2014-05-21 16:40:46

திருத்தந்தையின் புனித பூமித் திருப்பயணத்தின்போது கத்தோலிக்கர்களும், ஆங்கிலிக்கன் சபையினரும் இணைந்து நற்கருணை ஆராதனை


மே,21,2014. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் புனித பூமித் திருப்பயணத்தின்போது, பாலஸ்தீனாவின் பெத்லகேமில் கிறிஸ்தவ ஒன்றிப்பு முதுபெரும் தந்தையைச் சந்திக்கும் அதே நேரத்தில், இங்கிலாந்தில் உள்ள அனைத்துக் கோவில்களிலும் கத்தோலிக்கர்களும், ஆங்கிலிக்கன் சபையினரும் இணைந்து நற்கருணை ஆராதனையில் ஈடுபட, Westminster பேராயர், கர்தினால் Vincent Nichols அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.
கத்தோலிக்கத் திருஅவைக்கும் கிறிஸ்தவ ஒன்றிப்பு சபைகளுக்கும் இடையே நல்லுறவை வளர்க்கவும், புனித பூமியில் அமைதி நிலவவும் திருத்தந்தையோடு ஒன்றித்து, மக்கள் இந்த ஆராதனையை மேற்கொள்ளுமாறு கர்தினால் Nichols அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.
மே 25ம் தேதி, வருகிற ஞாயிறன்று, இங்கிலாந்து நேரம் பிற்பகல் 3 முதல் 4 முடிய இந்த ஆராதனை நேரம் நடைபெறும் என்று கர்தினால் Nichols அவர்கள் அறிவித்தார்.
இதற்கிடையே, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் வரலாற்று சிறப்பு மிக்க புனித பூமித் திருப்பயணம் வெற்றிகரமாக அமைய, அமெரிக்க ஐக்கிய நாட்டில் உள்ள 400க்கும் அதிகமான யூத மத ராபிகளும், மற்ற யூதத் தலைவர்களும் திருத்தந்தை அவர்களுக்கு வாழ்த்துக்களை அனுப்பியுள்ளனர்.
யூத மதத் தலைவர்களின் இச்செய்தி, இஸ்ரேல் நாட்டில் வெளியாகும் Ha'aretz என்ற செய்தித் தாளில், மே 25, ஞாயிறன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி / ICN








All the contents on this site are copyrighted ©.