2014-05-24 16:57:45

திருத்தந்தையின் புனித பூமி பயணம் முதல் நாள் – ஜோர்டான் நாட்டில் திருத்தந்தை


மே,24,2014. அண்மையக் காலத் திருத்தந்தையரின் திருப்பயணங்கள், திருத்தந்தை 6 பால் அவர்களுடன் துவங்கின. அதிலும் சிறப்பாக, இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம் வத்திக்கானில் இடம்பெற்ற காலக்கட்டத்தில், 1964ம் ஆண்டு, சனவரி மாதம் 4ம் தேதி, திருத்தந்தை 6ம் பால் அவர்கள் துவங்கியத் திருப்பயணம், ஜோர்டான் நாட்டில் ஆரம்பித்து, சரியாக 3 நாட்கள் நடைபெற்றது. 50 ஆண்டுகளுக்குப் பின், இவ்வாரம் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ள 3 நாட்கள் புனித பூமி திருப்பயணமும் ஜோர்டானில் துவங்கி, இஸ்ரேல் நாட்டில் முடிகிறது.
இவ்விரு திருப்பயணங்களுக்கும் மற்றொரு முக்கிய ஒற்றுமையும் உள்ளது. அன்று திருத்தந்தை 6ம் பால் அவர்கள், Ecumenical கிறிஸ்தவ சபையின் முதுபெரும் தந்தை Athenagoras அவர்களை எருசலேமில் சந்தித்த வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வின் 50ம் ஆண்டு நிறைவையொட்டி, இன்றையத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கும், கிறிஸ்தவ ஒன்றிப்பு சபையின் முதுபெரும் தந்தை Bartholomeo அவர்களுக்கும் இடையே எருசலேமில் மற்றொரு சந்திப்பு நடைபெறவுள்ளது.
புனித பூமியில் தான் மேற்கொள்ளும் மூன்று நாள் திருப்பயணத்தையோட்டி இச்சனிக்கிழமை காலை உரோம் நேரம் 8.33 மணிக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் உரோம் நகர் Fuimicino விமான தளத்திலிருந்து தன் பயணத்தைத் துவக்கினார். அப்போது இந்திய நேரம், நண்பகல் 12.03. ஒவ்வொரு திருப்பயணத்தின் போதும், திருத்தந்தையர், வான்வழியே தாங்கள் கடந்து செல்லும் நாடுகளின் தலைவர்களுக்கும் மக்களுக்கும் செய்தி அனுப்புவதுபோல், இத்திருப்பயணத்தின் போதும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், விமானத்திலிருந்தே இத்தாலிய அரசுத்தலைவர் Giorgio Napolitano அவர்களுக்கும், கிரேக்கம், சைப்ரஸ், இஸ்ரேல் ஆகிய நாடுகளின் தலைவர்களுக்கும் வாழ்த்துச் செய்திகளை அனுப்பினார். திருத்தந்தையின் செய்திக்கு உடனடியாக பதிலிருக்கும் வண்ணம், வாழ்த்துத் தந்தி வழியே நன்றியை வெளியிட்டுள்ள இத்தாலிய அரசுத் தலைவர் Napolitano அவர்கள், மத்தியக் கிழக்குப் பகுதியில் அமைதிக்காக உழைத்துவரும் மக்களிடையே திருத்தந்தையின் இத்திருப்பயணம் புது நம்பிக்கையை விதைக்கும் என்ற தன் எதிர்பார்ப்பையும் வெளியிட்டுள்ளார்.
உரோம் நகரிலிருந்து காலை ஏறத்தாழ 8.30 மணிக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களையும், அனைத்துலக பத்திரிகையாளர்கள் ஏறத்தாழ 70 பேரையும் தாங்கிச் சென்ற Alitalia விமானம், ஜோர்டான் நாட்டுத் தலைநகர் Ammanக்கும், உரோம் நகருக்கும் இடைப்பட்ட 2365 கிலோ மீட்டர்களை 3 மணி 30 நிமிடத்தில் கடந்து, Amman நகர், 'அரசி அலியா' விமானத்தளத்தை அடைந்தபோது, உள்ளூர் நேரம், அதாவது, ஜோர்டான் நேரம், நண்பகல் 1 மணி. அப்போது இந்திய நேரம், பிற்பகல், 3.30.
Amman 'அரசி அலியா' பன்னாட்டு விமானத்தளத்தில் ஜோர்டான் மன்னர் 2ம் அப்துல்லா அவர்களின் சார்பில், இளவரசர், Ghazi Bin Muhammed அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை வரவேற்றார். எருசலேமின் இலத்தீன் வழிபாட்டு முறை முதுபெரும் தந்தை, Foud Twal அவர்கள், புனித பூமியின் புனித இடங்களுக்கு, திருஅவையின் சார்பில் பொறுப்பாளராகப் பணியாற்றும் அருள் பணியாளர், Pierbattista Pizzaballa அவர்கள், திருப்பீடத் தூதர், பேராயர் Giorgio Lingua அவர்கள் உட்பட பல திருஅவைத் தலைவர்களும், அங்கு குழுமியிருந்தனர்.
அங்கிருந்தோர் அனைவரையும் சிறிது நேரம் சந்தித்து வாழ்த்தியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 15 நிமிடங்கள் சென்று மன்னரின் அரண்மனை நோக்கி காரில் பயணமானார். விமானத் தளத்திலிருந்து 38 கி.மீ. தொலைவிலுள்ள அரண்மனையை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அடைந்ததும், அரண்மனை வாசலில் காத்திருந்த மன்னரும், அரசியும் திருத்தந்தையை அரண்மனை உள் வளாகத்திற்கு அழைத்துச் சென்றனர். அரண்மனைக்கு முன் அமைந்துள்ள உள் வளாகத்தில் திருத்தந்தைக்கு இராணுவ மரியாதை வழங்கப்பட்ட வேளையில், ஜோர்டான், மற்றும் வத்திக்கான் நாடுகளின் நாட்டுப் பண்கள் இசைக்கப்பட்டன. அதன்பின், மன்னர் திருத்தந்தையுடன் அரண்மனைக்குள் நுழைந்தார். அங்கு, இரு தலைவர்களுக்கும் இடையே தனியாக கலந்துரையாடல்கள் இடம்பெற்றபின், பரிசுப் பொருள்கள் பகிர்ந்துகொள்ளப்பட்டன.
நான்கு குழந்தைகளைக் கொண்ட மன்னர் இரண்டாம் அப்துல்லாவின் குடும்பத்தைச் சந்தித்து சிறிது நேரம் உரையாடியத் திருத்தந்தையிடம், மன்னர் அப்துல்லா அவர்கள், ஏனைய அரசு அதிகாரிகளை அறிமுகப்படுத்தினார்.
பின்னர், அரண்மனையின் பெரிய அறையில் உயர் அதிகாரிகள், நாடுகளின் தூதர்கள், மதத்தலைவர்கள் என ஏறத்தாழ 300 பேர் குழுமியிருக்க, முதலில் மன்னர் இரண்டாம் அப்தல்லா திருத்தந்தையை வரவேற்றுப் பேசினார். அதன்பின், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும் அந்நாட்டிற்கான தன் முதல் உரையை அளித்தார். மன்னருடனும் உயர் அதிகாரிகளுடனும் இடம்பெற்ற இச்சந்திப்பிற்குப் பின் அங்கிருந்து 11 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள அமானின் சர்வதேச அரங்கிற்குச் சென்றார் திருத்தந்தை பிரான்சிஸ். உள்ளூர் நேரம் பிற்பகல் 3.30 மணிக்கு அதாவது இந்திய நேரம் மாலை 6 மணிக்கு அந்த அரங்கிற்கு வந்த திருத்தந்தை பிரான்சிஸ், அரைமணி நேரத்தில் திருப்பலியைத் துவக்கினார். பெருமெண்ணிக்கையில் பாலஸ்தீனம், ஈராக், மற்றும் சிரியாவின் அகதிகள் உட்பட ஏறத்தாழ 50,000 ஆயிரம்பேர் அங்கு குழுமியிருந்தனர். அண்மை நாடுகளின் அகதி மக்களுக்கு ஜோர்டான் நாடு அடைக்கலம் கொடுத்து பல்வேறு உதவிகளை ஆற்றிவருவதை நாம் இங்கு குறிப்பிட்டேயாக வேண்டும். திருத்தந்தையின் திருப்பலியில், அகதி மக்களின் குழந்தைகள் உட்பட, 1,400 குழந்தைகள் புதுநன்மை பெற்றனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.