2014-05-17 16:16:24

உயிர்ப்புக்காலம் 5ம் ஞாயிறு ஞாயிறு சிந்தனை


RealAudioMP3 கடந்த 10 மாதங்களுக்கும் மேலாக, வாக்குறுதிகளும், வசைகளும் ஒலிப்பெருக்கிகள் வழியாகவும், ஊடகங்கள் வழியாகவும் இந்திய மக்களின் செவிப்பறைகளைக் கிழித்துவந்தன. கட்சி மேடைகளில் பேசியவர்கள், கற்பனை இந்தியாவை உருவாக்கி, அங்கு, தாங்கள் வானத்தை வில்லாக வளைப்பதாகவும், கடல் மணலில் கயிறு திரிப்பதாகவும் பேசிவந்தனர்.
மேடைகளை விட்டு கீழிறங்கிவந்த இத்தலைவர்களை, கேள்விகளும், சவால்களும் சந்தித்தபோது, தாங்கள் மேடையில் முழங்கியதற்கு முற்றிலும் மாற்றான கருத்துக்களைக் கூறினர். அரசியல் என்றாலே, அங்கு கொள்கைகளும், நிலைப்பாடுகளும் விலைபேசப்படும் என்பதை நாம் அறிவோம்.

இத்தகைய ஒரு சூழலில், "வழியும், உண்மையும், வாழ்வும் நானே" என்று இயேசு இன்றைய நற்செய்தியில் சொல்வதும், அவர் அந்த வார்த்தைகளைச் சொன்னச் சூழலும் நமக்கு பாடங்களாக அமைகின்றன. குறிப்பாக, போராட்டச் சூழலில், கொள்கைகளை விலைபேசி, நேரத்திற்கு ஒரு நிறம் மாறும் பச்சோந்திகளான அரசியல் தலைவர்களை எண்ணிப் பார்க்கும்போது, இயேசு சொல்லித் தரும் பாடம், ஆழமான ஓர் எச்சரிக்கை பாடமாக நம் மனதில் பதிகின்றது.

இயேசுவின் வார்த்தைகளில் பல, மதம், வழிபாடு என்ற எல்லைகளைத் தாண்டி, நினைவில் பதியக்கூடிய வார்த்தைகளாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. அப்படி, தலைமுறை, தலைமுறையாக மிகவும் பிரபலமான இயேசுவின் வாக்கியங்களில் ஒன்று இன்றைய நற்செய்தியில் ஒலிக்கும் "வழியும், உண்மையும், வாழ்வும் நானே..." என்ற வார்த்தைகள். யோவான் நற்செய்தியில், இயேசு, ஏழு முறை தன்னைப்பற்றி "நானே..." என்ற வாக்கியங்களைக் கூறியுள்ளார். இயேசு கூறிய "நானே..." வாக்கியங்களை ஆராய்ந்தால், அவை, எதிர்ப்புகள், குழப்பங்கள் மத்தியில் இயேசு கூறிய வார்த்தைகள் என்பதை உணரலாம். தன்னைச் சுற்றி போராட்டமும், குழப்பமும் நெருக்கும்போது ஒருவர் 'நான் இப்படிப்பட்டவன்' என்று கூறுவதில் நல்ல பாடங்களைக் கற்றுக்கொள்ள முடியும். இயேசு இன்று அத்தகையப் பாடங்களை நமக்குச் சொல்லித் தருகிறார்.

நம்முடைய வாழ்வைக் கொஞ்சம் திரும்பிப் பார்ப்போம். நமது உண்மையான இயல்பு எப்போது அதிகம் வெளிப்படுகின்றது? எதிர்ப்பு, குழப்பம், போராட்டம் இவை பெருகும்போது நமது உண்மை இயல்பு வெளிப்படும். வாழ்க்கை மிகச் சீராக, சுமுகமாகச் செல்லும்போது, நாம் எதை நம்புகிறோம், எதை நம்புவதில்லை, எது நமது வாழ்வின் அடிப்படை என்ற கேள்விகளெல்லாம் எழாது. ஆனால், போராட்டங்களில், சங்கடங்களில் நாம் சிக்கிக் கொள்ளும்போது, நமது நிலைப்பாடு என்ன, நாம் எப்படிப்பட்டவர்கள் என்பதெல்லாம் முதலில் நமக்குத் தெரிய வரும், பின்னர் இவை பிறருக்கும் தெரிய வரும். உண்மைத் தங்கமும், போலித் தங்கமும் பார்வைக்காக, பத்திரமாக அழகியதொரு கண்ணாடிப் பேழைக்குள் வைக்கப்பட்டிருக்கும்போது, இரண்டும் ஒரேவிதமாய் மின்னும். வேறுபாடு தெரியாது. தீயில் இடப்பட்டால் தான் உண்மைத் தங்கமும், போலித் தங்கமும் உண்மை நிலைகளை வெளிப்படுத்தும்.

"வழியும், உண்மையும், வாழ்வும் நானே"... என்ற இந்த வார்த்தைகளை, இயேசு, அமைதியாக, பெருமை கலந்த ஒரு புன்முறுவலுடன் சொல்லவில்லை. இயேசு இந்த வார்த்தைகளைக் கூறுவதற்கு காரணம்... சீடர்கள் கொண்டிருந்த பயம், கலக்கம், சந்தேகம்... இயேசு, தம் சீடர்களுடன் இறுதி இரவு உணவு உண்டபோது, கலக்கம் கொண்டிருந்த சீடர்களிடம் இயேசு இந்த வார்த்தைகளைச் சொல்கிறார்.

யோவான் நற்செய்தி 14: 1-6
இயேசு தன் சீடர்களிடம் கூறியது: “நீங்கள் உள்ளம் கலங்க வேண்டாம். கடவுளிடம் நம்பிக்கை கொள்ளுங்கள். என்னிடமும் நம்பிக்கை கொள்ளுங்கள். தந்தை வாழும் இடத்தில் உறைவிடங்கள் பல உள்ளன. அப்படி இல்லையெனில், ‘உங்களுக்கு இடம் ஏற்பாடு செய்யப்போகிறேன்என்று சொல்லியிருப்பேனா? நான் போய் உங்களுக்கு இடம் ஏற்பாடு செய்தபின் திரும்பி வந்து உங்களை என்னிடம் அழைத்துக் கொள்வேன். அப்போது நான் இருக்கும் இடத்திலேயே நீங்களும் இருப்பீர்கள். நான் போகுமிடத்துக்கு வழி உங்களுக்குத் தெரியும்என்றார். தோமா அவரிடம், “ஆண்டவரே, நீர் எங்கே போகிறீர் என்றே எங்களுக்குத் தெரியாது. அப்படியிருக்க நீர் போகுமிடத்துக்கான வழியை நாங்கள் எப்படித் தெரிந்து கொள்ள இயலும்?” என்றார். இயேசு அவரிடம், “வழியும் உண்மையும் வாழ்வும் நானேஎன்றார்.

இறுதி இரவு உணவின்போது சீடர்களின் உள்ளக் கலக்கத்திற்குக் காரணம் என்ன? இயேசு அப்போதுதான் அவர்களிடம் இரு பெரும் கசப்பான உண்மைகளைப் பகிர்ந்துகொண்டார். இயேசுவின் மிக நெருக்கமான சீடர்களில் ஒருவர் அவரைக் காட்டிக்கொடுப்பார். அவர்களுக்குத் தலைவன் என்று கருதப்படும் மற்றொரு சீடர், இயேசுவைத் தனக்குத் தெரியாது என்று மறுதலிப்பார். இயேசு கூறிய இரு கசப்பான உண்மைகள் இவை.
உண்மைகள் பொதுவாகவே கசக்கும், அதுவும் நம்பிக்கைத் துரோகம், மறுதலிப்பு என்ற உண்மைகள் பெரிதும் கசக்கும். இந்த உண்மைகளை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவித்த சீடர்களின் மனஉறுதியைக் கட்டியெழுப்பும் நோக்கத்தில் இயேசு வருங்காலத்தைப்பற்றி, வருங்காலத்தில் அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து மீண்டும் வாழப்போகும் தந்தையின் இல்லத்தைப்பற்றி, அந்த இல்லத்திற்கு, தானே வழி என்பதைப்பற்றி பேசுகிறார். இதுதான் இன்றைய நற்செய்தியாக ஒலிக்கிறது.

போராட்டமான, குழப்பமானச் சூழல்களில் முதலில் நம்மைப்பற்றியத் தெளிவு நமக்கு இருந்தால் மட்டுமே, அந்தப் போராட்டத்திற்கு, குழப்பத்திற்கு தீர்வு காணமுடியும். நம்மைப்பற்றியத் தெளிவோ, அல்லது நம்மைப்பற்றிய நம்பிக்கையோ இல்லாமல் போகும்போது, போராட்டங்கள், முதலில், நமக்குள் நம்மைப்பற்றிய அடிப்படைக் கேள்விகளை எழுப்பும். பின்னர், பிறரைப்பற்றியும், கடவுளைப்பற்றியும் கேள்விகளை எழுப்பும். இக்கேள்விகளின் பாரத்தால் நாம் உடைந்து, நொறுங்கிப்போக வாய்ப்பு உண்டு. தம்மையும், சீடர்களையும் சுற்றி எதிர்ப்பும், போராட்டமும் சூழ்ந்து வருவதை நன்கு உணர்ந்த இயேசு, தான் யார், தன் பணி என்ன என்பவை குறித்தத் தெளிவு பெற்றிருந்ததால், தன் சீடர்களிடம் அந்தத் தெளிவை உருவாக்க, இந்த வார்த்தைகளை அவர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்.

தெளிவில்லாத, அரை குறையான வாழ்வினால் நாம் இழப்பது அதிகம். பல நேரங்களில் குழப்பங்களில் தொடர்ந்து வாழ்ந்து அதிலேயே சுகம் காணவும் ஆரம்பித்துவிடுகிறோம். நகைச்சுவையாய் சொல்லப்பட்ட ஒரு கதை இது:
சிறுவன் ஒருவன் ஒரு பெரிய பல்பொருள் அங்காடியில் தன் தாயை விட்டுப் பிரிந்து, ஒரு மூலையில் நின்று அழுது கொண்டிருந்தான். கடைக்கு வந்திருந்த பலரும் அச்சிறுவன் மேல் பரிதாபப்பட்டு, அவனுக்கு மிட்டாய்களைத் தந்து சமாதானம் செய்ய முயன்றார்கள். சிறுவனும் அந்த மிட்டாய்களைப் பெற்றுக்கொண்டான். ஆயினும், தொடர்ந்து அழுதுகொண்டிருந்தான். அப்போது, கடையில் பணி செய்யும் ஒருவர் வந்து, "தம்பி, வா... உன் அம்மா எங்கிருக்கிறார்கள் என்று எனக்குத் தெரியும்" என்றார். சிறுவன், அப்பணிப் பெண்ணைப் பார்த்து, "எனக்கும் அது தெரியும்... ஆனால், இப்போது இப்படி இருப்பதுதான் எனக்கு நல்லது. கூடுதலாய் மிட்டாய்கள் கிடைக்கும்" என்றான்.
வழி தெரியாமல் தொலைந்து விடும் நாம் சிலசமயங்களில் தொலைந்துபோன நிலையிலேயே தங்கிவிட நினைக்கிறோம். இருளுக்குப் பழகிப்போனக் கண்களுக்கு ஒளி உறுத்தலாக இருக்கும். நமக்கு முன் வழியாக, ஒளியாக இறைவன் வந்தாலும், நமக்குச் சங்கடமாகிப் போகும்.

ஒவ்வொருவரும் இரு உலகங்களில் வாழ்கிறோம். நடைமுறை உலகம் என்று நாம் கருதும் இந்த உலகம் ஒருபக்கம்... 1996ம் ஆண்டு, அமெரிக்க ஐக்கிய நாட்டில் Atlanta என்ற நகரில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்றன. அப்போது வெளியான ஒரு விளம்பரத்தில், பின்வரும் வரிகள் பயன்படுத்தப்பட்டன: "நீ வெள்ளிப் பதக்கத்தை வெல்வதில்லை, தங்கப் பதக்கத்தை இழந்துவிடுகிறாய்." (You don’t win the silver medal, you lose the gold.) என்ற இந்த வார்த்தைகள் நமது நடை முறை உலகம் காட்டும் வழி. வெள்ளி போதாது, தங்கம் வேண்டும்; வேண்டும்... இன்னும் வேண்டும் என்று ஆவலைத் தூண்டும் ஓர் உலகம். இந்த ஆவலைத் தீர்க்க, போட்டிகளை உருவாக்கும் உலகம். இந்த உலகில் ஒருவர் வெற்றி அடைய, பல நூறு பேர் தோல்வி அடைய வேண்டும். அடுத்தவரது பலமற்ற நிலைகளைப் பயன்படுத்தி, அவரைத் தோல்வியடையச் செய்வதே வெற்றிக்குச் சிறந்த வழி என்று இங்கு சொல்லித் தரப்படுகிறது. போட்டிகளில் ஊறிப்போன உலகமே நம் உலகம் என்றால், பலர் தோல்விகளிலேயே தங்கள் வாழ்வு முழுவதையும் கழிக்க வேண்டியிருக்கும்.

நல்ல வேளை... மற்றோர் உலகமும் இருக்கிறது. ஆன்மீகத்தை வளர்க்கும் உயர்ந்த கொள்கைகள் நிறைந்த வேறொரு உலகம் இது. இந்த உலகில் போட்டிகள் இல்லை. அடுத்தவரது பலமற்ற நிலைகளைக் கண்டு, அவருக்கு உதவிகள் செய்வதே இங்கு இயல்பாக நடைபெறும் ஒரு செயல். மாறுபட்ட இந்த உலகில், அனைவரும் வெற்றிபெற வேண்டும் என்றே எல்லாரும் பாடுபடுகின்றனர்.
வழியும், உண்மையும், வாழ்வுமாய் இருக்கும் இறைவன் காட்டும் உலகம் இது. இந்த உலகம் பற்றியே இயேசு இன்று நம்மிடம் பேசுகிறார். இந்த உலகில் இறைவனின் இல்லம் உண்டு, அந்த இல்லத்தில் அனைவருக்கும் நல்ல உறைவிடங்கள் உண்டு. அதை அடைய போட்டிகள் தேவையில்லை. அனைவரும் இங்கே குழந்தைகள் என்ற உரிமையுடன் தங்க முடியும்.

இன்றையச் சிந்தனைகளை சில வேண்டுதல்களுடன் நிறைவு செய்வோம். இது மேமாதம். வாழ்வுப் பாதைகளை, பயணங்களைத் தீர்மானிக்கும் நேரம் இது. பலருக்கு வேலை மாற்றம், இடம் மாற்றம், வீடு மாற்றம் என்று பல மாற்றங்களைச் சந்திக்கும் சூழல்கள் எழுந்திருக்கலாம். பல்வேறு பாதைகள் குறுக்கும் நெடுக்குமாக நம் வாழ்வில் தெரியும்போது, இறைவன் சரியான வழியை, சரியான திசையை நமக்குக் காட்டவேண்டும் என்று செபிப்போம்.
பல இளையோர் தங்கள் பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு, அல்லது கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு தங்கள் தொடர் கல்வியை, பணியை, அல்லது வாழ்வின் நிலைகளைத் தீர்மானிக்கும் நேரத்தில் இருப்பார்கள். இந்நேரத்தில், இயேசு கூறும் "வழியும், உண்மையும், வாழ்வும் நானே" என்ற வார்த்தைகள் அவர்களை நல்வழிக்கு, ஒளிமிக்க, உண்மையான வாழ்வுக்கு அழைத்துச் செல்ல வேண்டுமென்று மன்றாடுவோம்.
மாற்றம் வேண்டும் என்பதை, இந்திய மக்கள், தங்கள் வாக்குகளால் சொல்லிவிட்டனர். அவர்கள் எதிர்பார்க்கும் மாற்றங்கள், அனைத்து இந்தியாவுக்கும் நலன் தரும் மாற்றங்கள் உருவாக, புதிய ஆட்சி அமைக்கும் தலைவர்களை, இறைவன், தன் வழி நடத்தவேண்டும் என்று வெகு உருக்கமாக மன்றாடுவோம்.








All the contents on this site are copyrighted ©.