2014-05-19 15:51:09

வாரம் ஓர் அலசல் – பன்மைத்தன்மையை மதிப்போம்(World Day for Cultural Diversity, May 21)


மே,19,2014. RealAudioMP3 அமெரிக்க ஐக்கிய நாட்டில் நிறவெறி தலைவிரித்தாடிய காலம் அது. வெள்ளையர், கறுப்பர் என்ற பாகுபாடு நாட்டையே நாசம் பண்ணிக்கொண்டிருந்த நாள்கள் அவை. ஒரு நாள் அப்போதைய அரசுத்தலைவர் தியோடர் ரூஸ்வெல்ட் ஒரு கோச் வண்டியில் பயணம் செய்துகொண்டிருந்தார். எதிரில் வந்த ஒரு கறுப்பு இன ஆப்ரிக்கர், அரசுத்தலைவரைக் கண்டவுடன் தனது தலையிலிருந்த தொப்பியை எடுத்து மரியாதை செய்தார். உடனே அரசுத்தலைவர் ரூஸ்வெல்ட்டும் பதிலுக்கு மரியாதை செய்தார். அப்போது அரசுத்தலைவருடன் வந்த நபர் கோபத்துடன், நாம் வெள்ளையர்கள், அவன் ஒரு கறுப்பன். அவன்தான் நமக்கு மரியாதை செய்ய வேண்டும். நீங்கள் ஏன் பதில் மரியாதை செய்ய வேண்டும் என அரசுத்தலைவரிடம் கேட்டார். அதற்கு அரசுத்தலைவர் ரூஸ்வெல்ட் அமைதியாகச் சொன்னார் : “ஒரு கறுப்பருக்குத் தெரிந்த மரியாதை, ஒரு வெள்ளையருக்கும் தெரியும் என்பதை உணர்த்தத்தான்” என்று. அன்பு நெஞ்சங்களே, நல்ல பண்பாடு கெட்டவரையும் மாற்றும் எனச் சொல்வார்கள். இந்தமாதிரியான நல்ல பண்பாடுதான் இன்றைய சமூகத்துக்கு அதிகம் தேவைப்படுகின்றது.
இன்று உலகம் ஒரு சிறிய கிராமமாகி விட்டதெனச் சொல்கிறோம். உலகின் ஒரு மூலையில் நடப்பது அடுத்த நொடிப்பொழுதிலேயே உலகெங்கும் தெரிந்து விடுகின்றது. அந்த அளவுக்கு அறிவியலும் தொழில்நுட்பமும் வளர்ந்துள்ளன. கையடக்கக் கைபேசிகளில் ஒரு நாளில் உலகத்தையே சுற்றி வந்துவிடலாம். இந்தியாவில் பொதுத் தேர்தல்கள் விறுவிறுப்பாய் நடந்துகொண்டிருக்கின்றன. இவை பற்றிய நிலவரங்கள், பன்னாட்டு ஊடகங்களில் உடனுக்குடன் வெளியிடப்படுகின்றன. பூமிக்கோளத்தின் ஒரு முனையில் நடப்பது அடுத்த முனையில் இருப்பவர்களுக்கு அடுத்த விநாடியே தெரிந்து விடுகின்றது. ஆப்ரிக்காவுக்குச் சென்றால் ஆசியப் பொருள்கள் கிடைக்கின்றன. இரஷ்யாவுக்குச் சென்றால் ஆப்ரிக்கப் பொருள்கள் கிடைக்கின்றன. எல்லா நாடுகளிலும் எல்லா நாடுகளின் பொருள்களையும் இன்று பார்க்க முடிகின்றது. கையில் காசு இருந்தால் எந்தப் பொருளையும் எந்த நாட்டிலும் வாங்கலாம் என்ற நிலை இன்று. பொருள்கள் மட்டுமல்ல, மனிதர்களும் அப்படியே. இத்தாலியில் எங்கு சென்றாலும் ஏறக்குறைய எல்லா நாட்டினரையும் சந்திக்க முடிகின்றது. இதேநிலைதான் மற்ற நாடுகளிலும். ஆனால் ஒரு நாட்டிலுள்ள மற்ற நாட்டவர் எவ்வளவுதூரம் ஏற்றுக்கொள்ளப்படுகின்றனர், ஒரு நாட்டு மக்களின் கலாச்சாரம் அடுத்த நாட்டில் அங்கீகரிக்கப்படுகின்றதா?, ஒரு நாட்டின் கலாச்சாரத்தோடு பின்னிப்பிணைந்த சமய நம்பிக்கை அடுத்த நாட்டில் மதிக்கப்படுகின்றதா? என்பன போன்ற கேள்விகளை கேள்விக்குறியுடனே விட்டுவிடுகிறோம். கிறிஸ்தவர்கள், விவிலியத்தை வைத்திருந்தால்கூட சில நாடுகளில் துன்புறுத்தப்படுகிறார்கள், விலியத்தை வைத்திருப்பதற்கு அனுமதிக்கப்படுவதில்லை என, கடந்த மார்ச் 4ம் தேதி காலை திருப்பலியில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கவலையோடு குறிப்பிட்டார்.
ஒரு நாட்டு மக்கள், அடுத்த நாட்டின் கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் மதித்து வாழ்ந்தால்தான் இன்று உலகில் அமைதி நிலவும், முன்னேற்றம் ஏற்படும். ஏனெனில் பல்வேறு துறைகளில் ஒவ்வொரு நாடும் அடுத்த நாட்டை நம்பி வாழவேண்டிய கட்டாய நிலை இன்று ஏற்பட்டுள்ளது. சில நாடுகளின் எண்ணெய் வளத்தை நம்பி பல நாடுகள் இருக்கின்றன, அதேசமயம் எண்ணெய் வளமிக்க நாடுகள் மற்ற பொருள்களுக்கு பிற நாடுகளைச் சார்ந்து இருக்கின்றன. ஆதலால் பல்வேறு கலாச்சாரங்களைப் புரிந்துகொண்டு அவற்றை ஏற்று வாழ வேண்டியது இன்றைய காலத்தின் தேவையாக உள்ளது. கலாச்சார பன்மைத்தன்மை மற்றும் நல்லிணக்க வாழ்வின் முக்கியத்துவத்தை மக்கள் கற்றுக்கொள்வதற்கு உதவும் நோக்கத்தில், ஒவ்வோர் ஆண்டும் மே 21ம் தேதி, உரையாடல் மற்றும் வளர்ச்சிக்கான உலக கலாச்சார பன்மைத்தன்மை நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. கலாச்சார பன்மைத்தன்மையை எடுத்துச்சொல்லும் நிகழ்ச்சிகள், இந்நாளில் சிறாருக்கும், இளம் வயதினருக்கும் கற்பிக்கப்படுகின்றன. பல இனக் குழுக்களுக்கும் மற்ற நிறுவனங்களுக்கும் இடையே ஒத்துழைப்புகளும் இந்நாளில் ஊக்குவிக்கப்படுகின்றன. இப்புதனன்றும், பள்ளிகள், கல்லூரிகள், பொது அலுவலகங்கள் போன்றவற்றில் பல்வகை கலாச்சாரங்களை மதிக்க வேண்டியது குறித்த விழிப்புணர்வு நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.
2001ம் ஆண்டு நவம்பர் 2ம் தேதி பிரான்சின் பாரிசில் கலாச்சார பன்மைத்தன்மை குறித்த உலகளாவிய அறிக்கையை யுனெஸ்கோ என்ற ஐ.நா.வின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார நிறுவனத்தின் பொது அவை ஏற்றுக்கொண்டது. பல ஆண்டுகள் இதற்காக வேலை செய்ததன் பயனாக இந்த நிகழ்வு நடந்தாலும், 2001ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதியன்று நியுயார்க் இரட்டைக் கோபுரம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு உள்ளானதையடுத்து இது அறிவிக்கப்பட்டது. பாகுபாடுகள், அடிப்படைவாதம் ஆகியவற்றைத் தடுப்பதற்கு கலாச்சாரங்களுக்கிடையே உரையாடல் தேவை என்பதை இந்த அறிவிப்பு மீண்டும் உறுதி செய்தது. 2002ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் கலாச்சாரப் பாரம்பரிய ஆண்டாக இருந்தது. அந்த ஆண்டின் இறுதியில் டிசம்பர் 20ம் தேதி ஐ.நா.பொது அவை, மே 21ம் தேதியை உரையாடல் மற்றும் வளர்ச்சிக்கான உலக கலாச்சார பன்மைத்தன்மை நாளாக அறிவித்தது. இந்நவீன உலகில் கலாச்சார பன்மைத்தன்மையைப் பாதுகாக்கவேண்டியது, கலாச்சாரங்களுக்கு இடையே உரையாடலின் முக்கியத்துவம் இவற்றுக்கிடையேயுள்ள தொடர்பு ஆகியவற்றை ஐ.நா.பொது அவை வலியுறுத்தியது. அதன்படி இந்த உலக நாள் 2003ம் ஆண்டில் முதன்முறையாக கடைப்பிடிக்கப்பட்டது.
தங்களுக்கென பொதுவான மொழி, பாரம்பரியம், கலாச்சாரம், மதநம்பிக்கை ஆகியவற்றைக் கொண்டிருப்பவர்களை ஓர் இனம் எனச் சொல்லப்படுகிறது. மேலும் அவர்கள் தங்கள் மூதாதையரின் ஒரு பொதுவான மரபுவழியைக் கொண்டிருப்பார்கள். இந்த உலகம் பல்வேறு இனக்குழுக்களைக் கொண்டுள்ளது. வட அமெரிக்காவை மட்டும் எடுத்துக்கொண்டால், பூர்வீக அமெரிக்கர்கள், இலத்தீன் அமெரிக்கர்கள், கவ்காசியர்கள், ஆப்ரிக்காவைப் பூர்வீகமாகக் கொண்ட கறுப்பர்கள், ஆசியர்கள், மத்திய கிழக்கு அராபியர்கள், யூதர்கள் என பல இனத்தவர் வாழ்ந்து வருகின்றனர். இன்று உலகில் 130 கோடிக்கு மேலான எண்ணிக்கையைக் கொண்டு பெரிய இனக்குழுவாக உள்ளவர்கள் ஹான் சீனர்கள். ஆப்ரிக்காவில் நூற்றுக்கணக்கான இனக்குழுக்கள் தங்களுக்கென ஒரு மொழி, ஒரு கலாச்சாரம், மத நம்பிக்கை போன்றவற்றைக் கொண்டுள்ளன.
உலக வரலாற்றில் அவ்வப்போது இன அழிவுகள் ஏற்படுவதை வரலாறு பதிவு செய்துள்ளது. 20ம் நூற்றாண்டை எடுத்துக்கொண்டால் ஜெர்மனியின் நாத்சிக் கொள்கையாளர்களால் 6 இலட்சத்துக்கு மேற்பட்ட யூத இனத்தவர் கொல்லப்பட்டனர். ருவாண்டாவில் 1994ம் ஆண்டு ஏப்ரல் 7ம் தேதியிலிருந்து ஏறக்குறைய நூறு நாள்கள் இடம்பெற்ற Tutsi மற்றும் Hutu இனங்களுக்கிடையே நடந்த பகைமைக் கொலைகளில் 5 இலட்சம் முதல் 10 இலட்சம் பேர்வரை இறந்தனர். இலங்கையில் உள்நாட்டுப்போரில் இறுதிக்கட்டத்தில் 2009ம் ஆண்டில் எத்தனை தமிழ் மக்கள் கொத்து வெடிகுண்டுகளுக்கும் மற்ற தாக்குதல்களுக்கும் பலியாகினர் என்பது உலகறிந்த உண்மை. இந்த இலங்கை உயிரிழப்புகள் பற்றி அண்மையில் ஒருவர் சொன்னார் : “சரணடையுங்கள், நீங்கள் விசாரணை செய்யப்பட்ட பின்னர் விடுதலை செய்யப்படுவீர்கள் என்று அறிவித்துக்கொண்டே இருந்த இராணுவத்தின் பேச்சை நம்பி நாற்பது பேருந்துகளில் சரணடையச் சென்றவர்கள் திரும்பி உயிரோடு வரவேயில்லை, இவர்களுக்கு மொழிபெயர்ப்பாளராக இவர்களோடு சென்ற ஒரு வயதான தமிழ்க் குருவானவர் உட்பட” என்று. மியான்மாரில் ரோகின்யா இனத்தவர் துயரங்களை எதிர்நோக்குகின்றனர். இவ்வாறு இனஅழிப்புகள் உலகில் ஆங்காங்கே இடம்பெற்று வருகின்றன.
கலாச்சாரங்களின் பன்மைத்தன்மை புரிந்துகொள்ளப்பட்டு எல்லாரும் இவ்வுலகில் நல்லிணக்கத்துடன், சகோதரர்களாக ஒரே இறைவனின் குழந்தைகளாக வாழ அழைக்கப்படுகிறோம் என்ற உணர்வு மேலோங்கினால் மட்டுமே இன அழிப்புகள் நிறுத்தப்படும். ஒருவர் ஒருவரை மன்னித்து பிரச்சனைகளை உரையாடல் மூலம் தீர்த்தால் மட்டுமே இனங்களுக்கிடையே நல்லுறவு வளரும்.
பட்டுப்புழு ஒன்று பட்டுநூலைச் சுற்றிக்கொண்டிருந்தது. அதைப் பார்த்த சிலந்தி, உன்னால்தான் நூல்விட முடியுமா, என்னாலும் முடியும் என்று சொல்லி வலை பின்னி, விறுவிறுவென வேலையை முடித்தது. அருகிலே வெள்ளை நிறத்தில் தனது வீட்டு விலாசத்தையும் எழுதி வைத்தது சிலந்தி. வேலையை முடித்துவிட்டுப் பட்டுப்புழுவைப் பார்த்தது சிலந்தி. அதுவோ இன்னும் நூலை விட்டபடி சுற்றிக்கொண்டே இருந்தது. அப்போது சிலந்தி பட்டுபுழுவிடம், நான் எப்போதே முடித்துவிட்டேன், நீ கால்வாசிகூட முடிக்கவில்லையே, எப்போது முடிப்பாய்? என்று கேட்டது. கூடு கட்டியபடியே பட்டுப்புழு சொன்னது : “சிலந்தி பூச்சியே, என் வலையும் உன் வலையும் ஒன்றா?, உன் வலையின் நோக்கமே பூச்சி பிடிக்கத்தான். அதை மக்கள் நூலாம்படை என்று சொல்லி விளக்குமாற்றால் அடித்துத் துப்புறப்படுத்துவார்கள். ஆனால் என் வலையின் நூலை மக்கள் பத்திரப்படுத்தி பட்டுநூல் என்று போற்றுகிறார்கள். நான் மதிப்போடு உழைக்கிறேன். மதிப்பான பொருளையே தருகிறேன், மதிப்பு என்னில் குடிகொள்கிறது” என்று.
ஆம். எதிலும் நம் நோக்கம் உயரியதாய் இருக்க வேண்டும். அப்படி இருக்கும்போது எல்லாரையும் பாகுபாடின்றி சமமாக மதிப்போம், போற்றுவோம். சிறுவயதிலிருந்தே பிள்ளைகளுக்கு இது கற்றுக்கொடுக்கப்பட வேண்டும். இவர் இந்த சாதி, அதனால் எனது குடும்பத்தில் திருமண உறவுகளை வைக்கக் கூடாது போன்ற பாகுபாட்டு உணர்வுகள் அகன்றுபோகும். எல்லாரையும் மனிதர்கள் என்ற உணர்வோடு நோக்குவோம்.








All the contents on this site are copyrighted ©.