2014-05-23 17:18:20

திருத்தந்தையின் புனித பூமி பயணத்தையொட்டி இஸ்ரேல் நாட்டு அஞ்சல் துறையின் சிறப்பு அஞ்சல் வரிசை


மே,23,2014. அர்ஜென்டீனா நாட்டைச் சேர்ந்த யூத மத ராபி ஆபிரகாம் ஷோர்கா அவர்களும், இஸ்லாமிய மத குரு, இமாம் ஓமர் அப்புத் அவர்களும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுடன் புனித பூமிக்குப் பயணிப்பது, கத்தோலிக்கத் திருஅவை வரலாற்றில் இதுவரை நிகழாத ஒரு முயற்சி என்று வத்திக்கான் வானொலி செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இச்சனிக்கிழமை துவக்கும் புனித பூமி மேய்ப்புப்பணி பயணத்திற்கு முன்னதாக ஜோர்டான் நாட்டுக்குச் சென்றுள்ள செய்தித் தொடர்பாளர் Roberto Piermarini அவர்கள், திருத்தந்தையின் பயணம் அந்நாட்டில் உருவாக்கியுள்ள ஆர்வத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
உலகிலேயே மிக வயது முதிர்ந்த அரசுத் தலைவர் என்ற நிலையில் உள்ள, 90 வயதான இஸ்ரேல் நாட்டு அரசுத் தலைவர் Shimon Peres அவர்கள், தன் பதவிக்காலம் முடிவதற்குள் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை இஸ்ரேல் நாட்டிற்கு வரவழைக்கவேண்டும் என்ற அவரது ஆவல் தீர்ந்துள்ளது என்றும் செய்தித் தொடர்பாளர் Piermarini கூறியுள்ளார்.
புனித பூமி பயணத்தின் ஒரு பகுதியாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இஸ்ரேல் நாட்டுக்குச் செல்லும் மே 26, திங்களன்று, அந்நாட்டு அஞ்சல் துறை ஒரு சிறப்பு அஞ்சல் வரிசையை வெளியிடும் என்று அந்நாடு அறிவித்துள்ளது.
திருத்தந்தையின் வருகையையொட்டி, 12 புனிதத் தலங்களின் படங்கள் அடங்கிய ஒரு அஞ்சல் வரிசை 26ம் தேதி வெளியாகும் என்றும், திருத்தந்தையின் பயணத்தைத் தொடர்ந்து, அப்பயணத்தின் நினைவாக மற்றொரு அஞ்சல் வரிசை வெளியாகும் என்றும் இஸ்ரேல் அஞ்சல் துறை அறிவித்துள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி / ICN








All the contents on this site are copyrighted ©.