2014-05-20 15:25:53

விவிலியத்
தேடல் மினா நாணய உவமை பகுதி - 2


RealAudioMP3 "The War is over, now the real battle begins" அதாவது, "சண்டை முடிவுற்றது, இப்போது போர் துவங்கியுள்ளது" என்ற வார்த்தைகளுடன், Tehelka இணையத்தளத்தில் இத்திங்களன்று தலைப்புச் செய்தி வெளியானது. இந்தியாவில், அண்மையில் நடத்து முடிந்த தேர்தல், ஒரு போர்களத்தை நினைவுறுத்தியது என்பதை மறுக்கமுடியாது. வாய் வார்த்தைகளால் அங்கு நிகழ்ந்த சண்டைகள் முடிவு பெற்றுள்ளன. ஆனால், இனிதான் உண்மையான போர் துவங்கியுள்ளது என்பதும் மறுக்கமுடியாத உண்மை. அதாவது, தேர்தல் சண்டையில் அள்ளி வீசப்பட்ட வாக்குறுதிகள் செயல்களாக உருபெறும் போர் துவங்கியுள்ளது.
தனிப்பட்ட ஒரு தலைவரைச் சுற்றி எழுந்த ஆரவார அலையால், அத்தலைவரின் கட்சிக்கு ஆதரவு அளித்துள்ளனர் மக்கள். ஒரு தலைவர் மீது தாங்கள் கொண்டுள்ள நம்பிக்கையை, மக்கள் தங்கள் வாக்குகள் வழியாக வெளிப்படுத்தியுள்ளனர். வெற்றி பெற்ற தலைவரும், அவரது கட்சியினரும், தாங்கள் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளைச் செயல்படுத்தி, மக்கள் நம்பிக்கையைப் பெறுவார்களா என்பதைக் காத்திருந்து பார்க்க வேண்டும். ஆட்சியமைக்கும் தலைவர்கள் வெறும் வார்த்தை விளையாட்டு வீரர்களாக மட்டுமே இருந்துவிட்டால்,
சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல். - குறள் 664
என்று கூறிய வள்ளுவரின் வாக்கிற்கு இவர்கள் மற்றோர் எடுத்துக்காட்டாக மாறுவர்.

இந்தத் தேர்தல் வெற்றியால் இந்தியாவில் நிகழ்ந்துவரும் மாற்றங்களென ஊடகங்கள் கூறும் விளைவுகள், மனதில் பதைபதைப்பை உருவாக்குகின்றன. தனியொரு தலைவருக்கும், அவரது கட்சிக்கும் கிடைத்த வெற்றியால், இந்தியச் சந்தை நிலவரம் பெருமளவில் முன்னேற்றம் கண்டுள்ளது என்பதே ஊடகங்கள் பெரிதுபடுத்தும் செய்தி. இத்தகையச் செய்தி உண்மையிலேயே இந்தியாவை ஒளிர்விக்கும் செய்தியா என்று நம் மனதில் நெருடல்களும், கேள்விகளும் எழுகின்றன.

Times of India இணையத்தளத்தில் இத்திங்கள் வெளியான ஒரு செய்தி, நமது கலக்கத்தை ஆழப்படுத்துகின்றது. "Polls over, now Indians head for summer holiday breaks", அதாவது, "தேர்தல்கள் முடிந்தன, இப்போது இந்தியர்கள் தங்கள் கோடை விடுமுறைக்குச் செல்கின்றனர்" என்ற தலைப்பில் செய்தியொன்று வெளியாகியுள்ளது. இந்தத் தலைப்பில், 'இந்தியர்கள்' என்று குறிப்பிடப்பட்டுள்ளவர்கள் யார்? பல்லாயிரம் ரூபாய் செலவு செய்து கோடை விடுமுறைக்குச் செல்லக்கூடிய செல்வந்தர்கள்! இவர்கள் மே மாதம் 16ம் தேதி வரை தங்கள் விடுமுறையைத் தள்ளிவைத்தனர் என்பதை இச்செய்தி பெருமையாகக் கூறுகிறது. இவர்கள் ஏன் தங்கள் விடுமுறையைத் தள்ளிவைத்தனர்? ஓட்டுப் போடுவது, ஒவ்வொரு இந்தியரின் கடமை என்பதால், கோடை விடுமுறையைத் தள்ளிவைத்தனர் என்ற கோணத்தில் சிந்திக்கும்போது, மனதுக்குப் பெருமையாக உள்ளது. ஆனால், இவர்கள் ஓட்டுப் போடுவதற்காக மட்டும் தங்கள் விடுமுறையைத் தள்ளிவைக்கவில்லை; தங்கள் ஓட்டுப் பதிவால், அவர்கள் எதிர்பார்த்த முடிவுகள் வரவேண்டும் என்ற கருத்தில் தங்கள் விடுமுறையைத் தள்ளிவைத்தனர்.
அவர்கள் எதிர்பார்த்த முடிவுகள் வெளியானதால், அதாவது, அவர்கள் எதிர்பார்த்த கட்சி வெற்றிபெற்றதால், அதுவும் எதிர்பாராத மாபெரும் வெற்றிபெற்றதால், தங்கள் வங்கியிருப்பு, சொத்துக்கள் அனைத்தும் இனி பாதுகாப்பாக இருக்கும் என்ற நிம்மதியுடன் அவர்கள் தங்கள் கோடை விடுமுறைக்குச் செல்கின்றனர் என்ற உண்மையை, இச்செய்தியின் வரிகளுக்கு இடையே நாம் வாசிக்க முடிகிறது.
இவ்விதம், இத்தலைவரும் இவரது கட்சியும் வெற்றி பெற்றதால், பங்குச் சந்தை வலுவான நிலையை அடைத்ந்துள்ளது என்றும், செல்வந்தர்கள் மகிழ்வுடன் உள்ளனர் என்றும் ஊடகங்கள், நேரடியாகவும், மறைமுகமாகவும் கூறிவருவது, நம்மை, கேள்விகளால், நெருடல்களால் நிறைக்கிறது. இத்தகைய நெருடல்கள், கேள்விகளோடு இன்றைய விவிலியத் தேடலை நாம் துவக்குகிறோம்.

தலைவர், மக்கள், ஆர்வம் என்று இந்தியத் தேர்தலைக் குறித்து நாம் பகிர்ந்துகொண்ட எண்ணங்கள், 'மினா நாணய உவமை'யின் ஆரம்ப வரிகளுக்கு நம்மை அழைத்துச் செல்கின்றன.
லூக்கா நற்செய்தி 19: 11
இயேசு எருசலேமை நெருங்கி வந்துகொண்டிருந்தார். அவர் சொன்னதைக் கேட்டுக்கொண்டிருந்தவர்கள் இறையாட்சி உடனடியாகத் தோன்றப்போகிறது என்று நினைத்தார்கள். அப்போது இயேசு மேலும் ஓர் உவமையைச் சொன்னார்:
என்று இவ்வுவமையின் ஆரம்ப வரிகள் கூறுகின்றன. ஒரு சில மொழிபெயர்ப்புக்களில், இந்த அறிமுக வரிகள் பின்வருமாறு காணப்படுகின்றன:
"இயேசு எருசலேமை நெருங்கி வந்துகொண்டிருந்ததாலும், அவர் சொன்னதைக் கேட்டுக்கொண்டிருந்தவர்கள் இறையாட்சி உடனடியாகத் தோன்றப்போகிறது என்று நினைத்ததாலும், இயேசு மேலும் ஓர் உவமையைச் சொன்னார்."
இந்த மொழிபெயர்ப்பு கூடுதல் பொருளுள்ளதாகத் தெரிகிறது. அதாவது, இயேசு இவ்வுவமையைச் சொல்வதற்கு இரு காரணங்கள் இருந்தன என்பதை இந்த மொழிபெயர்ப்பு தெளிவுபடுத்துகிறது. அக்காரணங்கள் யாவை?
1. இயேசு எருசலேமை நெருங்கி வந்துகொண்டிருந்தார்.
2. அவரைச் சூழ்ந்திருந்த மக்கள், இறையாட்சி உடனடியாகத் தோன்றப்போகிறது என்று நினைத்தனர்.

இயேசுவோடு எருசலேம் நோக்கிப் பயணித்த மக்கள் கூட்டத்தை நாம் சற்று கற்பனை செய்து பார்ப்போம். அவரைச் சூழ்ந்த மக்கள், 'ஒருவரையொருவர் மிதிக்கும் அளவுக்கு ஆயிரக்கணக்கில் திரண்டு வந்தனர்' (லூக்கா 12:1) என்று லூக்கா நற்செய்தியின் மற்றொரு பகுதியில் நாம் காண்கிறோம். ஆயிரக்கணக்கான மக்கள், கூட்டமாய்த் திரளும்போது, அங்கு கட்டுக்கடங்காத உணர்வுகள் எழ வாய்ப்புண்டு. அவை நேர்மறையான உற்சாகம், மகிழ்வு ஆகிய உணர்வுகளாக இருக்கலாம், அல்லது, எதிர்மறையான, கோபம், வெறுப்பு என்ற உணர்வுகளாகவும் இருக்கலாம். நேர்மறையோ, எதிர்மறையோ, கூட்டங்களில் உருவாகும் உணர்வுகளில் காரண, காரியங்கள் ஆய்வு செய்யப்படுவது இல்லை. இத்தகையக் கூட்டங்களை நாம் கடந்த 10 மாதங்களுக்கும் மேலாக இந்தியாவில் கண்டோம்.
இயேசுவைச் சுற்றியிருந்த மக்கள் கூட்டத்தின் மனநிலையை நான் இவ்விதம் எண்ணிப் பார்க்கிறேன். அவர்கள் கடந்த பல நாட்களாக, இயேசுவைப் பின்தொடர்ந்து வந்தவர்கள். அவர் சொன்னவை, செய்தவை பலவும், அம்மக்களின் மனதில் நம்பிக்கையை வளர்த்திருக்கவேண்டும்.

எருசலேம் நோக்கி இயேசு மேற்கொண்ட இந்தப் பயணத்தில், இதுவரை அவர் சொன்னவற்றை 12 உவமைகளாகச் சிந்தித்துவந்தோம். இந்த உவமைகள் வழியே அவர் சொல்லவந்த பிறரன்பு, நம்பிக்கை தளராமல் செபிப்பது, விருந்து நேரங்களில் சமத்துவத்தை உறுதி செய்தல், செல்வங்கள் நிலையற்றவை என்ற பல உயர்ந்த கருத்துக்கள் மக்களை ஆழமாகப் பாதித்திருக்கவேண்டும்.
அத்துடன், இயேசு இந்தப் பயணத்தில் ஆற்றிய புதுமைகளும், செயல்களும் அவர்களை வியப்படைய வைத்திருக்கும், இயேசுவின் மீது இன்னும் ஆழ்ந்த ஈர்ப்பை உருவாக்கியிருக்கும்.
இப்பயணத்தின்போது இயேசு ஆற்றிய ஒரு சில புதுமைகள் இதோ:
18 ஆண்டுகள் தீய ஆவி பிடித்து உடல் நலம் குன்றியிருந்த ஒரு பெண்ணை, குணமாக்கினார். (லூக்கா 13: 10-13)
பரிசேயர் தலைவர் வீட்டில், நீர்க்கோவை நோயுள்ள ஒருவரை குணமாக்கினார் (லூக்கா 14: 1-4)
இவ்விரு புதுமைகளையும், அவர் ஒய்வு நாளில் செய்ததால், ஒரு முக்கியச் செய்தியையும் மக்கள் உள்ளத்தில் இயேசு பதித்தார். மக்கள் படும் துன்பங்களைத் தீர்ப்பதில், ஒய்வு நாள் சட்டங்களை மீறலாம் என்ற சுதந்திரத்தை இயேசு அளித்தார்.
இதுமட்டுமல்லாமல், தொழுநோயால் தீட்டுப்பட்டு, சமுதாயத்திலிருந்து விலக்கி வைக்கப்பட்டிருந்த 10 பேரை இயேசு குணமாக்கினார். (லூக்கா 17: 11-14)
பார்வையற்ற ஒருவரை குணமாக்கினார் (லூக்கா 18: 35-43); சிறு குழந்தைகளை ஆசீர்வதித்தார் (18: 15-16); இறுதியாக, வரிதண்டுபவர் தலைவரான சக்கேயுவை மனம் மாற்றி, வாழ்வளித்தார் (லூக்கா 19: 1-10)

இயேசு தன் சொல்லாலும், செயலாலும் மக்கள் மனதில் அரியணை கொண்டார். எனவே, அவர் எருசலேம் நகரை அணுகி வந்தபோது, அம்மக்கள், 'இத்தகைய ஒருவர் தங்கள் மன்னராகக் கூடாதா? உரோமைய அடக்கு முறைகளிலிருந்து தங்களை விடுவிக்கக் கூடாதா?' என்ற ஏக்கத்துடன் அவரைத் தொடர்ந்து வந்தனர் என்று நாம் இம்மக்கள் கூட்டத்தின் மனநிலையைக் கற்பனை செய்து பார்க்கலாம்.

ஒரு தலைவரின் சொற்கள், செயல்கள் ஆகியவற்றால் பெரிதும் ஈர்க்கப்பட்டு, அவரை அதிகம் நம்பும் மனிதர்களை, மகுடியின் நாதத்திற்கு கட்டுப்பட்டு ஆடும் நாகப்பாம்பாக நாம் உருவகித்துப் பார்க்கலாம். இத்தகைய மயங்கிய நிலையை இந்தியத் தேர்தல் பிரச்சார நேரங்களில் நாம் பார்க்க முடிந்தது. மத உணர்வுகளைத் தூண்டிவிட்டு, அவற்றையே மூலதனமாக்கி இன்று ஆட்சியில் அமரவிருக்கும் இந்தத் தலைவரால், இந்தக் கட்சியால் மக்களின் பிரச்சனைகள் அனைத்தும் தீரும் என்ற எதிர்பார்ப்பு, கடந்த வெள்ளி முதல் உற்சாக வெள்ளமாகப் பெருகியுள்ளது. மக்களின் 'கண்மூடித்தனமான' உற்சாகத்தை, தலைவர்கள் பலர் தங்கள் சுயநலனுக்காகப் பயன்படுத்திக் கொள்வதை நாம் அரசியல் வரலாற்றில் அடிக்கடி பார்த்திருக்கிறோம்.
இத்தகையச் சுயநலத் தலைவர்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டதொரு தலைவர் இயேசு. தன சொற்களால், செயல்களால் ஈர்க்கப்பட்டு, தன்னைச் சுற்றி திரண்டிருந்த மக்கள், தன்னை ஒரு மன்னனாகக் கற்பனை செய்து பார்ப்பதையும், தான் எருசலேமில் நுழைவதை, ஒரு மன்னனின் வருகையாக அவர்கள் காண விழைவதையும் இயேசு உணர்ந்தார். அவர்களிடம் எழுந்த அளவற்ற, ஆதாரமற்ற ஆர்வத்திற்கு ஒரு சவாலாக அவர் 'மினா நாணய உவமை'யைக் கூறி, அவர்களை விழித்தெழச் செய்தார். அவர்கள் எதிர்பார்ப்பதுபோல் இறையாட்சி உடனே வந்துவிடாது என்பதையும், அந்த ஆட்சியில் பங்கேற்க ஒரு சில தேவைகள் உள்ளன என்பதையும் தெளிவுபடுத்த, இயேசு இந்த உவமையைச் சொன்னாரோ என்று எண்ணத் தோன்றுகிறது.

இயேசு கூறிய இவ்வுவமையில் நாம் இன்னும் ஆழம் காண, அடுத்தவாரம் நம் தேடலைத் தொடர்வோம். இதற்கிடையே, இந்தியாவில் கடந்த சில நாட்களாக கரைபுரண்டு ஓடும் ஆர்வ வெள்ளம் ஆணை போடப்பட்டு, அந்த ஆர்வம், இந்தியாவைக் கட்டியெழுப்பும் உண்மை ஆர்வமாக தலைவர்களிடமும், தொண்டர்களிடமும் மாறவேண்டும் என்று இறைவனை உருக்கமாக மன்றாடுவோம்.








All the contents on this site are copyrighted ©.