2014-05-21 16:48:13

அமைதி ஆர்வலர்கள் – 1926ல் நொபெல் அமைதி விருது
(Gustav Stresemann, Aristide Briand)


மே,21,2014. ஒரு நாட்டின் பெரிய மனிதர்கள் மனித சமுதாயம் அனைத்துக்கும் தங்களைக் கையளிப்பார்கள். அவர்கள் ஒன்றுசேர்ப்பவர்களாக, அனைத்துலக அளவில் ஒப்புரவு ஏற்படுத்துபவர்களாக இருப்பார்கள், அதேசமயம் தனது நாட்டின்மீது மிகுந்த பற்று கொண்டிருப்பார்கள் என்று சொன்னவர் Gustav Stresemann. ஜெர்மனியின் பெர்லினில் 1878ம் ஆண்டு மே 10ம் தேதி பிறந்த இவர், 1926ல் நொபெல் அமைதி விருது பெற்றவர். ஜெர்மன் வெளியுறவுத்துறை அமைச்சராகிய Gustav Stresemann, ப்ரெஞ்ச் வெளியுறவுத்துறை அமைச்சர் Aristide Briand டன் இணைந்து 1926ம் ஆண்டின் நொபெல் அமைதி விருதைப் பகிர்ந்து கொண்டார். சுவிட்சர்லாந்து நாட்டின் Locarno நகரில் 1925ம் ஆண்டில் ஜெர்மனிக்கும் பிரான்சுக்கும் இடையே ஒப்புரவு ஒப்பந்தம் கையெழுத்திடப்படுவதற்கு இவ்விரு அமைச்சர்களும் எடுத்த முயற்சிகளுக்காக இவர்களுக்கு இவ்விருது வழங்கப்பட்டது. Gustav Stresemann, அரசியலில் நுழைந்து வெளியுறவுத்துறை அமைச்சராவதற்கு முன்னர் இலக்கியம், வரலாறு மற்றும் பொருளாதாரம் படித்து வணிகத் தொழிலைச் செய்து வந்தார். 1907ம் ஆண்டில் ஜெர்மன் நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜெர்மனியின் வெளிநாட்டுக் கொள்கையில் ஓர் ஆர்வமுள்ள தொழிலதிபராகச் செயல்பட்டு அந்நாடு சூரியனில் இடம் பிடிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வந்தார்.
முதல் உலகப் போரின்போது ஜெர்மனி அண்டை நாடுகளின் நிலப்பகுதியை தன்னோடு சேர்த்துக்கொண்டதை ஆதரித்தார் Gustav Stresemann. ஆனால் போர் மிகவும் கொடூரமாய்ப் போய்க்கொண்டிருந்ததைக் கண்டு ஜெர்மனி அமைதிக்காக முயற்சிக்க வேண்டுமென்று விரும்பினார். 1919ம் ஆண்டின் அமைதிப் பேச்சுவார்த்தைகளில் ஜெர்மனி முன்வைத்த கடுமையான விதிமுறைகள் கண்டு அதிர்ந்துபோனார் Stresemann. அதேசமயம், ஜெர்மனி, அமைதி உடன்படிக்கையைப் பயனற்றதாக்க வேண்டுமென்ற கருத்தையும் எதிர்த்தார். வெளியுறவுத்துறை அமைச்சராக, பிரான்சுடன் ஒப்புரவு நடவடிக்கைகளைத் தொடங்குவதற்கு முன்னர் 1923ம் ஆண்டில் 102 நாள்களுக்கு பிரதமராகவும் இருந்தார் Gustav Stresemann. இவர் பிரதமராக இருந்தபோது, ஜெர்மன் நிலப்பகுதி வெளிநாட்டு ஆக்ரமிப்பிலிருந்து விடுவிக்கப்பட வேண்டும் என்பது, ஜெர்மனியின் அரசியலில் மிக முக்கிய கொள்கையாக இருக்க வேண்டுமென்று கூறினார். 1923ம் ஆண்டு நவம்பரில் அந்நாட்டின் பணவீக்கம் உச்சகட்டத்தில் இருந்தது. வேலை நிறுத்த்தில் ஈடுபட்ட தொழிலாளருக்கு ஊதியம் கொடுக்க இயலாத நிலை உருவானது. அப்போது Stresemann நாட்டில் புதிய பணத்தை அறிமுகப்படுத்தினார். 1926ம் ஆண்டில் உலக நாடுகளின் கூட்டமைப்பில், பாதுகாப்பு அவையின் நிரந்தர உறுப்பினராக, ஜெர்மனி அனுமதிக்கப்பட்டது. இதன்மூலம் பெர்லின் அமைதி உடன்பாட்டில் ஜெர்மனி நேர்மையாய் நடப்பது உறுதி செய்யப்பட்டது. 1928ம் ஆண்டில் Kellogg-Briand உடன்பாட்டில் ஜெர்மனி கையெழுத்திட்டது. இதன்மூலம் உலக அளவில் இடம்பெறும் சண்டைகளுக்குத் தீர்வாக ஆயுதங்களைப் பயன்படுத்துவதில்லை என ஜெர்மனி உறுதி எடுத்தது. இவ்வாறு அமைதிக்காகப் பல முயற்சிகளை எடுத்தவர் Gustav Stresemann. இவர் 1929ம் ஆண்டு அக்டோபர் 3ம் தேதி பெர்லினில் இறந்தார்.
ஜெர்மன் வெளியுறவுத்துறை அமைச்சராகிய Gustav Stresemannவுடன் 1926ம் ஆண்டின் நொபெல் அமைதி விருதைப் பகிர்ந்து கொண்டவர் ப்ரெஞ்ச் வெளியுறவுத்துறை அமைச்சர் Aristide Briand. உலக நாடுகளின் கூட்டமைப்பில் புகழின் உச்சகட்டத்தில் இவர் இருந்தபோது ஜெனீவாவில் விருந்தினர்களுக்கு பெரிய விருந்து ஒன்று நடந்தது. அப்போது விருந்தினர்களுக்கு சாப்பாடு குறித்த விபரங்கள் கொண்ட கேலிச்சித்திர அட்டைகள் கொடுக்கப்பட்டன. அவற்றில் உலகின் முக்கியமான அரசியல்வாதிகள் Mars சிலையை உடைப்பது போன்று இருந்தன. ஆனால் Briandக்குக் கொடுக்கப்பட்ட கேலிச்சித்திர அட்டையில்மட்டும் அவர் போரின் கடவுளிடம் பேசுவது போன்றும், அவரைத் தற்கொலை செய்யத் தூண்டுவது போலும் இருந்தது. இந்தக் கேலிச்சித்திரம் பொதுவாழ்வில் Briand கொண்டிருந்த முக்கிய கோட்பாட்டை மட்டுமல்ல, பன்னாட்டு உறவுகளில் போரை அழிப்பது மற்றும் அவரது வழிமுறைகள், ஒரு பிரச்சனையின் மையத்துக்கே சென்று அதனைத் தீர்ப்பது பற்றிய அவரின் போக்குகள் போன்றவற்றை விளக்குவதாக இருந்தது.
1926ம் ஆண்டின் நொபெல் அமைதி விருதைப் பெற்ற மற்றொருவர் Aristide Briand. இவர், பிரான்சின் Nantesல் 1862ம் ஆண்டு மார்ச் 28ம் தேதி பிறந்தார். இவர் சட்டக்கல்வி பயின்றபோதே சோஷலிசக் கருத்துக்களை வளர்த்துக்கொண்டார். பல்கலைக்கழகப் படிப்பை முடித்துவிட்ட பின்னர், Le Peuple, La Lanterne, Petite République ஆகியவற்றில் எழுதினார். 1901ம் ஆண்டில் ப்ரெஞ்ச் சோஷலிசக் கட்சியின் பொதுச் செயலாளரானார். பின்னர் நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1904ல் Jean Jaurés என்பவருடன் சேர்ந்து L'Humanité என்ற நாளிதழைத் தொடங்கினார் Briand. கூட்டணி அரசில் பணியை ஏற்றுக்கொண்டதால் 1909ல் கட்சியைவிட்டு நீக்கப்பட்டார். பொதுக்கல்வி மற்றும் வழிபாட்டு அமைச்சராக(1906-09) இருந்தபோது பிரான்சில் திருஅவையையும் அரசையும் தனித்தனியாகப் பிரித்தார். 1909ம் ஆண்டு ஜூலையில் பிரான்சின் பிரதமரானார் Briand. கட்டாய இராணுவச் சேவைக் காலத்தை நீட்டித்ததற்கு இவர் ஆதரவு கொடுத்ததால் இடதுசாரி கட்சியின் கோபத்துக்கு உள்ளானார். முதல் உலகப்போர் மூண்டபோது இவர் நீதி அமைச்சராக இருந்தார். பால்கன் பகுதியில் ப்ரெஞ்சின் தலையீடு இருக்குமாறு ஆலோசனை கூறினார். 1915ல் பிரான்சின் அரசுத்தலைவர் Raymond Poincare, Briandஐ பிரதமராக்கினார். இராணுவ அதிபர் Joseph Joffreஐக் கட்டுப்படுத்த இவர் எடுத்த முயற்சிகள் தோல்வி கண்டன. இறுதியில் Verdunல் பிரான்ஸ் தோல்வியைத் தழுவிய பின்னர் Joseph Joffreஐ பதவி நீக்கம் செய்தார் Briand. 1921ல் Briand மீண்டும் பிரதமரானார்(1921-22, 1925-26 மற்றும் 1929). அதேநேரம் 1925க்கும் 1932க்கும் இடைப்பட்ட காலத்தில் வெளியுறவு அமைச்சராகவும் இருந்தார். அச்சமயத்தில் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு வித்திட்டார். அனைத்துலக நாடுகளின் கூட்டமைப்பின் மூலம் அனைத்துலக அமைதிக்கு ஆதரவாளராகச் செயல்பட்டார். பிரான்சும் ஜெர்மனியும் ஒப்புரவாக முயற்சித்தார். இந்நடவடிக்கைக்காக 1926ம் ஆண்டில் அமைதி நொபெல் விருது பெற்றார். பிரான்சுக்கும் அமெரிக்க ஐக்கிய நாட்டுக்கும் இடையே Kellogg-Briand ஒப்பந்தம் கையெழுத்தானதால் இவ்விரு நாடுகளுக்கிடையே சண்டை இடம் பெறாமல் இது தடை செய்தது. 1932ம் ஆண்டு மார்ச் 7ம் தேதி பாரிசில் இறந்தார் Aristide Briand.








All the contents on this site are copyrighted ©.