2014-05-22 15:56:48

திருத்தந்தை : மகிழ்வு, கிறிஸ்தவ அடையாளம்


மே 22,2014. துன்பங்களிலும் இடர்பாடுகளிலும் மகிழ்ச்சியுடன் இருப்பதே கிறிஸ்தவரின் உண்மையான அடையாளம் என இவ்வியாழன் காலை சாந்தா மார்த்தா இல்லத் திருப்பலியில் மறையுரையாற்றினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
அன்புக்கூர நமக்குக் கற்பித்து நம்மை மகிழ்ச்சியால் நிரப்புவது தூய ஆவியானவர் என்பதால், ஒரு கிறிஸ்தவர் வருத்தமுடையவராகவும் மன அழுத்தம் உடையவராகவும் இருப்பது இயலாதது என்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உயிர்த்த இயேசு விண்ணகம் எழும்பிச் செல்லும் முன் வலியுறுத்திய மூன்று விடயங்களான, அமைதி, அன்பு மற்றும் மகிழ்வு குறித்து எடுத்துரைத்தார்.
நாம் கடவுளையும் அயலாரையும் அன்புகூர மட்டுமல்ல, இறை அன்பில் நிலைத்திருக்கவும் இயேசு நம்மைக் கேட்கிறார் எனவும் உரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்.
கிறிஸ்துவின் அன்பில் நிலைத்திருப்பதே ஒரு கிறிஸ்தவருக்குரிய அழைப்பு, அந்த அன்பே, நாம் இறைவனின் கட்டளைகளை நிறைவேற்ற நம்மை வழிநடத்துகின்றது எனவும் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
‘கிறிஸ்தவ நலம்’ என்பது மகிழ்வே, அந்த மகிழ்வின்றி ஒருவரால் கிறிஸ்தவராக இருக்கமுடியாது என்பதையும் வலியுறுத்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், துன்பத்திலும், இடர்பாடுகளிலும், சித்ரவதைகளின்போதும் மகிழ்வுடன் இருப்பதே கிறிஸ்தவ அடயாளம் எனவும் கூறினார்.
நம்மில் எத்தனை பேர் தூய ஆவியை நோக்கிச் செபிக்கிறோம் என்ற கேள்வியையும் முன்வைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நமக்கு அமைதியை வழங்கி, நாம் அன்புகூர கற்பிக்கும், அதேவேளை, நம்மை மகிழ்வால் நிரப்பும் தூய ஆவியானவரே நமக்கு வழங்கப்பட்டுள்ள கொடை என தன் மறையுரையில் மேலும் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.