2014-05-21 16:38:19

சுற்றுச்சூழல் பிரச்சனைக்கு அறிவியல், தொழில் நுட்பம் ஆகியத் துறைகளிலிருந்து மட்டும் பதில்கள் தேடுவது, சரியான அணுகுமுறை அல்ல - பேராயர் Zimowski


மே,21,2014. சுற்றுச்சூழலில் ஏற்படும் விரும்பத்தகாத மாற்றங்கள், மனிதர்களால் உருவாக்கப்படும் மாற்றங்கள் என்றும், இந்த மாற்றங்களால் உடல்நலன் தொடர்பான விளைவுகளை நாம் அதிகம் சந்திக்கவேண்டியிருக்கும் என்றும் வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
மே 19, இத்திங்கள் முதல், 24, இச்சனிக்கிழமை முடிய ஜெனீவாவில் நடைபெறம் 67வது உலக நலவாழ்வு பேரவைக் கூட்டத்தில் இப்புதனன்று உரையாற்றிய, நலவாழ்வுப் பணி திருப்பீட அவையின் தலைவர், பேராயர், Zygmunt Zimowski அவர்கள், இவ்வாறு கூறினார்.
சுற்றுச்சூழல் மாற்றங்களால் தங்கள் பிறப்பிடங்களைவிட்டு வெளியேறும் கட்டாயத்திற்கு உள்ளாக்கப்படும் மக்களைக் குறித்து முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் கூறியுள்ளதை, தன் உரையில் சுட்டிக்காட்டியப் பேராயர் Zimowski அவர்கள், இப்பிரச்சனைக்கு, அறிவியல், தொழில் நுட்பம் ஆகியத் துறைகளிலிருந்து மட்டும் பதில்கள் தேடுவது, சரியான அணுகுமுறை அல்ல என்பதைத் தெளிவுபடுத்தினார்.
பெண்கள், குழந்தைகள், மாற்றுத் திறனாளிகள் ஆகியோர் இப்பிரச்சனையால் அதிக அளவு பாதிக்கப்பட்டவர்கள் என்பதை எடுத்துரைத்தப் பேராயர் Zimowski அவர்கள், Autism குறையுள்ள மாற்றுத்திறனாளிகள் குறித்து, வருகிற நவம்பர் மாதம் வத்திக்கானில் ஒரு கருத்தரங்கு நடைபெறும் என்பதையும் எடுத்துரைத்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.