2014-05-17 16:56:10

திருத்தந்தை பிரான்சிஸ் - துன்பங்களை அனுபவிப்பதில்கூட சரியான வழிகளும், தவறான வழிகளும் உள்ளன


மே,17,2014. துன்பம் தன்னிலேயே உயர்ந்த மதிப்பு கொண்டதல்ல, ஆனால், துன்பமெனும் உண்மை நிலையைச் சரியான கண்ணோட்டத்துடன் நாம் ஏற்கவேண்டும் என்பதை இயேசு நமக்குக் கற்றுத் தருகிறார் என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
முத்திப்பேறு பெற்ற Luigi Novarese என்ற அருள் பணியாளரால் துவக்கப்பட்ட, 'சிலுவையின் அமைதிப் பணியாளர்கள் மற்றும் துன்புறுவோரின் சுயவிருப்பப் பணியாளர்கள் மையம்' என்ற அமைப்பின் உறுப்பினர்களை, இச்சனிக்கிழமை காலை, திருப்பீடத்தில் சந்தித்தத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், துன்பங்களையும், வேதனைகளையும் அனுபவிப்பதில்கூட சரியான வழிகளும், தவறான வழிகளும் உள்ளன என்று கூறினார்.
துன்பம் எனும் வாழ்வின் உண்மை நிலையை நம்பிக்கையுடன் ஏற்றுக்கொள்வதே சரியான அணுகுமுறையாக இருக்கும் என்பதையும் எடுத்துரைத்தத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இறைவன் மீது நாம் கொள்ளும் நம்பிக்கையும், அயலவர் மீது நாம் காட்டும் அன்பும் இதில் உதவியாக இருக்கும் என்றும் எடுத்துரைத்தார்.
இவ்வமைப்பினருடன் திருத்தந்தை மேற்கொண்ட இந்தச் சந்திப்பில் கலந்துகொள்ள, 350க்கும் அதிகமான நோயுற்றோர், தங்கள் சக்கர நாற்காலிகளில் திருத்தந்தையைக் காண வந்திருந்தனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.