2014-05-21 16:44:06

திருத்தந்தையின் புதன் பொதுமறைபோதகம்


மே 21,2014. ஐரோப்பாவில் கோடைகாலம் துவங்கிவிட்டதால் உரோமிலும் வெயிலின் தாக்கம் அதிகரித்துக்கொண்டேயிருக்கிறது. இருப்பினும், திருப்பயணிகளின் கூட்டத்தைக் கருத்தில் கொண்டு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் புதன் பொதுமறைபோதகம் தூய பேதுரு பசிலிக்காப் பேராலய வளாகத்திலேயே இடம்பெற்று வருகிறது. இப்புதனன்றும் திருப்பயணிகள் மற்றும் சுற்றுலாப்பயணிகளின் கூட்டம் தூய பேதுரு வளாகத்தை நிறைத்திருக்க, தூய ஆவியானவரின் ஏழுகொடைகள் குறித்த தன் புதன் மறைபோதகத்தின் தொடர்ச்சியாக இவ்வாரம், ஞானம் எனும் கொடை குறித்து விளக்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஞானம் எனும் இந்த ஆன்மீக கொடை மூலம் நாம், ஒவ்வொரு மனிதரையும், நம்மை சுற்றியுள்ள உலகையும், இறைவனின் அன்புத் திட்டத்தின் ஒளியில் நோக்க வலிமைப் பெறுகின்றோம். ஒருவகையில் நோக்கும்போது, நாம் இவ்வுலக படைப்புகளில் காணப்படும் அழகு, நல்லிணக்கம் மற்றும் நன்மைத்தனத்தை, அவைகளைப் படைத்த இறைவனின் கண்கள் வழி பார்க்கிறோம்.
இயற்கை உலகை நன்றியுடன் தியானிப்பதற்கும், அதைப் படைத்த இறைவனின் புகழ் பாடுவதற்கும், ஞானம் எனும் கொடை நம்மைத் தூண்டுகிறது என்பதை அசிசியின் புனித பிரான்சிஸ் மற்றும் ஏனைய பல புனிதர்களின் வாழ்விலிருந்து தெளிவாக அறிகிறோம். இந்த ஆன்மீகக் கொடை வழங்கும் கண்ணோட்டம், இறைவனின் படைப்பு எனும் கொடையை மதிக்கவும், அனைத்து மனிதகுல குடும்பத்திற்கும் பயன் தரும் வகையில், படைப்புப் பொருட்களை, உலகின் வளங்களை மதிநுட்பத்துடன், பொறுப்பு நிறைந்த வகையில் மேற்பார்வையிடவும் நம்மை வழிநடத்திச் செல்கிறது. நாம் இவ்வுலகின் நபர்களிலும், இவ்வுலகப் பொருட்களிலும் நம் பார்வையை சுருக்கிக்கொள்ளக்கூடாது. இவ்வுலகின் ஒருங்கமைவு, மதிப்பீடுகள், அழகு ஆகியவை, அவைகளைத் தாண்டிய ஒன்றை, அதாவது அதன் ஆதாரமும், முடிவுமாகிய இறைவனைச் சுட்டிக்காட்டுவதை நாம் மறந்துவிடக்கூடாது என்பதில் ஞானம் எனும் கொடை உதவுகிறது. இவ்வுலகை வழிநடத்தும் இறைஅன்பை உணர்ந்து கொள்ளவும், இறைவனுக்கு நன்றியுடன் பதிலுரைக்கவும், அவரின் எல்லையற்ற நன்மைத்தனம் மற்றும் அன்பிற்கு நன்றி புகழ் பாடவும் நமக்கு உதவும் ஞானம் எனும் கொடையில், நாம் வளர நமக்கு உதவுமாறு ஆவியானவரை வேண்டுவோம்.
இவ்வாறு, ஆவியானவரின் ஞானம் எனும் கொடை குறித்து தன் புதன் மறைபோதகத்தை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், Bosnia-Herzegovina, Serbia ஆகிய நாடுகளில் வெள்ளப்பெருக்கால் துன்புறும் மக்கள் குறித்து எடுத்துரைத்து, இம்மக்களுக்காக தன்னோடு இணைந்து செபிக்குமாறு வேண்டினார். துன்புறும் மக்களோடு நம் ஒருமைப்பாட்டை அறிவிப்போம் என விண்ணப்பித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அனைத்துலக சமுதாயத்தின் உதவிகளுக்கும் அழைப்புவிடுத்தார்.
மேலும், இம்மாதம் 24ம் தேதி சகாய அன்னையின் திருவிழா சிறப்பிக்கப்படுவதை எடுத்துரைத்து, சீனாவின் Shangaiயிலுள்ள Sheshan மரியன்னை திருத்தலத்தில் இது சிறப்பாகக் கொண்டாடப்படுவதை சுட்டிக்காட்டினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
சீனக் கத்தோலிக்கர்கள் எல்லாச் சூழலிலும் தொடர்ந்து விசுவாசத்திலும், நம்பிக்கையிலும் அன்பிலும் நிலைத்திருந்து, தங்கள் உடன்வாழ் மக்களுடன் இணக்கவாழ்வின் புளிக்காரமாகச் செயல்படும்படி வேண்டுவோம் எனக்கேட்டு தன் மறையுரையை நிறைவுச்செய்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இறுதியில், அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.








All the contents on this site are copyrighted ©.