2014-05-24 16:46:36

திருத்தந்தையின் புனித பூமி பயணம் முதல் நாள் - ஜோர்டான்: மன்னர் அரண்மனையில் வழங்கிய உரை


மே,24,2014. என் முன்னோர்களான திருத்தந்தையர் 6ம் பால், 2ம் ஜான்பால், 16ம் பெனடிக்ட் ஆகியோரின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி, ஜோர்டான் அரசுக்கு வரும் வாய்ப்பைத் தந்த இறைவனுக்கு நன்றி கூறுகிறேன். என்னை இங்கு வரவேற்றுப் பேசிய மன்னர், 2ம் அப்துல்லா அவர்களுக்கு நன்றி. அவரும், நானும் வத்திக்கானில் அண்மையில் சந்தித்ததை மகிழ்வுடன் நினைவுகூருகிறேன். மன்னரின் குடும்பத்தினரையும், அரசு அதிகாரிகளையும், மக்களையும் வாழ்த்துகிறேன். யூத, கிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்களின் வரலாற்றில், ஜோர்டான் நாடு முக்கியப் பங்கு வகிக்கிறது.
பிற நாடுகளிலிருந்து புலம் பெயர்ந்து வந்துள்ள பலரை, ஜோர்டான் நாடு வரவேற்றுள்ளது. குறிப்பாக, பாலஸ்தீனம், ஈராக், ஆகிய நாடுகளிலிருந்தும், மிக நீண்ட போராட்டத்தால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள அண்மைய நாடான சிரியாவிலிருந்தும் வந்திருப்போரை இந்நாடு வரவேற்றுள்ளது. நீங்கள் காட்டியுள்ள தாராள மனப்பான்மையை மதிக்கவும், உங்களுக்கு ஆதரவு தரவும் வேண்டியது உலக நாடுகளின் ஒரு முக்கியக் கடமை. கத்தோலிக்கத் திருஅவை, ஜோர்டான் காரித்தாஸ் அமைப்பின் வழியே தன்னால் இயன்ற உதவிகளை புலம்பெயர்ந்தோருக்கு ஆற்றி வருகிறது.
மத்தியக் கிழக்குப் பகுதியில் தொடர்ந்து நிலவும் நெருக்கடிகள் மிகுந்த மனவேதனையைத் தருகிறது என்று கூறும் அதே நேரத்தில், ஜோர்டான் அரசு செய்துவரும் உதவிகளுக்கு நன்றியும் கூறுகிறேன். இப்பகுதியில் நிலையான அமைதியை உருவாக்க நீங்கள் மேற்கொண்டுவரும் முயற்சிகளில் மனம் தளராமல் ஈடுபட உங்களை ஊக்குவிக்கிறேன். சிரியாவில் உருவாகியுள்ள நெருக்கடிகளுக்கு அமைதி நிறைந்த தீர்வு காண்பதும், இஸ்ரேல்-பாலஸ்தீன மோதலில் நீதியான தீர்வு காண்பதும் இப்பகுதியின் அமைதிக்கு, அவசரத் தேவைகள்.
இஸ்லாமியச் சமுதாயத்தின் பேரில் நான் கொண்டுள்ள ஆழ்ந்த மரியாதையை மீண்டும் ஒருமுறை வலியுறுத்த விழைகிறேன். பல்வேறு மதத்தினரும் அமைதியில் இணைந்து வாழ்வதற்குக் கூறப்பட்டுள்ள இஸ்லாமியக் கோட்பாடுகளை வளர்ப்பதற்கு, ஜோர்டான் மன்னர் முயற்சிகள் மேற்கொண்டு வருவதை நான் பாராட்டுகிறேன். யூதர், கிறிஸ்தவர், இஸ்லாமியர் ஆகியோரிடையே உரையாடல்களை வளர்க்க ஜோர்டான் நாடு பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது. 'மதங்களிடையே ஒற்றுமை வாரம்' என்பதை ஜோர்டான் நாடு ஒவ்வோர் ஆண்டும் கொண்டாடுவதையும், ஐ.நா.அவையில் இந்நாடு வெளியிட்டுள்ள 'அம்மான் செய்தி'யும் இங்கு சிறப்பாக நினைவுகூரப்பட வேண்டும்.
திருத்தூதர்கள் காலம் முதல், இந்நாட்டில் தங்கியுள்ள கிறிஸ்தவச் சமுதாயத்திற்கு என் அன்பான வாழ்த்துக்களைக் கூறுகிறேன். இந்நாட்டின் பொதுநலனில் அக்கறை கொண்ட சமுதாயம், கிறிஸ்தவ சமுதாயம். முன்பிருந்ததைவிட, கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை குறைந்திருப்பினும், பள்ளிகள், மருத்துவமனைகள் வழியே, இவர்கள் ஆற்றிவரும் பணி முக்கியமானது. மதச் சுதந்திரம் நிலவிவரும் இந்நாட்டில், கிறிஸ்தவர்கள் அமைதியான முறையில் தங்கள் நம்பிக்கையை அறிக்கையிட்டு வருகின்றனர்.
மதச் சுதந்திரம் என்பது ஒவ்வொரு மனிதரின் அடிப்படை உரிமை. இவ்வுரிமையை, மத்தியக் கிழக்குப் பகுதி நாடுகளும், உலக நாடுகளும் மதித்து வளர்க்கும் என்று நம்புகிறேன். ஒவ்வொருவரும் தங்கள் மனச்சான்றின் வழி நடப்பது, தனிப்பட்ட வகையிலும், பொது இடங்களிலும் தங்கள் மத நம்பிக்கையை வெளிப்படுத்துவது ஆகியவை, மதச் சுதந்திரத்தின் அடிப்படைக் கூறுகள். கிறிஸ்தவர்கள், அவர்கள் வாழும் நாட்டில் முழுமையான குடிமக்களாக வாழ்வதையும், இஸ்லாமியக் குடிமக்களுடன் உடன்பிறந்த உணர்வுடன் வாழ்வதையும் விரும்புகின்றனர்.
இறுதியாக, ஜோர்டான் அரசின் மீது அமைதியும் வளமும் பெருகவேண்டுமென ஆசிக்கிறேன். என்னுடைய வருகையால், கிறிஸ்தவ இஸ்லாம் உறவு வளரவும், வலுப்பெறவும் ஆசிக்கிறேன்.
நீங்கள் அளித்த வரவேற்பிற்கு நன்றி. ஜோர்டான் மன்னர் குடும்பத்திற்கும், நாட்டு மக்களுக்கும் இறைவன் மகிழ்வையும், நீடிய அமைதியையும் தருவதற்கு இறைவனிடம் வேண்டுகிறேன்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.