2014-05-21 16:42:02

தென் கொரியாவைச் சேர்ந்த கர்தினால் ஒருவர், முதல் முறை வட கொரியாவுக்குப் பயணம்


மே,21,2014. தென் கொரியாவின் Seoul உயர்மறை மாவட்டத்தின் பேராயர் கர்தினால் Andrew Yeom Soo-jung அவர்கள், இப்புதன் காலையில் வட கொரியாவின் Kaesong என்ற வர்த்தக நகருக்கு ஒரு நாள் பயணம் மேற்கொண்டார்.
தென் கொரியாவைச் சேர்ந்த கர்தினால் ஒருவர், வட கொரியாவுக்குச் சென்றது இதுவே முதல் முறை என்று ஆசிய செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
வருகிற ஆகஸ்ட் மாதம் 14 முதல் 18 முடிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கொரியாவுக்கு மேற்கொள்ளும் மேய்ப்புப்பணி பயணத்தின்போது அவர் ஒருவேளை, வடகொரியாவின் Pyongyang நகரில் திருப்பலி ஆற்றக்கூடும் என்ற கருத்தும் ஆசிய செய்திக் குறிப்பில் காணப்படுகிறது.
Pyongyang பகுதியின் அப்போஸ்தலிக்க நிர்வாகி என்ற பொறுப்பில், கர்தினால் Yeom Soo-jung அவர்கள் மேற்கொண்ட இப்பயணத்தில் வடகொரியாவின் அரசு அதிகாரிகளுடன் எவ்வித சந்திப்பையும் மேற்கொள்ள வில்லை என்று கூறப்பட்டுள்ளது.
"ஆசியாவின் எருசலேம்" என்ற புகழைப் பெற்றிருந்த Pyongyang பகுதியில், 1953ம் ஆண்டு முடிய, ஒரு இலட்சம் கத்தோலிக்கர்களும், 2இலட்சத்திற்கும் அதிகமான கிறிஸ்தவர்களும் வாழ்ந்தனர் என்றும், தற்போது, அங்கு வெளிப்படையாக வாழமுடியாமல் தவிக்கும் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை 200 முதல் 2000 ஆக இருக்கலாம் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : AsiaNews








All the contents on this site are copyrighted ©.