2014-05-23 17:05:24

மே 24,2014. புனிதரும் மனிதரே. - இறந்த ஓராண்டிற்குள் புனிதராக அறிவிக்கப்பட்டவர்


பெர்தினாந்து என்பவர், போர்த்துகல் நாட்டின் லிஸ்பனில் 1195 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி பிறந்தார். இவர் ஒரு வீரனாக வருவார் என ஆசிரியர்களும், அவர் ஒரு நல்ல நீதிமானாக வருவார் என அவருடைய தந்தையும் எண்ணியிருக்க, பெர்தினாந்தோ, தன்னுடைய 15ம் வயதில் அகுஸ்தினார் சபையில் சேர்ந்து 1219ல் அருள்பணியாளரானார். ஒரு நாள், பிரான்சிஸ்கன் சபை துறவிகள் சிலரைத் தன் மடத்தில் கண்டு, அவர்கள் ஆப்ரிக்காவில் உள்ள மொராக்கோ என்னும் நாட்டிற்கு மறைபோதகர்களாகச் செல்லவிருப்பதை அறிந்து கொண்டார். அங்கு சென்று மறைப்போதகப் பணியாற்றம்போது மறைசாட்சியாக மரணம் அடைய வாய்ப்புள்ளது என அறிந்து, 1220ம் ஆண்டு பிரான்சிஸ்கன் சபையில் சேர்ந்தார். பிரான்சிஸ்கன் சபையில் சேர்ந்த பிறகு தன் பேரை அந்தோனியார் என மாற்றிக் கொண்டார் பெர்தினாந்து. சபையில் சேர்ந்த பிறகு, மொராக்கோ நாடு சென்று மறைப்பணியாற்ற அனுமதி பெற்று கப்பலில் பயணம் மேற்கொண்டார். ஆனால் ஆண்டவருடைய திட்டம் வேறுமாதிரியாக இருந்தது. கடல் புயலில் சிக்கி கப்பல், இத்தாலியிலுள்ள Sicily அருகே வந்தது.
அசிசியின் புனித பிரான்சிஸ் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்து, பல அரும்பெரும் புதுமைகளை ஆற்றியதுடன், பெரிய போதகராகவும் அறியப்பட்ட புனித அந்தோனியாரை, குரு மாணவர்களுக்கும் மற்றும் இத்தாலி முழுவதும் சென்று இறையியல் போதிக்கவும் பணித்தார் அசிசியார். பதுவா நகரிலே போதித்து வந்தபோது உடல் நிலை மிகவும் மோசமானது. அவர் பதுவா நகருக்கு அருகே Arcella என்னும் ஊரில், 1231ம் ஆண்டு தனது 35ம் வயதில் இறந்தார். அவர் இறந்த ஒரு வருடத்திற்குள் திருத்தந்தை 9ம் கிறகரியால் அந்தோனியார், புனிதர் என அறிவிக்கப்பட்டார்.
1263 ஆம் ஆண்டு அவரது கல்லறையை திறந்தபோது, அவரது உடல் எல்லாம் அழிந்து போயிருந்தாலும், நாக்கு மட்டும் அழியாமல் அப்படியே இருந்தது. இன்றும் அவரது நாக்கு அழியாமல் பதுவா நகரில் அவரது ஆலயத்தில் உள்ளது. குழந்தை இயேசுவை தன் கைகளில் தாங்கும் பேறுப் பெற்றவர் புனித பதுவை அந்தோனியார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.