2014-05-22 16:16:58

மே,23, 2014. புனிதரும் மனிதரே : கருணைக்கு எல்லையே இல்லை (புனித யோவான் )


அலெக்சாந்திரியாவின் முதுபெரும் தந்தையான யோவான், ஒருமுறை, சில தவறுகள் செய்த இரு குருக்களை ஒரு குறிப்பிட்ட காலத்துக்குத் திருஅவைக்குப் புறம்பாக்க வேண்டிய நிலைக்கு ஆளானார். அவ்விருவரில் ஒருவர், தான் செய்த தவறுக்கு மன்னிப்புக் கேட்டார். ஆனால் மற்றொருவர் முதுபெரும் தந்தைமீது அதிகக் கோபம்கொண்டு பெரும் பாவங்களைச் செய்தார். இக்குருவை அழைத்து கனிவான சொற்களால் அவரை அமைதிப்படுத்த விரும்பினார் முதுபெரும் தந்தை யோவான். ஆனால் அப்படிச் செய்யவேண்டுமென்ற எண்ணத்தை மறந்துவிட்டார் முதுபெரும் தந்தை. எனினும், ஒருநாள் திருவழிபாட்டின்போது, “நீங்கள் உங்கள் காணிக்கையைப் பலிபீடத்தில் செலுத்த வரும்பொழுது உங்கள் சகோதரர் சகோதரிகள் எவருக்கும் உங்கள் மேல் ஏதோ மனத்தாங்கல் உண்டென அங்கே நினைவுற்றால்... முதலில், அவரிடம் நல்லுறவு ஏற்படுத்திக் கொள்ளுங்கள். பின்பு வந்து உங்கள் காணிக்கையைச் செலுத்துங்கள்”(மத்.5:23-24) என்ற நற்செய்தி அருள்வாக்கு நினைவுக்கு வரவே, புனித யோவான் பலிபீடத்தைவிட்டுச் சென்று, அக்குருவை அழைத்து அனைத்து மக்களுக்கு முன்பாக மண்டியிட்டு மன்னிப்புக் கேட்டார். பின்னர் அக்குரு தனது தவற்றை உணர்ந்தார். ஒருமுறை ஜார்ஜ் என்ற இவரின் மருமகனை ஒருவர் மிகவும் அவமதித்துவிட்டார். இவரைப் பழிவாங்க வேண்டும் என முதுபெரும் தந்தையிடம் முறையிட்டார் ஜார்ஜ். இந்த அலெக்சாந்திரியா நகரம் முழுவதும் வியக்கும் விதத்தில் அவரைத் தண்டிக்கலாம் என்று உறுதி அளித்ததோடு தாழ்ச்சியின் மேன்மையை எடுத்துச் சொன்னார் முதுபெரும் தந்தை. அதனால் ஜார்ஜ் அமைதியானார். தன்னை அவமதித்த மனிதரை முதுபெரும் தந்தை யோவான் முன்பாக நிறுத்தினார் ஜார்ஜ். அந்த மனிதர் திருஅவைக்குச் சொந்தமான வீட்டில் வாழ்கிறார் என்பதை அறிந்து, அந்த மனிதர் அவ்வீட்டுக்கு ஓராண்டுக்கு வாடகை கட்டுவதிலிருந்து மன்னிப்பதாக அறிவித்தார். இவர் காலத்தில் பேரரசர் ஹெராக்கிலியுஸ் பெர்சியப் பேரரசர் 2ம் Chosroesக்கு எதிராகப் போர் தொடுத்தார். இதில் பெர்சியர்கள் எருசலேமைச் சூறையாடி பெருமளவான வீரர்களை அடிமைகளாகப் பிடித்துச் சென்றனர். இவர்களை விடுதலை செய்வதற்கு, இந்தப் புனித முதுபெரும் தந்தை, திருஅவைச் சொத்திலிருந்து பெரும் பகுதியை பிணையல் தொகையாகக் கொடுத்தார். இவ்வாறு பல கருணைச் செயல்களைச் செய்தவர் அலெக்சாந்திரியாவின் முதுபெரும் தந்தை புனித யோவான். இவர் சைப்ரசில் உயர்மதிப்புள்ள குடும்பத்தில் பிறந்தவர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.