2014-05-23 17:17:47

திருத்தந்தையின் புனித பூமி பயணத்தின் முக்கிய நோக்கம் ஒப்புரவையும், அமைதியையும் வளர்ப்பதே - கர்தினால் பியெத்ரோ பரோலின்


மே,23,2014. இஸ்ரேல் நாடு தனக்கு வரையறுக்கப்பட்ட எல்லைகளுக்குள் பாதுகாப்பை உணரவேண்டும் என்பதும், பாலஸ்தீன மக்கள் தனிப்பட்ட ஒரு நாட்டுக்குரிய மதிப்புடன் வாழவேண்டும் என்பதுமே இஸ்ரேல் - பாலஸ்தீன நாடுகளைக் குறித்து திருப்பீடம் கொண்டுள்ள கருத்து என்று திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் கூறினார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இச்சனிக்கிழமை முதல் மேற்கொள்ளவிருக்கும் புனித பூமி பயணத்தையொட்டி, வத்திக்கான் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், கர்தினால் பரோலின் அவர்கள் இப்பயணத்தின் முக்கிய நோக்கம் ஒப்புரவையும், அமைதியையும் வளர்ப்பதே என்று கூறினார்.
எருசலேம் என்ற நகர், உலகெங்கும் பரவியுள்ள கத்தோலிக்கர்களுக்கு புனித நகரம் என்பதையும், மற்றும் புனித பூமியில் உள்ள பல்வேறு புனிதத் தலங்கள் திருப்பயணிகளுக்கு தடையின்றி திறந்துவிடப்பட வேண்டும் என்பதையும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் மேய்ப்புப்பணி பயணத்தில் வலியுறுத்துவார் என்றும் கர்தினால் பரோலின் அவர்கள் எடுத்துரைத்தார்.
தன் புதன் மறையுரையின் இறுதியில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் "தன் சகோதரர் பர்த்தலோமேயோ அவர்களை தான் சந்திக்கச் செல்வதாகக்" கூறியதை தன் பேட்டியில் எடுத்துரைத்த கர்தினால் பரோலின் அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஒரு திருப்பயணியாக புனித பூமிக்குச் செல்கிறார் என்பதை வலியுறுத்தினார்.
உரோமையில் உள்ள புனித பேதுருவின் வழித்தோன்றலும், Constantinopleலிலுள்ள புனித அந்திரேயாவின் வழித்தோன்றலும் சந்திப்பது, கிறிஸ்தவ ஒன்றிப்புக்கு அதிக வலிமை சேர்க்கும் என்பதை 2ம் வத்திக்கான் சங்கத்தின் வழியாக உணர்ந்த கத்தோலிக்கத் திருஅவை, 50 ஆண்டுகளுக்கு முன்னர் திருத்தந்தை 6ம் பவுல் அவர்களின் வழியாக முதல் முயற்சியை எடுத்தது என்றும் கர்தினால் பரோலின் அவர்கள் தன் பேட்டியில் நினைவுகூர்ந்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.