2014-05-19 15:46:35

மே 20,2014 புனிதரும் மனிதரே : இயேசுவுக்காகத் துன்புறத் துணிந்த 12 வயதுச் சிறுவன்( புனித தார்சியுஸ் Tarcisius)


உரோமையில் கிறிஸ்தவர்கள் அடக்குமுறைகளுக்கு உள்ளான காலம் அது. விளையாட்டில் மிகுந்த ஆர்வமிக்கத் தங்களின் நண்பனை அன்றைய நாளில் சகத் தோழர்கள் விளையாட வரும்படி எவ்வளவோ கட்டாயப்படுத்தியும் அவன் மறுத்துவிட்டான். வழக்கமாக மிகுந்த ஆர்வமுடன் விளையாடும் அவன் அன்று விளையாட மறுத்தது மற்ற சிறுவர்களுக்குச் சந்தேகத்தை எழுப்பியது. அப்போது அந்தச் சிறுவர் குழு, அந்தச் சிறுவன் ஏதோ ஒன்றை மறைத்து வைத்திருப்பதைக் கவனித்தனர். எப்படியோ அவன் கிறிஸ்தவன் என்பதைப் புரிந்துகொண்ட அந்தக் குழு கிறிஸ்தவ மறையுண்மைகளை அறிய விரும்பியது. சிறு குழுவாக இருந்த அந்தச் சிறுவர்கள் உடனடியாக பெரிய கும்பலாக மாறினர். பல சிறார் கூடி அந்த சிறுவன்மீது கோபக்கனலை வீசிப் பலமாக அடித்தனர். துவண்டுகிடந்த அந்தச் சிறுவனை மற்றொரு கிறிஸ்தவர் அக்கும்பலிலிருந்து காப்பாற்றி உரோம் அடிநிலக்கல்லறைப் பகுதிக்குத் தூக்கிச் சென்றார். ஆனால் சிறுவன் பலத்த காயமடைந்திருந்ததால் வழியிலே இறந்துவிட்டான். இந்தச் சிறுவன்தான் தார்சியுஸ். இவனுக்கு அப்போது வயது 12. மூன்றாம் நூற்றாண்டில் பேரரசன் வலேரியன் காலத்தில் கிறிஸ்தவர்கள் கொடூரமாய்த் துன்புறுத்தப்பட்டபோது அவர்கள் உரோம் அடிநிலக்கல்லறைகளில் இரகசியமாய்க் கூடி திருப்பலி நிகழ்த்தி, மரண தண்டனை தீர்ப்பிடப்பட்டுள்ள கிறிஸ்தவர்களுக்குத் திருநற்கருணை எடுத்துச் சென்றனர். இதற்கென ஒரு தியாக்கோன் அனுப்பப்படுவார். அன்று யாரும் இல்லாததால், திருப்பலிக்கு உதவும் 12 வயதுச் சிறுவன் தார்சியுஸ் அனுப்பப்பட்டார். திருநற்கருணையை எடுத்துச் செல்லும்போதுதான் அந்தச் சிறார் கும்பல் தார்சியுசை விளையாட அழைத்தது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.