2014-05-21 16:38:54

உலகக் கால்பந்து போட்டியின் போது, மனித வர்த்தகத்தைத் தடுக்க வத்திக்கானும், அமெரிக்க ஐக்கிய நாடும் இணைந்து மேற்கொண்டுள்ள ஒரு முயற்சி


மே,21,2014. 'மனித வர்த்தகம் உலகச் சமுதாயம் என்ற உடலில் ஏற்பட்டுள்ள ஒரு காயம்' என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியதை, வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் இச்செவ்வாய் காலை, செய்தியாளர்கள் கூட்டத்தில் மீண்டும் நினைவுகூர்ந்தார்.
பிரேசில் நாட்டில் இவ்வாண்டு நடைபெறவிருக்கும் உலகக் கால்பந்து போட்டியின் போது, மனித வர்த்தகம் முற்றிலும் தடைசெய்யப்பட வேண்டும் என்ற நோக்கத்துடன், வத்திக்கானும், அமெரிக்க ஐக்கிய நாடும் இணைந்து மேற்கொண்டுள்ள ஒரு முயற்சியைக் குறித்து, செய்தியாளர்களிடம் பேசிய, அர்ப்பண வாழ்வுக்கென உருவாக்கப்பட்டுள்ள திருப்பேராயத்தின் தலைவர், கர்தினால் Joao Braz de Aviz அவர்கள், இவ்வாறு கூறினார்.
இறந்துபோனதாகக் கருதப்பட்ட தொழுகைக் கூடத்துத் தலைவரின் மகளை, 'தலித்தா கும்' (Talitha Kum) அதாவது, 'சிறுமியே எழுந்திடு' என்ற சொற்களுடன் (மாற்கு நற்செய்தி 5:41) இயேசு எழுப்பிய நிகழ்வினை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள 'தலித்தா கும்' என்ற அமைப்பும், வத்திக்கானும் இணைந்து, பிரேசில் நாட்டில் நடைபெறவிருக்கும் உலகக் கால்பந்து போட்டியின் நேரத்தில் மனித வர்த்தகங்கள், குறிப்பாக இளம்பெண்களின் வர்த்தகத்தை நிறுத்தும் முயற்சியில் ஈடுபடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகக் கால்பந்துப் போட்டி போன்ற ஓர் அனைத்துலக நிகழ்வில், பல கோடி மக்கள் கலந்துகொள்ளும்போது, வர்த்தக உலகம் பல்வேறு எதிர்மறையான முயற்சிகளில் ஈடுபடுகின்றது என்று வத்திக்கானில் பணியாற்றும் அமெரிக்கத் தூதர் Ken Hackett அவர்கள், செய்தியாளர்களிடம் பேசினார்.
உலகக் கால்பந்துப் போட்டிக்கென பிரேசில் நாட்டுக்குச் செல்லும் அனைவரும் போட்டிகளை மட்டும் கண்டு களிக்கும் மனநிலையை அவர்களுக்குள் உருவாக்குவதும், போதைப் பொருள், தகாத உடலுறவு என்ற ஏனைய ஆபத்தான வழிகளில் தங்கள் கவனத்தைத் திருப்பாமல் இருக்கவும் 'தலித்தா கும்' அமைப்பு உதவும் என்று இவ்வமைப்பின் ஒருங்கிணைப்பாளரான அருள் சகோதரி, Estrella Castalone செய்தியாளர்கள் கூட்டத்தில் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி / CNA








All the contents on this site are copyrighted ©.