2014-05-22 16:21:51

யூத ராபி ஒருவரும், இஸ்லாமிய மதத்தலைவர் ஒருவரும் திருத்தந்தையுடன் பயணிப்பது, பல்சமய உரையாடல் வரலாற்றில் தனித்துவம் மிகுந்த ஒரு மைல்கல்


மே,22,2014. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் புனித பூமிக்குப் பயணம் மேற்கொள்ளும்போது, அவருடன் யூத ராபி ஒருவரும், இஸ்லாமிய மதத்தலைவர் ஒருவரும் உடன் பயணிப்பது, பல்சமய உரையாடல் என்ற வரலாற்றில் தனித்துவம் மிகுந்த ஒரு மைல்கல் என்று வத்திக்கானுடன் தொடர்பு கொண்டுள்ள இஸ்ரேல் நாட்டுத் தூதர், Zion Evrony அவர்கள் கூறினார்.
அர்ஜென்டீனா நாட்டிலிருந்து, உரோம் நகருக்கு வருகை தந்துள்ள யூத ராபி, ஆபிரகாம் ஷோர்கா அவர்கள், திருத்தந்தையின் மிக நெருங்கிய நண்பர் என்பதை உலகம் அறியும் என்று கூறிய இஸ்ரேல் தூதர் Evrony அவர்கள், Imam Abbud என்ற இஸ்லாமிய மதகுருவும் இப்பயணத்தை திருத்தந்தையுடன் மேற்கொள்வது, மிகச் சிறந்த அடையாளம் என்று கூறினார்.
யூத, இஸ்லாமிய மதக் குருக்களான இவர்கள் இருவரும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் புவெனோஸ் அயிரேஸ் பேராயராகப் பணியாற்றிய நாட்களில் அவருடன் இணைந்து, மத நல்லிணக்கத்திற்காக உழைத்தவர்கள் என்றும், இம்மூன்று நாள் திருப்பயணத்தில், இவ்விரு மதக் குருக்களும் திருத்தந்தை கலந்துகொள்ளும் பல்வேறு சந்திப்புக்களில் பங்கேற்பர் என்றும் இஸ்ரேல் தூதர் Evrony அவர்கள், CNA கத்தோலிக்கச் செய்திக்கு பேட்டியளித்துள்ளார்.
கிறிஸ்தவம், யூதம், இஸ்லாம் ஆகிய மூன்று மதங்களும் ஒரே கடவுள் என்ற கொள்கையால் இணைக்கப்பட்ட பெரும் மதங்கள் என்றும், இம்மூன்று மதங்களும் இணைந்து செயலாற்றுவதால், உலக அமைதி பெருமளவில் வளரும் என்றும் இஸ்ரேல் தூதர் Evrony அவர்கள், சில நாட்களுக்கு முன் அளித்த மற்றொரு பேட்டியில் கூறியது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : CNA








All the contents on this site are copyrighted ©.