2014-05-25 15:28:21

திருத்தந்தையின் புனித பூமி பயணம் 2ம் நாள் – பாலஸ்தீனம் : பாலஸ்தீனம், இஸ்ரேல் நாட்டுத் தலைவர்கள் வத்திக்கானுக்கு வந்து அமைதிக்காக செபிக்கும்படி திருத்தந்தை விடுத்த சிறப்பு அழைப்பு


மே,25,2014. அமைதியின் இளவரசர் பிறந்த இவ்விடத்தில், நான் ஒரு சிறப்பான அழைப்பை முன்வைக்கிறேன். அரசுத் தலைவர், மஹ்முத் அப்பாஸ் அவர்களே, நீங்கள், (இஸ்ரேல்) அரசுத் தலைவர் Shimon Peres அவர்களுடன், வத்திக்கானுக்கு வருகை தந்து, என்னுடன் சேர்ந்து, அமைதி என்ற கொடைக்காக இறைவனிடம் மன்றாட உங்களை அழைக்கிறேன். வத்திக்கானில் உள்ள எனது இல்லத்தை, இந்த செபம் கலந்த சந்திப்பின் இடமாக நான் வழங்குகிறேன்.
நாம் அனைவரும் அமைதியை விரும்புகிறோம். பல மனிதர்கள் சிறு, சிறு செயல்கள் வழியே, தங்கள் வேதனைகள் வழியே அமைதியைக் கட்டியெழுப்புகின்றனர். எத்தகையத் தடைகள் வந்தாலும், அமைதியை உருவாக்குவோர், பொறுமையாய், மனம் தளராமல் பணியாற்றுகின்றனர். நாம் அனைவரும் அமைதியை வளர்க்க அழைக்கப்பட்டுள்ளோம்; குறைந்த அளவு, நம் செபத்தின் வழியே, அமைதியின் கருவிகளாக வாழ்வோம்.
அமைதியைக் கட்டியெழுப்புவது கடினம். ஆனால், அமைதியற்ற உலகில் வாழ்வது, தொடர்ந்து நிகழும் சித்ரவதை. இவ்விரு நாடுகளில் வாழும் மக்கள், அமைதியை விரும்பும் தங்கள் நம்பிக்கையை இறைவன் முன்னிலையில் கொணர, அவர்கள் நம்மிடம் கேட்கின்றனர்.
பெத்லகேமில் இருக்கும் இவ்வேளையில் என் மனம் நாசரேத்தை எண்ணிப் பார்க்கிறது. இறைவனுக்கு விருப்பமானால், மற்றொரு முறை நான் இங்கு வந்து நாசரேத்தைக் காணும் வரம் அருள்வாராக! இங்கிருந்தபடியே, கலிலேயாவில் வாழும் அனைவரையும் நான் அரவணைக்கிறேன். நாசரேத்தில் கட்டப்பட்டுவரும் அனைத்துலகக் குடும்ப மையத்திற்கு என் ஆதரவை வழங்குகிறேன்.
மனித குடும்பத்தின் எதிர்காலத்தை மிகப் புனித மரியாவின் காவலில் ஒப்படைக்கிறோம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.