் கருணை நிறைந்த பிரசன்னம் இவ்வுலகில் தொடர்ந்து இருப்பதற்கு இக்குழந்தையே அடையாளம்.
இன்றும், குழந்தைகள் ஓர் அடையாளம். நம்பிக்கையின், வாழ்வின் அடையாளமாக விளங்கும் குழந்தைகள், நமது சமுதாயமும், இவ்வுலகமும் நலமாக உள்ளதா என்பதைக் காட்டும் அடையாளம். குழந்தைகள் ஏற்கப்பட்டு, அன்பு கூரப்பட்டு, பாதுகாக்கப்பட்டால், அக்குடும்பம் நலமாக இருக்கும், சமுதாயமும், உலகமும் நலமாக இருக்கும்; மனிதாபிமானம் நிறைந்ததாக இருக்கும். 21ம் நூற்றாண்டில் வாழும் நம் ஒவ்வொருவரையும் பார்த்து, கடவுள் கூறுவது இதுதான்: "இதுவே உங்களுக்கு அடையாளம்", குழந்தைகளைப் பாருங்கள்!
பிறக்கும் ஒவ்வொரு குழந்தையைப் போலவே, பெத்லகேம் குழந்தையும் வலுவற்ற நிலையில் பிறந்தது. இக்குழந்தையும், உலகின் அனைத்துக் குழந்தைகளும், கருவில் உருவாகும் நேரம் முதல் ஏற்றுக்கொள்ளப்பட்டு, பாதுகாக்கப்பட வேண்டும்.
இவ்வுலகம் பல்வேறு வழிகளில் முன்னேறியிருந்தாலும், குழந்தைகளை ஏற்றுக்கொள்ளாமல், ஓரங்களில் தள்ளுவது, வருத்தம் தருகிறது. மிக அதிகமான குழந்தைகள், பல்வேறு வன்முறைகளுக்கும், சொல்லமுடியாத துன்பங்களுக்கும், அடிமைத் தனத்திற்கும் உள்ளாக்கப்படுகின்றனர்.
குழந்தை இயேசுவின் முன் நிற்கும் இவ்வேளையில், நாம் யார் என்ற கேள்வியை எழுப்பவேண்டும். குழந்தை இயேசுவை வரவேற்று, அன்புடன் பராமரித்த அன்னை மரியாவாக, புனித யோசேப்பாக நாம் இருக்கிறோமா? அல்லது, இயேசுவைக் கொன்றுவிடத் துடித்த ஏரோதாக இருக்கிறோமா? இயேசுவைக் காண ஆவலுடன் காணிக்கைகளை எடுத்துச் சென்ற இடையர்களாக இருக்கிறோமா? அல்லது குழந்தை இயேசுவின் மட்டில் எவ்வித ஆர்வமும் இன்றி இருக்கிறோமா? பக்தி நிறைந்த அழகான வார்த்தைகளைப் பயன்படுத்திக்கொண்டு, அதேநேரம், திக்கற்ற, வறியக் குழந்தைகளின் படங்களைப் பயன்படுத்தி பணம் சேர்ப்பவர்களாக இருக்கிறோமா? நாம் குழந்தைகளுடன் நேரத்தைச் செலவிட தாயாராக இருக்கிறோமா? அவர்களுடன் உண்டு, உறவாடி, அவர்கள் சொல்வதைக் கேட்டு, அவர்களுடன் செபிக்கத் தயாராக இருக்கிறோமா? அல்லது, நமது வேலைகளில் மூழ்கி, அவர்களைப் புறக்கணிக்கிறோமா?
அழுகின்ற குழந்தை, பசியால் அழலாம்; குளிரினால் துடிக்கலாம்; அரவணைப்பிற்காக ஏங்கலாம். இன்றும், அழுகின்ற குழந்தைகள் நமக்குச் சவால்களாக விளங்குகின்றனர். பல டன் எடையுள்ள உணவும், மருந்தும் ஒவ்வொரு நாளும் குப்பையில் கொட்டப்படும் இன்று, பசியால், நோயால் அழும் குழந்தைகளின் அழுகுரல் வீணாய்ப் போகிறது.
குழந்தைகளையும், சிறாரையும் காப்பதற்கு, பல சட்டங்கள் உருவானாலும், ஆயுத விற்பனைக்கும், ஆயுதம் ஏந்திப் போராடும் வீரர்களாகவும் குழந்தைகள் பயன்படுத்தப்படுகின்றனர். அவர்கள் எழுப்பும் அழுகுரல் அடக்கப்படுகிறது. அழுவதற்கு அவர்களுக்கு நேரம் கிடையாது; அவர்கள் வேலை செய்யவேண்டும் என்று கட்டாயப்படுத்தப் படுகின்றனர். ஆனால், அக்குழந்தைகளின் அன்னையர் அழுகின்றனர். அன்று இராகேல் அழுததுபோல், இவர்கள் இன்று அழுகின்றனர்; அவர்கள் ஆறுதல் பெற மறுக்கின்றனர். (மத். 2:18)
மரியே, இயேசுவின் தாயே,
ஏற்றுக்கொண்ட நீர், நாங்கள் எவ்விதம் ஏற்றுக்கொவது என்பதைச் சொல்லித் தாரும்
ஆராதனை செய்த நீர், நாங்கள் எவ்விதம் ஆராதனை செய்வது என்பதைச் சொல்லித் தாரும்
பின்பற்றிய நீர், நாங்கள் எவ்விதம் பின்பற்றுவது என்பதைச் சொல்லித் தாரும்
ஆமென்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.